துயரத்தின் கண்ணீர்
ஒரு மழை இரவு...
உறக்கம் பிடிபடாமல்,
கிடக்கிறேன் நான்..
யாரும் இல்லாத தனியறையில்,
கொட்டிக் கிடக்கும் இரவையே,
எவ்வளவு நேரமாய் தான்
வேடிக்கை பார்ப்பது....?
எழுந்து வந்து,
மெழுகுக்கு உயிரூட்டுகிறேன்...
அழுது கொண்டே அது உருகி வழிகிறது...
கிட்டத்தட்ட என் நிலையும் அதுதான்..
இப்போது அந்த அறையில்,
எனக்கு துணையாய் மெழுகும்,
மெழுகிற்கு துணையாய் நானும்..
உன் நினைவின் வெப்பம்,
தாங்க முடியாமல் போக...
கொஞ்சம் குளிர் வேண்டி,
ஜன்னலின் கதவை திறக்கிறேன்..
வேகமாகவும் கொஞ்சம் மோகமாகவும்,
முகத்தில் மோதியது..
-மழைக்காற்று...
அவசரமாய் நிலவை தேடினேன்..
காணவில்லை..
தூரத்தில் எங்கோ,
ஒரு குயில் மட்டும்,
சன்னமாய் கூவிக் கொண்டிருக்கிறது...
பலகீனமாய் நடுங்கிய அதன் குரலில்,
துயரம் வெகுவாகவே நிறைந்திருந்தது...
பாவம்.....
துணையை தேடுகிறது போலும்..
ஒரு நிமிடம் நான்,
என் வேதனை மறந்து,
குயிலுக்காக கவலைபடுகிறேன்...
எல்லா உயிர்களுக்கும்,
காதல் வலிக்கத்தான் செய்கிறது..
விழுங்க முடியாத ஒரு துயரம்,
நெஞ்சை அடைக்க,
திரும்ப வந்து படுக்கையில் விழுகிறேன்...
ஜன்னலை மூட மனமில்லை..
மெழுகை அணைக்க விருப்பமில்லை...
போகட்டும்..
குயில் கூவட்டும்..
மெழுகு உருகி வழியட்டும்..
நானும் கொஞ்சம் அழ போகிறேன்...
வேதனையின் மிகுதியில் தான்,
மனம் ஒரு வழியாய்,
ஆறுதல் அடையும்...
எனக்கு தெரியும்...
துயரத்தின் கண்ணீர்,
என்னை சீக்கிரமாகவே தூங்க வைத்துவிடும்......