மானம் கெட்ட மேகம்Mano Red

உச்சி வானம் பாக்க பாக்க
உசுரு கெடந்து துடிக்குதய்யா,
உண்மைய சொல்லணும்னா
உள்ள சோறு எறங்கலய்யா..!!

சொரணை கெட்ட மேகத்துல
சொட்டு நீர் கூட காணமய்யா..??
சொர்க்கத்துல சாமி மட்டும்
சொகமா தான் இருக்குமய்யா...!!

வடக்க பாத்து போன மேகம்
வருகை தர மறுக்குதய்யா,
வரப்பு நனைக்க காசுல்லன்னு
வயிறு எறிஞ்சு தவிக்குதய்யா...!!

மழய நம்பி வச்ச மரமும்
மலடி போல நிக்குதய்யா,
மானம் கெட்ட மழைக்காக
மண்வாசனை அழுகுதய்யா..!!

ஈரமில்லா நெஞ்சம் கொண்ட
ஈனம் கெட்ட மழையய்யா,
இளிச்சவாயன் நாங்க தானோ
இன்னும் ஏமாத்தி ரசிக்குதய்யா

பாழாப் போன மழைக்கு
பாசம் நேசம் இல்லையய்யா,
பருவத்துல வராம
பல்ல தான் காட்டுதய்யா...!!

என்னடா கொடுமையிது
எதிர்காலமும் சிரிக்குதய்யா,
எழவும் கூட எட்டி நின்னு
எமன தள்ளி வைக்குதய்யா..!!

போதுமடா சாமி....??
பொழப்புல விழுந்த மண்ணு
சோத்துலயும் விழுந்ததய்யா,
படச்ச அம்மன் கூட
ஊர விட்டு ஓடிடுச்சய்யா...!!

எழுதியவர் : மனோ ரெட் (2-May-14, 10:13 am)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 69

மேலே