சட்டம் என் கையில்
சட்டம் என் கையில்
“ம்ம்.. இன்னியோட எல்லாமே முடிஞ்சுது. இத்தனை காலம்..., எத்தனையோ வேதனையை அனுபவிச்சாச்சு. ஊர் முன்ன குத்தவாளியா நின்னது மட்டுமில்லாம நல்ல வேலையும், சொத்தும் இழந்துட்டோம் இந்த சூறாவளியால். இப்போ இந்த முப்பத்தி எட்டு வயசுலேயே வாழ்க்கை சூனியமா மாறிடிச்சு... அவன் இப்படி மோட்டுவளைய பாத்துகிட்டு பித்து பிடிச்ச மாதிரி இருக்கறத பாக்க முடியாம தான் நான் இங்க வந்துட்டேன். அவனை நான் இப்போ என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த....”
மாமி தன் அம்மாவிடம் பேசுவதை எல்லாம் நான் வீட்டினுள்ளே நுழைந்ததில் இருந்து கேட்டவாறு உடை மாற்றி வந்து எல்லோருக்கும் கொடுக்கும் வரை தொடர்ந்தது, “இந்தாங்க காப்பி குடிங்க.” என்ற கூறி குடுத்துவிட்டு அருகில் அமர்ந்தேன்.
பெருமூச்சுடன் குடித்த காப்பியுடன் தன் சங்கடங்களையும் விழுங்கிய மாமியை பார்க்க தன் பெற்றோர்களும் இவ்வாறு ஒரு காலத்தில் இருந்தது ஞாபகம் வந்தது. கண்டிப்பாக காலம் வெந்த இந்த மனங்களுக்கு மருந்திடும், அதுவே இயற்கையின் நியதி.
“சரி நான் போறேன், அவர் வர நேரம்.” என்று எழுந்து சென்ற மாமியையே பார்த்துக்கொண்டு இருந்த அம்மாவின் மனம் இப்போது இங்கில்லை என்று நன்கு புரிந்தது.
“..ம்ம்ம்.. நல்ல மனுஷங்களுக்கு தான் கடவுள் கஷ்டத்தை குடுக்கறார். நம்ப கவிதாவ வாரி குடுத்துட்டோம், ஆனா அதோட ஒரு சுவடும் இல்லாம அவளோட பணத்துல சந்தோஷமா திரியறான் அவளோட புருஷன். இப்போ வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கற ஏற்பாடு நடக்குது. எந்த மகராசி வந்து கஷ்டப்பட போகுதோ? வரவளாவது அவங்கள நல்லபடியா சமாளிச்சி வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும்.” என்று கூறிக்கொண்டிருந்த அம்மாவின் கையை ஆதரவாக பற்ற...
“நம்ப வீட்டு கதை இப்படினா இந்த மாமியோடது வேற தினுசு....சரி நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்.” என்ற அம்மாவிடம்
“நானும் கீழே போயிட்டு வரேன்” என்றவாறே மாமியின் வீட்டிற்கு சென்றேன்.
“வாம்மா வா. நானே அடை போட்டுட்டு கூப்பிடலாம்ன்னு இருந்தேன். நீயே வந்துட்டே.” என்று வரவேற்றார்.
“மாமா வந்தாச்சா?”
“அவர் வந்துட்டார். இந்த வாரம் வத்சலா வரா. இப்போதான் கூப்பிட்டா. திங்கள்கிழமை இங்க இருந்தே வேலைக்கு போய்ட்டு போவா. அதுனால ஞாயித்துக்கிழமை அம்மாவும் நீயும் இங்கே சாப்பிட வந்துடுங்க.”
“நீங்க கூப்பிட்டாலும் இல்லைனாலும் நான் வந்துடுவேனே... அவர் இன்னும் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டுதான் இருக்காரா?”
“இல்லை. அவன எழுப்பி காப்பி குடுத்தேன். ம்ம்ம் .... அப்படியே உக்காந்தா எல்லாம் சரியாயிடுமா? எல்லாமே சூறாவளியில அடிச்சிகிட்டு போனாலும் இனி அது இந்த பக்கம் வராதுன்னு இருக்கறதே ரொம்ப நல்ல விஷயம். இப்போ புஸ்தகத்தை வெச்சிகிட்டு உக்காந்திருக்கான்.”
