சிகரத்தை நோக்கி-கே.எஸ்.கலை

தமிழ்நாட்டில் இருந்து எனக்கொரு அஞ்சல் வந்திருக்கிறது
நெகிழிப்பை ஒன்றுக்குள்..சீல் வைக்கப் பட்ட நிலைமையில் சற்றே பெரியதாய், வழமையான அஞ்சல்களை விடக் கொஞ்சம் பாராமாய் ஏதோ உள்ளே இருக்கிறது...

அஞ்சல் ஒன்று வந்திருக்கிறது என்றாலே ஒரு புதுவிதமான உணர்வு மனுதுள் விளையாடும்...ஆனால் இந்த அஞ்சலைக் கண்டதும் எனக்கு கொஞ்சம் சிக்கலான மனநிலையாக இருந்தது...சற்றே பதட்டம்.
காரணம் இந்த நெகிழிப் பையால் உறையிடப்பட்டு சீல்வைக்கப் பட்டிருந்தது அஞ்சல்.

இருப்பினும் சுதாகரித்துக் கொண்டு பதட்டம் கலந்த விறுவிறுப்புடன் அந்த நெகிழிப் பையை கத்தரித்து உள்ளிருந்த அந்த அஞ்சலை கையிலெடுத்தேன்..
அஞ்சலுக்குரிய உறை சுற்றிவர கத்தரிக்கப் பட்டு உள்ளே இருக்கும் அஞ்சல் யாதென ஆராயப் பட்டிருக்கின்றது. (பிரித்து மேயப்பட்டிருந்தது)

(நிற்க)

தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது வேறொரு வெளி நாட்டிலிருந்தோ இலங்கைத் தமிழன் ஒருவனுக்கு வருகின்ற, வழமைக்கு மாறான அஞ்சல்களுக்கு வழமையாக வழங்கப்படும் ராஜமரியாதையே இந்த பிரித்து மேய்ந்த கதை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். இது இலங்கைத் தமிழர்கள் மீது அரசாங்கம் அல்லது அரச ஊழியர்கள் காட்டும் அதீத அக்கறையின் வெளிப்பாடு என்பது உங்களுக்குப் புரிந்திருக்கலாம் !

எது எப்படியோ சுற்றிவர கத்தரிக்க வேண்டிய அவசியம் இல்லாதிருந்த அஞ்சலுறையிளிருந்து அந்த அற்புதமான பொக்கிசத்தை வெளியில் எடுத்தேன். உள்ளே என்ன இருக்கும் என்பது உறையின் மேல் எழுதப்பட்டிருந்த அனுப்புனர் விலாசத்தைக் கண்டதும் புரிந்துக் கொள்ளக் கூடியதாய் இருந்தது ! ஒரு அழகிய சஞ்சிகை அது !

பிரமாதமான ஒருநவீன ஓவியத்தை முன்பக்கம் அலங்கரிக்க, இதயம் கவரும் நிறத்தில் முன் பக்கத்தில் எழுதப் பட்டிருக்கின்றது


“மீண்டும் அகரம்”

இது என் மதிபிற்குரியத் தோழர் அகன் அவர்களிடமிருந்து அனுப்பப்பட்ட மிக உயரிய ஒரு அன்பளிப்பு.

சஞ்சிகையின் முன் பக்கத்தை உன்னிப்பாக நோக்கினேன் !
மலர் – 01
இதழ் – 01
ஜூன் – ஆகஸ்ட் 2013
என்ற தகவல்களுடன் “மீண்டும் அகரம்” என்ற சஞ்சிகையின் பெயருக்கு கீழே எழுதப் பட்டிருக்கின்றது ...

“மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதில்லை”

சஞ்சிகையில் உள்ளிருக்கும் உள்ளடக்கங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த ஒரு வாசகமே போதும் என்று சொல்லாமல் சொல்லும் வாசகம் அது !

தோழர் அகன் அனுப்பும் எந்த அஞ்சலையும் கையிலெடுக்கும் போது என்னையறியாமல் ஒரு திமிர் என்னைக் கவ்வும்...என்னை நானே இன்னும் கொஞ்சம் மதிக்க வேண்டும் போலிருக்கும். மீண்டும் புதுவை வரும் போது தோழர் அகனின் அந்த கருப்பு வெள்ளை நிறத்திலிருக்கும் அழகிய தாடியை ஒருமுறை பிடித்திழுத்து பார்க்க வேண்டும் போலிருக்கும்...

அவரின் தேசம் விட்டு தேசம் பாயும் அன்பின் வெளிப்பாடு, அக்கறையின் உச்சம் தான் எவ்வளவு மகத்தானது என்பதை சொல்ல வார்த்தை இல்லை. நான் தளத்தில் நுழைந்து முதலில் சண்டைப் போட்ட மனிதர் தோழர் அகன். இன்று என்னோடு இவ்வளவு தூரம் நெருங்கி என்னை ஒரு மகனாக பார்க்கும் அந்த மாபெரும் குணம் படைத்த மனிதரிடமிருந்து எனக்கு கிடைக்கும் ஊக்கமும் உந்துதலும் அளப்பரியது !
(ஓ.....வேறேதோ பேசத் தொடங்கிவிட்டேன் போலும்...)

சரி..அப்படியே முன்பக்கத்தின் கீழே ஏதோ எழுதிருக்கிறது....என்னவென பார்கிறேன்....சஞ்சிகையின் எழுத்தாளர்கள் பெயர்கள் .....

