காதலில் தோற்ற அன்று
உன் பதிலுக்காய் காத்து கிடந்தது
என்பல நூறு குறுஞ்செய்தி....
உன் தொலை பேசி எண்ணிற்கு
முயன்று முயன்று
கஜினி முகம்மது
படையெடுப்பை நிகழ்த்தியது
என் விரல்கள்
அதுவோ பாரத பிரதமர் போல்
மெளனமாய்
ஸ்விட்ச்டு ஆஃப் செய்யப்பட்டிருந்தது!
உன் வீட்டு ஏரியா பக்கம்
சுழன்றடித்தது
என் பல்சர் காற்று
பூட்டப் பட்ட உன் வீடு
எதையோ உணர்த்தியது!
வீட்டுச்சிறையில் அடைபட்டாயா?
வேண்டாமென்று விட்டொழித்தாயா?
அமெரிக்காவால் கொல்லப்பட்ட
பின்லேடனின் மரணம் போல்
உன் தலை மறைவு
பல சந்தேகங்களையும்
சர்ச்சைகளையும் ஏற்படுத்துகிறது!
தோழி வழி தூது
சொல்லிப் போனது
காரணமின்றி
என் காதல் தோல்வியை!
இருவரும் இணைந்து சுற்றிய
கடற்கரை இன்று என்
கண்ணீர் கொண்டு கடல் மட்டம் உயர்த்தியதே?
நீயும் நானும் போகும்
அந்த மாயாஜால்
இன்று மாயம் காட்டுகிறதே?
உன் ஈர்ப்பு விசை இல்லாமல்
என் நாட்கள் இயங்காமல் நின்றதுவே?
தற்கொலைக்கு முயன்ற முயற்சி
தடுத்து நிறுத்தப்பட்டது
கை அறுத்த காயங்கள்
வலியாய் தெரியவில்லை
நீ கொடுத்த காதல் காயமே
வேர்பரப்பி வியாபித்தது!
யாருமற்ற பூமியில்
நான் மட்டும் தனியாய்...
நிற்பது என் பிரம்மை
எமனின் வாகனம்
மாறி விட்டதோ?
காதல் வாகனம் ஏறி
பல காளைகள் உயிர் குடிக்க
காத்திருக்கோ கன்னியின் வடிவிலே?
எழுதினேன், கிழித்தேன்
அழுதேன் ,சிரித்தேன்
உளறினேன், உறங்கினேன்
எப்படி போனதோ என்
உயிர் வலித்த அந்த ஒரு நாள்?
மரணித்துப் பார்த்த
அன்றைய தினத்தை
இன்று எண்ணியே பார்க்கின்றேன்
வலி கடந்த வாழ்க்கையை
காதல் கடந்த பாதையை!