“அப்போ சரி நான் அவர பாத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து அகன்றேன்.
“அதுக்குள்ள நான் அடை வேலைய பாக்கறேன்.”
மூடியிருந்த கதவை தட்டி வாசன் அழைத்ததும் நான் சென்றபொது அங்கு கையில் புத்தகத்துடன் இருந்த ஸ்ரீநிவாசனை பார்த்தபோது மனதில் ஒரு வித உணர்வு தோன்றியது, தான் அவனை அரவணைத்து ஆறுதல் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
“என்ன அங்கேயே நின்னுட்ட. வா. நீ கேட்ட புஸ்தகம் இன்னிக்கி லைப்ரரியிலிருந்து கொண்டுவந்திருக்கேன்.” என்று கூறியவனை பார்த்து
“ம்ம் போகும்போது கொண்டுபோறேன். அப்புறம்....” இன்றைய நிகழ்வை என் வாயால் கேட்க ஏனோ தயக்கமாக இருந்தது.
“அப்புறம் என்ன... அம்மாதான் சொல்லியிருப்பாளே. அதுக்குதானே மேலே வந்தா.”
“அம்மாவோட பேசிகிட்டு இருந்தாங்க. நான் கொஞ்சம் முன்னாடிதான் வந்தேன்...”
“ஓஹோ...”
ஒருவித அமைதி நிலவியது... ஆனால் இருவரின் மனமோ அமைதியாக இல்லை.
“எல்லாமே போயிடுத்து...வெறும் சொத்து இருந்து என்ன செய்ய? எப்படியோ அந்த சொத்து எடுத்துகிட்டு சந்தோஷமா இருந்தா சரிதான். இனிமே தர ஒண்ணுமில்லை. எல்லாம் முடிஞ்சா போதும்.... இவ்வளவு நாள் இழுத்த இழுப்புக்கு போயாச்சு.” என்று பெருமூச்சுடன் நிறுத்தியதை பார்க்க சகிக்கவில்லை. என் மனம் கரித்துகொட்டியது, இந்த நிலைக்கு இந்த குடும்பத்தை ஆளாக்கியவர்கள் மீது.
“இனிமே எல்லாம் நல்லதே நடக்கும்”
“எப்போதிருந்து குறிசொல்லும் வேலையில் சேர்ந்த? எனக்கு சொல்லவே இல்லை!”
“ம்ம்ம் இப்போதிருந்து தான். அதான் சொல்லிட்டேனே..முதல் குறி உங்களுக்குதான் தட்சிண தாங்க” என்று கையை நீட்டினேன்.
“ம்ம்ம் என்னடான்னு நினைச்சேன். தந்துட்டா போச்சு..” என்று எழுந்து சென்று சட்டை பாக்கெட்டிலிருந்து கையில் வந்த பணத்தை தந்தவனை பார்த்து
“யாருக்கு வேணும் உங்க பணம்...”
“நீ தானே தட்சணை கேட்ட?”
ஒருகணம் யோசித்தேன், இப்போதே சொல்லவா? வேண்டாம். இன்னும் சரியான நேரம் வரவில்லை. “எனக்கு இது வேண்டாம்.”
“அப்போ என்ன வேணும்?”
“ம்ம்ம்.. ஒருநாள் சொல்லறேன். அப்போ கண்டிப்பா நான் கேட்டதை தரணும்.”
“என்னால முடிஞ்சதை கேளு... வேற ஏதாவது உள்குத்து இருக்கா?”
“நானா...உள்குத்தா? அப்படினா?”
“அடடா... நீ பண்ணறது நேக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அதுதான் எங்கம்மா இருக்காளே எல்லாத்தையும் சொல்லுவா.”
“என்ன மாமி எல்லாமே சொல்லிட்டாங்களா? எல்லாமேவா.....” என்று இழுத்த என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்து
“ஆமாம் எல்லாமேதான். அந்த கோடியாத்துல இருந்தவங்களுக்கு பதில் சொன்னது, கோவில்ல நடந்தது... இன்னும் சொல்லனுமா?”
