துர்ப்பிரயோகம்-கே-எஸ்-கலை
![](https://eluthu.com/images/loading.gif)
பள்ளி.....
இன்று பல ஆசிரியர்களுக்கு
இரண்டாம் பொருளோடு
மூன்றாம்பால் உண்ணும்
இலவச மடுவமாகிவிட்டது !
“மாதா பிதா குரு”
தெய்வம் என்பதெல்லாம்
பழமொழியாக மட்டுமே !
புதியன புகுதலும்
பழையன கழிதலும்
மரபென்றாலும் –
என் “புது மொழி” - முற்றிலும்
தணிக்கைச் செய்யப்பட்டு
மனதுக்குள் அந்த ஆசிரியர்களுக்கு
சமர்ப்பணம் செய்யப்படுகிறது
என்னால் !
மாணவப் பயிர்களுக்கு
பசளையிட வேண்டிய ஆசிரியர்கள்,
பிஞ்சுகளை நெருங்குவதே
பசலை நோயுடன் என்றானதே !
ஏடு தொடக்கி
நாடு வளர்க்க வேண்டிய
ஆசான்களே – இந்த
கேடு தொடக்கி
ஓடுவது சகஜமாக !
எப்படி விடியும்
நாளைய உலகம் ?
அறம் தவறிய
ஆசிரியப் பேடிகளின் - பாலியல்
சேட்டைக்கும் வேட்டைக்கும்
பலியாகும் சந்ததிகள் – இன்று
பழகிப் போன சங்கதிகளாய் !
அறியாத பருவத்தில்
ஆசைகளை கிளறிவிட்டு
தெரியாமல் தேன்குடிக்கும்
தப்பாய்ப் பிறந்த பிறவிகளை
பொறுத்துப் போவது தப்பு
அறுத்துப் போவதே சிறப்பு !
பள்ளிகளை
பள்ளியறைகளாக்கி விட்டு
பகுதிநேர வகுப்பு வைத்து
சல்லி தேடி அலையும்
சாத்தான்களாய் ஆசான்கள் !
படித்துக் கொடுப்பவன்
படுத்துக் கெடுப்பவனாய் மாறிப்போக
காமமும், ஆபாசமும்,
பணமும், பண்பாட்டுச் சீரழிவும்
வழிந்தோடும் வடிகால்களாய்
பாடசாலைகள் பரிணமிப்பதை
ஜீரணிப்பதார் ?