ஒன்பது ரூபாய் சில்லரை

என்றும் போல் தான் இன்றும்
பேருந்து நிருத்தம் பெரும்
போர் நிலமாய் மாறியிருந்தது..

"ஏம்மா இறங்கவிட்டு ஏறினா என்ன?"
பருமனாய் பெண்ணொருத்தி.
இடித்துத் தள்ளி. .ஒருவழியாய்
ஏறினேன். . .

ஓரு சீட்டு கூட இல்லை
கண்ணாடி பாட்டியின் சலிப்போடு
கண்கண்ட கணவனாய்
இறுக பற்றிக்கொள்ள போகிறேன்
இரும்பு கம்பியில் ஒன்றை. . .

விசில் சத்தம் அலற
வேகமாய் புகை கிளம்ப
கியர் மாற்றி ஓடியது
புதுகொலுசின் குலுங்கலாய் பேருந்து.

சுலீரென விரல் பதிய
அறைந்தது வெயில். .
கதிரையும் ஏமாற்றி
முகத்தை மூடிய பெண்ணொருத்தி. .

யாரும் பாரா வண்ணம் முகம் மறைப்பாளாயின்
முழுதாய் ஆடை அணிய என்ன தடையோ??
காதில் புதைத்த போனை அகற்றாமலே
பணத்தை நீட்டுவாள்..

பாதி நேர நடத்துனர் தொழில்
சவுக்கிய படுவதில்லை எனக்கு
பக்கத்தில் பெண்ணோடு அதோ அந்த
பச்சை சட்டைக்காரன், அவள் திரும்பும் வேலையில்
சாய்ந்து பார்த்தபடி. .

எரிச்சலின் உச்சத்தில் கொஞ்சம்
ஜன்னல் வழி அலையவிட்ட
கண்ணில் பட்ட +2 மாணவன்
படியில் வைத்த ஒற்றை காலுக்கு
ஏன் டிக்கெட் எடுப்பானோ புரியவில்லை. .

"எங்கம்மா போனும் ??"
". . . . ."
"ஒரு ரூபா சில்லரை கொடு"
"சில்லரை இல்லைங்க"
"புடி சீட்ட. . .வேற யாரும்மா அங்க சீட்டு ??"

ஒன்றரை மணி நேர பயணத்தில்
ஒவ்வொரு முறை கடக்கையிலும்
பாவமாய் பார்ப்பதும் ஏமாறுவதுமாய்
நானும் நடத்துனரும்..

நிறுத்தத்தை அடைந்ததும்
"அண்ணா மீதி சில்லரை"
"ஒரு ரூபா குடு. . தரேன். . ."

என்னை போலவே ஏமாற்றத்தோடு
அந்த பூ விற்கும் சிறுமி. .

சில அடி தொலைவில்
அவள் குரல் மட்டும்
"அக்கா பூ வேணுமா. .
முழம் பத்து ரூவா மல்லி. . ."

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (16-Jun-15, 4:01 pm)
பார்வை : 107

மேலே