உணர்வுகள் அழகானது
என் உயிர்வரை
தீண்டிய பார்வைகள்
மொழிதலில்
விடுபட்ட வார்த்தைகள்
பெயர் சொல்லி
அழைத்திடும் தோரணை
பிரிதலில்
திடுக்கிடும் வேதனை
பிரிதொரு
சந்திப்பினில்
அனிச்சையாய்
முளைத்திடும் புன்னகை
மலையென
நிலைகொண்ட
பெருங் கணங்கள்
மழையென
பொழிந்திட்ட
சிரிப்பொலிச் சிதறல்கள்
எரிமலை
கோபங்கள்
சில கணங்களிலேயே
உறைந்து மறைந்திடும்
அதன்
உள் ஒளிச் சூட்டின் வலிகள்
விரல்கள்
அசைந்தாடும்
நடைபாதைப் பயணம்
தோள்கள்
உறவாடும்
பேருந்து பயணம்
பொதுவானதோர்
அரங்கத்தில்
விழிப்பார்வை
தீண்டல்களின்
இரகசிய விளையாட்டு
உடல்
ஓய்வென்னும்
படுக்கையில்
உறக்கத்தில் புதையுண்ட
அசைவில்லா கணங்களில்
கனவுகளின் திரை விரிப்பில்
எவரும் அறியாத
அழகியதோர் சந்திப்பினை
விழித்திரைகள்
அதிகாலை எனை எழுப்பி
மறுமுறை ஒருமுறை
திரையிட்டுக் காட்டிடும்
அந்த
ஆழ்மன ஓட்டத்தின்
ஏக்க பிரதிபளிப்புகள்..!!
இப்படி..
நினைவலையில்
கரையாமல்
நிரந்தரமாய் தங்கிவிட்ட
இந்த காதலின்
உணர்வுகள் எல்லாம்
மிக மிக அழகானது..!!