ஆனா ஆவன்னா

“ ஆனா.. ஆவன்னா..” மொழி
பேசும் போது
“புள்ள என்னமா
படிக்குது பாரு”
தனக்கு கிட்டாதது
தன் பிள்ளைக்கு
கிட்டியதில் பேரின்பம்!
பள்ளி முடிக்கும் முன்னே
பருவம் எய்திடும் வேளையில்
மணமுடித்தலுக்கான சுகமான துன்பம்!
பருவச் சடங்கோடு
பள்ளியும் முடிந்து
கல்லூரியில் கால் பதிக்கும்போது
“பிள்ளை பொழச்சிக்கும் இனி
கவலையில்லை” எனும்
பெருமூச்சு வேளியேறும்முன்னே
பெருஞ்சுமையாகும் கல்லூரிக் கட்டணங்கள்!
கல்லூரியின் பரிசாக விடுதி வாழ்வு
விடைபெற முடியாது
விழிநீரில் விடைகொடுக்கும் பாசம்!
வினாடிக்கொருமுறை
அலைபேசிதனை எதிர்நோக்கும்
தாயின் பரிசம்!
பெற்றோர் சந்திப்பிற்கான ஞாயிறுகளில்
பதறித்துடிக்கும் தாய்
பரபரப்பாகும் தந்தை!
பார்த்த மாத்திரத்தில்
பால் மழை பொழியும் கண்கள்!
பச்சைப் பிள்ளையாயினும்
பருவ மங்கையாயிற்றே
காலத்தின் மயக்கத்தால்
பற்றிக் கொள்ளும் கவலை!
கல்லூரி முடிந்து
பட்டம் பெறும்போது
பாலூட்டி சீராட்டி வளர்த்த மகள்
பலர் போற்றப் படும்போது
பட்ட துன்பம் எல்லாம்
பாசமாய் பறந்து பொகும்!
“தந்தை மகற்காற்றும் நன்றி”
முழுமை பெற்றதாக பூரிக்கும் மனது!
புன்னகை சிந்தும் தோரணையில்
பூகம்பமாய் சிரிக்கும் காலதேவன்!