இதை கேட்டதும் இத்தனையும் தெரிந்தவன் ஒன்றும் அறியாததுபோல் இருந்தது என்னை இக்கட்டில் தள்ளியது. இவன் தான் சண்டைக்காரி என்று நினைத்தானோ? எப்படி கேட்பது... என் தயக்கத்தை பார்த்து
“நீ நடந்துகிட்டது எங்க அம்மாவை தற்காத்தது. அவங்களும் அவங்க கூட்டை விட்டு கொஞ்சம் கொஞ்சமா வெளியவர சகாயமாச்சு. அவங்க உங்ககூட போகும்போது ஒரு பாதுகாப்பா உணர்ந்ததால் தான் நீங்க எங்க கூப்பிட்டாலும் நாங்க போயிட்டு வர அனுப்பறதே. அவங்களுக்கும் ஒரு மாறுதல் வேணுமோனோ? உங்களுக்கு இதுக்கெல்லாம் என்ன கைமாத்தா தரபோறேன்?”
“அப்போ அந்த தக்ஷணையோட இதையும் சேத்துக்கோங்க... நான் வசூல்பண்ண வரும்போது கண்டிப்பா தந்துடுங்க.”
“ரெண்டுபேரும் சாப்பிட வாங்கோ.” என்று மாமி அழைத்ததும் நான் சென்று எல்லாம் சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைக்க உதவினேன்.
அன்று இரவு நான் வாசன் கொண்டுவந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தது தெரியும் ஆனால், படித்துக்கொண்டிருந்த என் மனம் எப்போ வாசனை பற்றி நினைக்க சென்றதோ தெரியவில்லை.
தன் அக்காவின் மரணம் கூடவே தன் தந்தையையும் கொண்டுபோக, எதில் இருந்தோ தப்பிப்பதுபோல் பழைய வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு குடிவந்தது. தான் வேலைக்கு போனால் அம்மா தனியாக இல்லாமல் ஆத்திர அவசரத்திற்கு கீழேயே வீட்டின் உரிமையாளர் இருக்கும் நிம்மதியில் தான் இந்த வீட்டிற்கே வந்தது. ஆனால், இந்த வீட்டின் நபர்களைப் பற்றி தாறுமாறாக காதில் விழுந்தது. ஏதோ தன் அக்காவின் புகுந்த வீட்டினர் செய்த கொடுமைகள் நினைவிற்கு வந்து, தாங்கள் வந்த இடமும் அவ்வாறே என்று நினைத்து அவ்வளவாக அவர்களுடன் பேசாமல் தங்கள் கூட்டினுள் இருந்தனர். படிப்படியாக அவர்களைப்பற்றி தெரிந்ததும் தாங்களே அவர்களுக்கு துணையாக இருப்பது விந்தையாக இருந்தது.
படிப்படியாக வாசனிடம் என் மனம் சாயத்தொடங்கியது... அப்போது சாதகமாக இல்லாமல் இருந்த சூழ்நிலையிலும். இந்த முப்பத்தெட்டு வயதில் தனிமரமாய் நிற்கும் நிலை, எப்படியோ ஒன்பதாண்டுகள் தாக்கிய தாக்குதல் இப்போது நின்றுவிட்டது.
இந்த ஆறுமாதங்களில் பெரிதாக ஒரு மாறுதலும் இல்லாமல் அவரவர் வேலைக்கு செல்வதும் வீடு திரும்புவதுமாக இருந்தது. அம்மாதான் மீண்டும் பல்லவியை பாட தொடங்கினாள், சுருதி பேதமில்லாமல் துணையாக மாமியும் ஒத்து.
