கற்பனையும் கலந்துரையாடலும்

இப்போதே உயிர் துறக்க வேண்டும்
முடிவு உறுதியானது !
காரணம் தேடுவார்களே ?
அவன் என் காதலை மறுத்துவிட்டான் !
இடையில் நுழைந்தவனுக்கு
உன்னுயிர் தருவதா !

அப்பா திட்டிவிட்டார் !
என் மகள் என்றே
மார்மீதும், தோள்மீதும் நீ விளையாட
சிந்திய சிறுநீரையும்
எட்டி உதைத்த கால்களையும்
கொஞ்சியே மகிழ்ந்தவருக்கு
உயிரோடு நீ தரும் வேதனை இதுவென்றால்
மரணமும் உன்னை மன்னிக்காது .....

மதிப்பெண் குறைந்து விட்டது !
ஒன்று இல்லையென்றால்
இன்னொன்று இல்லையா
உபதேசம் உன் நண்பனுக்கு மட்டும்தானா ?

கடன் தொல்லை , கணவன் தொல்லை
இதில் ஒன்று !
சரித்திரம் படைத்தவரையெல்லாம்
சிந்திப்பதே இல்லையா !

சரி ஏதோ ஒன்று
எப்படி இறப்பது ?

விஷம் குடித்தால் !
நாசிகள் அருவருக்கும்
வாசம் அது !
விற்பனை பால் வாசம் பிடிக்காத உனக்கு
அதுவும் பிடிக்காது !

இரயிலில் விழுந்து !
அணுவணுவாய் நேசித்த
உன் அங்கம் சிதைந்து
நீ நேசிப்பவரை
நிலைகுலைய வைக்கும் !

கயிற்றில் தொங்கினால் !
சுருக்கிட தெரியாத
அரைக்கிறுக்கி ! அறுத்துக்கொண்டு விழுந்தால்
ஊமை வலிகள்
ஆயுள் உள்ளவரை
உன்னை வதம் செய்துக்கொண்டிருக்கும்!

கையினை வெட்டிக்கொண்டால் !
முள் குத்தினாலும்
வலி தாங்காத உனக்கு
விபரீத ஆசைகள் எதற்கு !

மாத்திரைகள் உண்டால் !
நீ உண்ணும் நேரம்
கலப்படம் இல்லாதிருந்தால்
உயிர் பிழைத்திடுவாய்

வேறு என்னதான் வழி ?
ஒருமுறையேனும் வாழ்ந்துப்பார்
மரணத்தை எதிர்நோக்கமாட்டாய்
காரணங்களும் , அர்த்தங்களும்
அதற்குள் அடக்கமாகிவிடும் !

எழுதியவர் : சுமித்ரா (19-Nov-14, 4:57 pm)
பார்வை : 142

மேலே