கற்பனையில் ஓர் காதல் தோல்வி மீள் பதிவு - வினோதன்
![](https://eluthu.com/images/loading.gif)
என் மடி கண்ட நிலா
ஏமாற்றி எழுந்து
என்னிலன்றி - எங்கோ
பறந்து போகிறது,
நான் உடைந்து போகவே !
கடலென காதல் நிறைந்த
பார்வைகளுக்கு போர்வை
போர்த்தி - கடக்கிறாள்...
எனை சொர்க்கத்திற்கு
கடத்திய அவளே - நரகத்தை
நோக்கி நகர்த்திவிட்டு !
அக்குட்டி உதடுகள்
உதிர்த்த வார்த்தைகள்
என் காதுகள் வழி
நானுண்ணும் எரிபொருள் !
தடித்த வார்த்தைகள்
எறிபொருளாய் தாக்கினால்கூட
தாங்கிகொள்வேன் - மௌனத்தால்
தாக்கிக் கொல்கிறாள் !
தாங்கிக் கொள்கிறேன் !
அவள் பேசாதபோது
ஊமையாகும் உலகம்,
பார்க்காதபோது குருடாக
தவறவில்லை - தவறியும்
தன்வழி இல்லை !
என்னை என்னிலிருந்து
அப்புறப்படுத்தி - என்னை
எனக்கே அந்நியப்படுத்தும்
அநியாயம் இது !
அடித்துவிட்டு
பேச ஆரம்பி...
கோவமெனில்...
உன் பார்வைத் தீண்டல்கள்
படாத நான் - பச்சையம்
பரிச்சயம் ஆகாத
நிழல் நிலத்து நிறமிழந்த
சிறு செடியாய்...!
ஆறெனப் பாயும் - உன்
ஆறுதல்கள் இன்றி...
தாய் பிரிந்த - பிறந்த
குழந்தையாய் நான்...
மாராய் இருக்கவேண்டிய நீ
மாறாக மருகி மருவி
யாரோவாய் நிற்கிறாய்...
வலிகளுக்குள் புதைந்து
செதில்கள் உரிந்தபடி நான் !
நீ வா ராணி - என்று
அடிக்கடி விளிப்பதுண்டு...
என் எல்லா வலிகளுக்கும்
நிவாரணி என்பதால்...
வலிபோக்கிகள் - தரும்
வலிகள் போவதில்லை !
இதைவிடக் கொடுமையாய்
வேறொன்றும் - எப்போதும்
வலிக்கப் போவதுமில்லை !
கோபம் கொழுந்துவிட்டு
எரியுமவள் கண்களினால்
என் வானவில்லின் தூரிகை
கண் முன்னே எரிக்கப்படுகிறது...!
கதறி அழுது - புலம்பித்
திரும்பியபோது தான்
கவனித்தேன் - நரகத்தின்
வாயிற்கதவுகளை !
அனேகமாக - சாகும்முன்
செத்துவிட்ட வலி தரும்
நரகத்திற்கு வழி தரும்
என்னை சடலமாக்க சட்டம்
இயற்றும் - இக்காதலைக்கூட
காதலிக்கிறேன் - கொடியதெனினும்
அவள் கொடுத்த கொடையது !
நாற்புறமும் கிழக்காக்கி
என்வாழ்வை அழகாக்கியவள்...
என் தலையெழுத்தில்
கிறுக்கி - என்னை கிறுக்காக்கி
வீதியோரம் வீசுகிறாள்...!
இவ்வளவு வலிகள்
தந்தவள் - என்னைவிட
அதிகமாக - எனக்காக
துடித்தவள் மட்டுமின்றி
தற்போதும் - எப்போதும்
துடிப்பவள் - அவளால்
வடியும் குருதித் துளிகளில்
என் இதயத்துக் காதல்
இன்றும் உயிரோட்டமாய் !
சபிக்காதீர்கள் அவளை...!
தெரிந்து செய்திருக்க மாட்டாள் !
சொர்க்கத்தையும்
சோற்றோடு கலந்தூட்டி
காதலித்தவளை - வெறுக்க
வேரோடு அறுக்க மனமில்லை !
இருந்துவிட்டும் போகட்டும்
என் இதய எலும்புகளை
எறும்புகள் மெல்லும்வரை...!
தவணை முறையில்
மரணம் வாங்க...
சொர்க்க நரகங்களை
சாகாமல் காண...
இன்றே காதலிப்பீர்...!