விரல்களைத் தேடி பொங்கல் கவிதைப் போட்டி
உயிர்த்துளியின் கடைசிச் சொட்டோடு...
என் இனத்தோடு பேசுகிறேன் நான்.
காடாகிவிட்ட நிலப் பரப்பில்...
உலவும் மிருகங்களுக்குக் கேட்காத குரலில்.
கோடை முடிந்து மழை துவங்கும் என்றோ...
வசந்த ருதுவின் வாசம் வீசும் என்றோ...
என்னால் உங்களிடம் பொய் சொல்ல முடியாது.
எங்கும் பாலைக்குப் பருவங்கள் இல்லை.
புரண்டாடிய பெரு நிலத்தில் உயிர்த்திருந்தது
உறவுகள்...தேவாரம் திருப்பண்ணாய் இசைத்தபடி.
நீந்திக் களித்த நீர்மையை...படித்த சாலைகளை
துடைத்து எறிந்திருந்தது காலம்.
இப்போது வானம் இல்லை...
ஆகாயத்தின் அழும் கண்களாய் என்சொற்கள்.
தூசியாய்க் கலைந்த வாழ்வின் சித்திரங்கள்..
கனவுகளோடு காத்திருக்கிறது உங்கள் நிலங்களில்.
களவாடப்பட்ட பொழுதாய் என் கனாக் காலங்கள்.
என்றாலும்...கலையாது என் கனவுகள்.
நீளும் விரல்கள் நீந்துகின்றன...திசையற்று...
நம்பும் காலத்தோடு..உங்களின் விரல்களைத்தேடி.