விரல் தீண்டா வீணை

என் உப்புக்கடல்
உன் நதி நீருக்கடியில்
மூழ்கிக் கிடக்கிறது !

காற்றாடியெனச்
சுற்றிச் சுழல்கிறது மனம்
உன் மறுப்பில்
கிழிந்து வெளியேறுகிறது மூச்சு !

வெட்டப்படுவோமெனத்
தெரிந்தும்
அமைதிப் பார்வை
பார்க்கும் ஆட்டைப் போல்
சிக்காத உறவுக்காய்
உன்னில் சிறையாக
தவிக்கிறது !

மழைத்தூறல்
வானவில் நீ
தொட்டு விட எண்ணி
தொலைதூரம் சென்றபின்னும்
ஒரு வண்ணத்தைக் கூட
தொடமுடியா மழலையாய்
நீர் கோர்க்கிறது
விழிகளுக்குள் !

முடிவுறா பா நீ
உன் முற்றுப் புள்ளியை
தேடித் தொலைகிறேன்
எனது கல்லறை எழுப்பபடுகிறது
அந்த புள்ளியில் !

மனக் கருவறைக்குள்
நீ பிறந்து வளர்ந்து
எனக்குள்ளே புதைகிறாய் !


வரிகளில் சிக்காத
வார்த்தையாய்
பேசாமையில்
உரைந்து கிடக்கிறது
உன் நினைவுகள்
உள் மனதிற்குள் !

நான் நெருப்புக்குள்
வெந்து சாகிறேன்...
நீ பனிக்காற்றில்
பசியாறுகிறாய் !

உன் ஒரு சொல் மீட்டும்
என் வாழ்வின் இசையை ...
எனினும்
விரல் தீண்டா
வீணையாகினேன் !


உயிரும் உணர்வும்
உருகியே உருகும் உனக்காய் ...
உனக்காய் மட்டும் !

எழுதியவர் : மு. மணிகண்டன் அலைப்பேசி எண (11-Jan-15, 1:33 pm)
பார்வை : 149

மேலே