“இந்த புரட்டாசி வந்தா முப்பது ஆரம்பிக்கும். இன்னும் நீ எவ்வளவுகாலம் என்னோடேயே இருக்கபோற? நானே உன்னோட கல்யாணத்துக்கு தடையா இருப்பேன் அப்படின்னு நினைக்கல. இப்போ எல்லாத்தையும் தாங்கற சக்தி வந்துடுச்சு! இருக்கறத வெச்சி நான் என்னோட காலத்தை தள்ளிடுவேன். அப்பா மாதிரி நீ மாலையும் கழுத்துமா இருக்கறத பாக்காம நான் உன்ன தனிமரமா விட்டுட்டு போய்டுவேனோ அப்படின்னு பயமா இருக்கு.” என்று புலம்பல் பல்லவியை ஆரம்பித்த அம்மா மூச்சு வாங்க நிறுத்திய அவகாசத்தில் மாமி தொடர்ந்தார்
“அம்மா சொல்லறத கேளு சந்தியா. நாங்கலாம் இருக்கோம், பாத்துக்க மாட்டோமா? உன்னோட எதிர்ப்பார்ப்பு படி நீ புக்காதுல இருந்து அப்பப்போ வந்துட்டு போகலாம், உன்னோட சம்பளத்தில் அம்மாவை பாத்துக்கலாம். இப்போ வத்சலா கொண்டுவந்த இடம் நம்ப நிலைமைய தெரிஞ்சீண்டு அவாளுக்கு சம்மதம்ன்னும், நீங்களும் ஒத்துண்டா வந்து பொண்ணு பாக்க இந்த ஞாயித்துக்கிழமை வரோம்ன்னு சொல்லியிருக்கா. ரொம்ப காலம் கழிச்சி நல்லது நடக்க போறதுன்னு உங்கம்மா நிம்மதியா இருக்கா. நீதான் அந்த நிம்மதிய நிரந்தரமா நிலைச்சி இருக்கற மாதிரி செய்யனும்.”
இனியும் தான் நினைப்பதை தள்ளி போட முடியாது. எப்படியாவது கொஞ்சம் அவகாசம் கேட்டு தான் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து, “எனக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேணும். அதுனால இந்த வாரம் அவங்கள வரச்சொல்ல வேண்டாம்”
“என்னடி இப்போ இத ஒரு சாக்கா சொல்லறியா?” என்று நின்ற பல்லவியை தொடர நினைத்த அம்மாவை மேலே தொடராமல் நிறுத்தி
“இது சாக்கு இல்லை. ப்ளீஸ் கொஞ்சம் அவகாசம் தாங்க. நான் திருமணமே வேண்டாம்ன்னு சொல்லலை.” என்று மேலே அவர்கள் தொடங்கும் முன் அவ்விடம் விட்டு என் அறைக்குள் முடங்கினேன்.
அந்த வெள்ளிக்கிழமை கீழ் வீட்டு மாமி மாமாவுடன் அம்மாவும் கோவிலில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு போய்விட்டு தங்களின் மனபாரத்தை இறைவனிடம் சேர்த்துவிட்டு தம் மக்களுக்கு நல்லது நடக்கவேண்டி பிரார்த்தனைகள் செய்துவிட்டு இரவு நேரம் கழித்தே வருவர் என்று தெரியும். இதுதான் நல்ல சமயம் என்று உணர்ந்து வாசனின் வரவிற்கு காத்திருந்தேன்.
“வாங்க காப்பி குடிச்சிட்டு போங்க. எல்லோரும் கோவிலுக்கு போயிருக்காங்க”
“ஓஹோ.. மறந்துட்டேன். சரி இப்போ வரேன்” என்று வாசன் போனபின்,
அவன் வருமுன் காப்பி தயாரித்து எடுத்துக்கொண்டு வரவும், அவன் வரவும் சரியாக இருந்தது. பொதுவாக பேசியவாறே காப்பி குடிக்கும்போது திடீரென்று “ஏன் வத்சலா சொன்ன வரனை இப்போ வரவேண்டாம் அப்படின்னு சொல்லிட்டே. உங்கம்மாவுக்கும் எங்கம்மாவுக்கும் ரொம்ப வருத்தம், வர நல்ல எடத்தை ஏன் தட்டி கழிக்கற? பெரியவா இதுவரைக்கும் வருத்தப்பட்டது போதும். உனக்கு இன்னும் என்ன வேணும்?” என்று என் முகத்தை பார்ப்பவனைப் பார்த்து
“எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, நீ என்ன சொல்கிறாய்?” என்று உடனே கேட்க முடியுமா?
