உன்னத உறவுகள்

வா என்றவுடன்
வந்து நிற்கின்றாய்..

போ என்று சொல்ல
மனம் என்றும் விரும்புவதில்லை..

ஏன் என்று கேட்காமல்
நீ அழைத்துச் செல்லும் இடத்திற்கு
நான் வந்துவிடுவது தானாகவே நிகழ்கிறது..

என் தனிமைகளை
உடைத்தெறியும் தாரகமந்திரம் நீ..

விழிகளின் ஈரங்களை
உன் வருகையினில் கரைக்கின்றேன்..

வியர்வைகளின் சாரங்களை
விளையாடி தொலைக்கின்றேன்..

உன்னோடு பேசும்
உள்ளங்களை எல்லாம்..
என் மனமும் விரும்புகின்றது.. இந்த வட்டமும் விரிகின்றது..

உறக்கங்கள்
நம் உரையாடல்களில்
அசந்து உறங்கிப் போகின்றன..

அந்த சூரியனும்
நமை எழுப்ப மறக்கின்றது..

படிப்பதும் சுகமே
உன்னோடு கூடிப் படிப்பதென்றால்..

படுத்து
உறங்குவதும் சுகமே
பக்கத்தில் உறங்குவது நீ என்றால்..

எண்ணங்கள் வெவ்வேறு
இருவரின் இரசனைகளும் வெவ்வேறு..

இருந்தும்..
பெரும் வாக்குவாதம் ஏதும் இன்றி
மணங்கள் ஒன்றிவிடுவதுதான் புரிவதில்லை..

ஏனோ
ஒட்டி வாழ முடியவில்லை
என்று வருந்திய நாட்கள் எத்தனையோ..

வேறு வழியின்றி
விட்டுக் கொடுத்துப் போகின்றேன்
உன்னை விட்டுப் பிரியும் தருணங்களில்..

கிடைக்கும்
சந்தர்பங்களில் எல்லாம்
உன்னைப் பார்க்க.. ஓடி வரும் தருணங்கள்..

சொல்லிவிடுகின்றன..
இந்த உறவு எத்தனை உன்னதம் என்று..

நான் தினமும்
வழிபடும் கோவில் உன் வீடு..

அந்த
ஆத்திகமும்
நாத்திகமும்
கலந்தது நம் நட்பு..

எழுதியவர் : வெ கண்ணன் (19-Dec-13, 8:34 pm)
பார்வை : 169

மேலே