எனதருமைத் தாய்மொழியே

உதிரங் கலந்தாய் உணர்வில் நிறைந்தாய்
அதிசயம் செய்தாய் அழகாய் ! - பதிந்தாய்
மனதில் எளிதாய் மகத்துவ மிக்க
எனதருமைத் தாய்மொழி யே !

இனிமை பயக்கும் இளமை ததும்பும்
தனித்தே இயங்கிடும் தாயாய் - நனிசிறந்
தோங்கும் புவிதனில் தீந்தமிழ்ச் செம்மொழி
பாங்காய் பவனிவரும் பார் .

முத்தமிழில் முக்குளிக்க மூப்பும் மறந்துவிடும்
சித்தந் தெளிவாகும் சீலமுடன் - உத்தமமாய்
ஞாலத்தில் மிக்க ஞயமாய் தமிழ்மொழியே
காலத்தை வெல்லுங் கனிந்து .

எந்நா டுசென்றாலும் எம்மொழியில் பேசிநிதம்
சிந்தையில் வைத்தே சிறப்பிப்பேன் - சொந்தமெனக்
கொள்வேன் உரிமையாய்க் கொண்டாடி யின்புறுவேன்
தெள்ளுதமிழ் செம்மொழித் தேன் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Apr-15, 11:59 am)
பார்வை : 147

மேலே