“என்னோட கதைய இப்போ விடுங்க. நீங்க ஏன் உங்க வாழ்க்கையை பத்தி இன்னும் யோசிக்கலை?”
இக்கேள்வி நினைத்தது போலவே மௌனத்தை உடனடியாக குடிக்கொள்ள செய்தது.
ஒரு பெருமூச்சுடன் “ம்ம்ம்... என்னோடது எல்லாமே முடிஞ்சது. நீ அப்படி இல்லை. அதுதான் நீ எதிர்பாக்கற மாதிரி நல்லவங்களாவும், உன்னோட அம்மாக்கு நீ செய்ய நினைக்கிறதை ஏத்துக்கறவாளாவும் இருக்கா. இந்த சென்னைலையே வீடு. நினைச்சபோ வந்து பாத்துட்டு போகலாம். நாங்க இருக்கோம், பாத்துக்க மாட்டோமா. எப்படி எனக்கு என்னோட அம்மா அப்பவோ அதே மாதிரி உங்க அம்மாவும், நான் இருக்கேன். நீயாவது நல்லா இருக்கணும்.” என்று கூறியவனை பார்த்து என் மனம் நெகிழ்ந்து.
“யாரோ வேண்டாம்டா நீதான் வேண்டும்” என்று கூற வாய்வரை வந்தது.
அவன் தன் பதிலுக்கு காத்திருப்பது தெரிந்தது.
“நீங்க ஏன் உங்க வாழ்க்கையே முடிஞ்ச மாதிரி நினைக்கறீங்க? சுனாமி வந்தாலும் சூறாவளி வந்தாலும் இழந்ததை புனரமைக்கறதில்லையா? இது வாழ்க்கையாச்சே! இருக்கற ஒரு வாழ்க்கையை நாம்பதானே நல்லா அமைசிக்கணும். நடுவுல ஏதோ எதிர்பாராம ஆயிடுச்சுன்னு முற்றுப்புள்ளி வெக்காம, அதை கமாவா போட்டு தொடர வேண்டாமா? நீங்க எத்தனை காலம் சேந்து வாழ்ந்தீங்க? மிஞ்சிபோனா ரெண்டு வருஷம் இருக்குமா? அப்புறம் இந்த ஒன்பது வருஷமா அங்கயும் இங்கயும் அல்லாடி இருக்கறதையும் இழந்துட்டு இருக்கீங்க. தெளிவில்லாத ஆள் வாழ்கை துணையானால் இப்படிதான் ஆகும்ன்னு உங்க வாழ்க்கையே உதாரணம். அதுனால நீங்களும் யோசியுங்க.”
“நான் கேட்டதுக்கு இது பதிலாகாது. நீ உன்னோட வாழ்கையை அமைச்சி உங்க குடும்பத்தோட சந்ததிய கொண்டுபோனா தானே உங்க அப்பா, அக்காவுக்கும் சாந்தியாகும்?”
அக்காவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவம், தன் வாழ்க்கையிலாவது குழந்தை குட்டியோட வாழணும்னு என்று தன் தந்தை தாயிடம் மரிக்கும் தருவாயிலும் வருந்தியது நினைவில் வந்தது. “நம்ப பொண்ண நல்ல இடம்ன்னு கட்டி குடுத்தா, அவங்க அவளோட வருமானத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு, வீட்டு வேலைக்காரியாவும் நடத்தினது மட்டுமில்லாம புருஷன்கூட வாழாம அடுப்படியில படுக்க வெச்சது மட்டுமா? சோறும் போடாமலே கொன்னுட்டாங்க பாவிங்க. பாவி மக சொன்னா நம்ப வருந்துவோம்ன்னு சொல்லாமலே இருந்து இல்லாமையே போய்ட்டா. சின்னவளாவது நல்ல எடத்துல வாக்கப்பட்டு குழந்தை குட்டின்னு சந்தோஷமா வாழறதை பாக்காமயே போய்டுவேனோன்னு இருக்கு” என்று மரணப்படுக்கையில் கிடந்த தந்தை தாயிடம் கூறியதை கேட்ட மனம் வெதும்பியது.
என்னை அறியாமலேயே என் கண்களில் இருந்து வந்த கண்ணீர் வழிந்தது.