• கி.ரா
• ம.இலெ.தங்கப்பா
• ஈரோடு தமிழன்பன்
• இளம்பாரதி
• நீதியரசர் தாவீது அன்னுசாமி
• க.பஞ்சு
• பா.இரவிக்குமார்
• தி.அமிர்தகணேசன்
• ராஜ்ஜா
• நாகரத்தினம் கிருஷ்ணா
• சீனு தமிழ்மணி
என்று நீண்டு வந்த மாபெரும் எழுத்தாளர்களின் வரிசையில் இறுதியாய் இருக்கிறது....

பதுளை கலைஞானகுமார் !

என்னால் நம்பவே முடியவில்லை...எனது பெயரா? சஞ்சிகையின் முன்பக்கத்தில் அதுவும் முதலாவது இதழிலேயேவா ? என்னை அறியாத ஒரு பூரிப்பும் பெருமையும் என்னைச் சூழ்ந்துக் கொள்கிறது...! எத்தனயோ பெரிய படைப்பாளிகள் இருக்கும் பட்டியலில் என் பெயரும் இருக்கிறது என்பது ஒரு தேசிய விருது வாங்கிய குதூகலத்தைத் தருகின்றது.
ரொம்ப பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இனம்புரியா நெகிழ்ச்சியாகவும் இருக்கின்றது இந்த விடயத்தைக் கண்டதும்.

இந்த பெருமை மகிழ்ச்சி நெகிழ்ச்சி எல்லாவற்றுக்குமான பரிபூரண சொந்தக் காரர் தோழர் அகன் என்பதை சிரம் தாழ்த்திச் சொல்லிக் கொள்ள வேண்டியது என் கடமை.

நான் எழுதும் “தரமிழக்கும் தமிழிலக்கியம்” என்ற தொடரில் கூடச் சொல்லி இருக்கிறேன்..ஒரு நூல் அல்லது சஞ்சிகை உருவாக்குதல் என்பது எத்தனைப் பெரிய காரியம் என்று. அந்த பணியை ஒரு சிறந்த எழுத்தாளர் குழாத்துடன் இணைந்து தோழர் அகன் ஆரம்பித்திருப்பது மிக மிக பெரிய காரியமே !

தமிழுக்கும் தமிழர்க்கும்பெருமைச் சேர்க்கக் கூடிய இந்த சஞ்சிகையின் உள்ளடக்கம் என்னைப் போலவே உங்கள் அனைவரையும் வரவேற்க்கக் காத்திருக்கின்றது என்பது மிகத் தெளிவான விடயம்.

எனவே எழுத எடுத்துக் கொள்ளும் எந்தவொரு விடயமாக இருந்தாலும் அந்த விடயத்தை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாசித்து பார்த்துவிட்டு “இதற்குமுன் இதுபோலில்லையே” என்ற ஒரு உன்னத உணர்வை உண்டாக்கக் கூடிய வகையில் உங்கள் எழுத்துக்களை எழுதி இந்த மாபெரும் சஞ்சிகையில் உங்களது ஆக்கங்களையும் சேர்த்துக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களுடன் இருக்கும் ஒருவன் என்ற ரீதியில் கேட்டுக் கொள்கிறேன் கொள்ளுகிறேன் அக்கறைக் கலந்த நம்பிக்கையுடன் !

“தரமிழக்கும் தமிழிலக்கியம்” என்ற எனது கட்டுரையில் ஓரிடத்தில் சொல்லியுள்ளேன் ....இணையம் என்பது எங்கள் ஆக்கங்களை பிரசுரிக்க கிடைத்த மிகப் பெரிய ஊடகம் என்று.. இது உண்மை என்பது உங்களுக்குத் தெரிந்தது தான்.. ஆனால் நூல் வழிப் பிரசுரம் என்பது தான் மிகச் சிறந்த பிரசுர ஊடகம் என்பதையும், இலக்கியத்திற்கு சரியான வகையில் உயிர்கொடுக்கும் சாதனம் என்பதையும் நாம் அறிய வேண்டும் !

அந்த வகையில் இங்குள்ள சக படைப்பாளிகள் அனைவரும் சஞ்சிகைப் பற்றிய மேலதிகத் தகவல்களை தோழர் அகன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதுடன்...சஞ்சிகையின் எழுத்தாளர் குழாமிலும் இணைந்துக் கொள்ள முன்வருமாறு பெருமையுடன் வரவேற்கிறேன் !

இந்த சஞ்சிகையில் என்னை இணைத்துக் கொண்டது குறித்து தோழர் அகனுக்கு நான் நன்றிச் சொல்லப் போவதில்லை..ஏனெனில்..இந்த சந்தர்ப்பம் எனக்கு வழங்கப் பட்டிருப்பதாவது - நன்றி சொல்லி முடித்துக் கொள்ளுமளவிற்கு சிறிய காரியமில்லையே !

அகரம்.....தொடர்ந்து உயரும்..சிகரத்தை நோக்கி !

பெருமையும்
மகிழ்ச்சியும் கலந்த மனதுடன் -
இலங்கையிலிருந்து,
கே.எஸ்.கலைஞானகுமார்.

எழுதியவர் : கே.எஸ்.கலை (29-Jul-13, 10:24 am)
பார்வை : 235

மேலே