“சாரி சந்தியா. நான் உன்ன வருத்தப்பட வைக்க நினைக்கலை. நீ நல்லா வாழனும்னு அக்கறைல சொல்லறேன். நீ எல்லாத்தையும் தெளிவா யோசிச்சி என்ன வேணும் வேண்டாம் அப்படின்னு வெளிப்படையா நடந்துக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். வேலையையும் குடும்பத்தையும் மதிச்சி ரெண்டையும் சரிவர கொண்டுபோறது என்னை உன்ன மதிப்பா பாக்க வெச்சுது. நீ சொன்ன மாதிரி தெளிவில்லாத துணையால என்னோடது மட்டுமில்ல எங்க குடும்பமே வாழ்க்கையை இழந்துடுச்சு. ஒருசில நண்பர்களை தவிர உறவுக்காராவும் நண்பர்களும் எங்களை ஒதுக்கிட்டாங்க.”
மேற்கொண்டு பேச ஆயத்தமான அவனே பேசட்டும் என்று நான் காத்திருந்தேன்.
“எனக்கே தெரியாம என்னோட குழந்தையையும் அழிச்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரியும், தன்னோட வேலைதான் முக்கியம் அப்படின்னு நினைச்ச என்னோட மாஜி பொண்டாட்டியும், அவளோட எல்லா செயலுக்கும் கண்மூடித்தனமாக ஆதரிச்ச அவளோட பெத்தவங்களையும் என்னாலதான் என்ன செய்ய முடிஞ்சது?”
ஒரு டம்ளரில் தண்ணீர் தந்தேன் ஆசுவாசப்படுத்த... குடித்தவன் தொடர்ந்தான்.
“பெண்களுக்கு சாதகமா இருக்கற சட்டத்தால நாங்க அவளை வரதட்சணைகேட்டு கொடுமை படுத்தினதாவும், எங்க அம்மா அப்பா நான், ஏன் என்னோட அக்கா எல்லோரையும் கூண்டுல ஏத்திட்டாங்க. ஊரே எங்களை கேவலமா பேசியும் நடத்தியும் ... ஹப்பப்பா... போதும் பட்டது. இந்த வீடு நான் ஊர்ல இருந்து இங்க மாத்தி வந்தப்ப அவளோட அம்மா அப்பவும் எங்களோடையே இருக்க ஏத்தாமாதிரி மேலயும் கீழையும் இருக்கறமாதிரி வாங்கினேன்.”
“ஆனா என்ன ஆச்சு அவ என்கூடவே வரல. தனக்கு வேலையை விட்டுட்டு வரமுடியாதுன்னு சொன்னா. அது கவர்மெண்ட் வேலைகூட இல்லை. இங்க வந்து வேலை தேடிக்கலாம், அதுவும் அவ படிச்ச படிப்புக்கு இங்க நல்ல வேலை கிடைக்கும்ங்கற நிலைமை. மொதல்ல நீங்க போங்க அப்புறம் வரேன்னு சொன்னா. நாங்க இங்க வரும்போது அவளோட அம்மா வீட்டுலதான் இருந்தா. அந்த சமயத்துலதான் அவ தாயாக போற விஷயமே அவளுக்கு தெரிஞ்சிதுன்னு அப்புறம் சொன்னா. ஆனா முன்னையே தெரிஞ்சிருக்கும்ன்னு இப்போ தோணுது. குடும்பத்தையும் வேலையையும் சரிவர பாலன்ஸ் பண்ண தெரிஞ்சிருக்கணும். அப்படி வேலைதான் முக்கியம்ன்னா எதுக்கு என்னை கல்யாணம் செஞ்சியிருக்கணும்?”
“நீங்க நாக்கு புடிங்கிக்கற மாதிரி கேக்கலையா” என்று எல்லாம் அவன் வாயாலேயே அறிந்துக்கொள்ளும் ஆவலில் கேட்டேன்.
“அவளை மட்டும் எப்படி குத்தம் சொல்லமுடியும்? அவளை அப்படி வளர்த்து எல்லாத்துக்கும் துணையா இருந்த அவள பெத்தவங்களைதான் சொல்லணும். சாமர்த்தியமான வக்கீலும், சாட்சியங்கள் அழிக்கவும், உண்டாக்கவும் தெரிஞ்சவங்களுக்கு எதுவுமே ஏறாது. தெரிஞ்ச டாக்டர் கிட்டபோய் கருவை கலைச்சதால அவங்களால அதை மறைக்க முடிஞ்சிது. நிஜம் தெரிஞ்சும் எங்களால அங்க மெளனமாகதான் இருக்க முடிஞ்சிது. அவங்க ஊர்ல கேஸ் ஃபைல் பண்ணதால ஒவ்வொரு வாட்டியும் கோர்ட்டில் கூப்பிடும்போதெல்லாம் நான் போகவேண்டி வந்ததால முதல்ல இருந்த நல்ல வேலையும் போயிடுத்து. இப்போ இந்த சாதாரணமான கிடைச்ச வேலைல இருக்கறதாயிடுச்சு. எங்க வீட்டுல எல்லோருக்குமே உன்ன பிடிக்கும், உன்னோட குறும்பும், அதேசமயம் பொறுப்பும்தான் எல்லாரையும் கொஞ்ச கொஞ்சமா சகஜநிலைக்கு கொண்டுவந்தது. என்னோட வாழ்கை மாதிரி ஆகாம நீ நல்லபடி வாழனும்னு நல்லா விசாரிச்சு கொண்டுவந்த வரன் இது.” தன் வாழ்வுபோல் ஆகாமல் அவள் நல்லபடி வாழவேண்டும், எப்படியாவது அவளை இப்போது வந்துள்ள வரனை ஏற்க சம்மதிக்க வைக்கவேண்டும் என்று நினைத்தான்.
“நீங்க எல்லோரும் சொல்லறது எனக்கு புரியுது... ஆனாலும்....” எப்படியோ தயக்கத்தை உடைத்து
“எனக்கு ஒருத்தர பிடிச்சிருக்கு...” என்று நிறுத்தினேன்.
ஆச்சர்யமாக பார்த்த வாசன் “அட இப்படி ஒன்னு இருக்கும்னே யாருமே நினைக்கல. முன்னாடியே சொல்லறதுக்கு என்ன? நாங்களே நல்லா நடத்தி வெச்சிருக்க மாட்டோமா?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கியவனை நிறுத்தி
“அப்படியெல்லாம் இல்லை. அவருக்கு எதுவுமே தெரியாது, எனக்குதான் தோணிச்சு...”
“யாருன்னு சொல்லு நாங்க போய் பேசறோம்”
பட்டென்று “நீங்கதான்” என்ற பதிலில் தீயை மிதித்தது போல் பின்வாங்கினான்.
“லூசா நீ, என்னைபோய்.... உன்னோட வயசு என்ன? நான் ஏற்கனவே திருமணமானவன்” என்று அடுக்கிக்கொண்டே சென்றவனையும், அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தவளையும் திடீர் என்று வந்த சந்தியாவின் அம்மாவின் குரல்
“நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருங்க. நான் கடையிலேயே ஒரு பையை விட்டுட்டு வந்துட்டேன். போய் எடுத்துக்கிட்டு வரேன்” என்று பதிலை எதிர் பாராமல் சென்ற அம்மாவையே பார்க்கவைத்தது.
“அம்மா தாங்கள் பேசியதை கேட்டிருப்பாங்களோ? அப்படின்னா எதில் இருந்து?” என்று யோசிக்க வைத்தது. இதுபோல் இனி சந்தர்ப்பம் அமையாது என்று நானே தொடங்கினேன்.
“என்ன வயசு... எட்டு ஒம்பது வயசுதானே? எனக்கு அது பெருசா தெரியலை. நீங்க திருமணமாகி அதால பட்டதெல்லாம் எனக்கு தெரியும். அதோட பாதிப்பு எப்படி இருக்கும்ன்னு எனக்கு புரியும். கஷ்டப்படற பொண்ணுங்க வெளியே சொல்ல மாட்டாங்க, எங்க அக்கா மாதிரி. அப்படியே சொன்னாலும் எல்லோரையும் சட்டம் பாதுகாக்கறது இல்லை. ரொம்ப சிலரையே இந்த சட்டம் காக்குது. சிலர் என்னடானா ஆதாயமா இருக்கற சட்டத்தை “சட்டம் என் கையில்” அப்படின்னு அதை ஆயுதமா ஆக்கி அப்பாவிகளை அழிக்கறாங்க. உங்களோட வாழ்க்கையில நீங்க மட்டுமே இழக்கல, உங்க கதைல ரெண்டுபேருக்குமே நஷ்டக்கணக்கு தான். அவங்களுக்கும் இப்போ முப்பத்தியாறு வயசாயிடுச்சு. இளமை காலம் முடிஞ்சாச்சு. உங்க சொத்தும் அவங்கள எத்தனை நாள் சந்தோஷமா வெச்சியிருக்கும்? அவங்களுக்கு ஏத்தாமாதிரி அடுத்த வாழ்க்கை துணை கிடைக்குமா? இல்லை வேலை வேலை அப்படின்னு இப்போ இருந்துட்டு பின்னாடி வருந்தறமாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்? யோசிச்சி சொல்லுங்க. என்னோட வாழ்க்கை உங்களோட இணைஞ்சா நல்லா இருக்கும்ன்னு நம்பிக்கை இருக்கு. நம்ப ரெண்டுபேருமே ஒருத்தர் ஒருத்தருக்கு துணையா ஆதரவா இருந்து நம்பள சுத்தி இருக்கற நம்ப உறவுகள் இதுவரை பட்ட வேதனைகளை போக்க அருமருந்தாக இருக்க ஆசைபடறேன். நான் சொல்லறது எதுவுமே நியாயமா இல்லைனா சொல்லுங்க...”
“என்கிட்ட என்ன இருக்கு? ஒண்ணுமேயில்லை. ஆனாலும்கூட.. என்று தயங்கியவனை பார்த்து
“என்ன நான் உங்க ஜாதி இல்லைன்னு யோசிக்கறீங்களா? முதல் திருமணம் ஒரே ஜாதியா பாத்துதானே செஞ்சது? நம்ப ரெண்டு குடும்பமும் எதிர்க்கொண்ட அடியில மேல் பூச்சா இருக்கற ஜாதி உதிர்ந்திருக்கும். இப்போ அதுக்குள்ள இருக்கற மனிதன், மனிதம் தான் தெரியும். அதுதான் வேண்டும். நாம்ப பேசிப்பாப்போம். புரிஞ்சிப்பாங்க. என்ன சொல்லறீங்க?”
அவன் பதில் சொல்லும் முன் மாமி மாமா மற்றும் அம்மாவின் குரல்கள் ஒருசேர “எங்களுக்கு சம்மதம்.” என்று சந்தோஷத்தில் ஆனந்தமாக திருப்தியுடன் கூவின.
“ரெண்டு பேருமே பேசி ஒரு முடிவுக்கு வாங்க” என்று கையில் இரண்டு கேசரி கிண்ணங்களை திணித்துவிட்டு சென்றனர்.
“என்ன இன்னும் யோசனை? இப்போ தட்சிண தாங்க, அன்னிக்கே தரவேண்டியது” என்று கூறிய என்னைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன், இவ்வளவு நாள் அழுத்திய துக்கம் விலகும் என்ற நிலையில் அவனே அறியாமல்
“தட்சிணயா என்ன தரட்டும்?” என்று கண்ணடித்தவனைப் பார்த்து
“உங்களையே” என்று கூறி உனக்கு நான் சளைத்தவளில்லை என்று புரியவைத்தேன்.
ஒருமணிநேரம் கழித்து நாங்கள் இருவரும் எங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் எதிர்காலம் எங்களுக்காக வைத்திருக்கும் சுகதுக்கங்களை சேர்ந்து அனுபவிக்க தயாராக கீழே சென்றோம்.
எங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வழிய, மனநிம்மதியுடன் வாய்வார்த்தையின்றி எங்கள் தலையில் கைவைத்தும், கட்டிப்பிடித்தும் ஆசீர்வாதத்தையும் சந்தோஷத்தையும் பகிர்ந்தது ஒன்றிணைந்த எங்கள் குடும்பம்.