மறந்துவிட்டாயா _1 _ 10
1.வெளிச்சத்தின் புள்ளிகள்
வெற்றிடம்தேடி அலைந்து
நாம்விரல் கோர்த்துக்கிடந்த
நகக்கணுக்களில் பட்டுத்தெறித்து
நம்முகம் தொட்ட பொழுதுகளை
மறந்துவிட்டாயா ?
---------------------------------------------------------------
2.தாமரை எதிர்படினும்
தான்பிரியாத அன்னம் போல்
நாமிருக்கும்வரை நீங்காது
நாமிறந்தாலும் ஒன்றாகுவோமென்ற
நினைவுகள்தந்த சுகங்களை
மறந்துவிட்டாயா?
---------------------------------------------------------------------
3.கோவிலில் கடவுளை தரிசித்துவிட்டு
கோபுரச் சிற்பங்களின் ஈர்ப்பால்
உனை நானும்...எனை நீயும்
ஓரக்கண்ணால் ரசித்துவிட்டு
ஒன்றுமுரைக்காது நகர்ந்த நொடிகளை
மறந்துவிட்டாயா ?
--------------------------------------------------------------------
4.நிலவின் உயிர்ரேகைகள்
நிமிடத்தில் தொலைந்து மீள்வதுபோல்
என்னுள் நீ தொலைந்து
ஏதோவொரு மூலையில் உயிர்த்து
ஏதேதோ செய்த நொடிகளை
மறந்துவிட்டாயா ?
---------------------------------------------------------------------
5.இலைகளில் தூங்கும் பனித்துளியை
இறகுகள்பூண்ட பறவை ஈர்த்ததுபோல்
இதயத்துள் தூங்கும் உன்நினைவுகளை
இரகசியமாய் நீ ஈர்க்கமுயன்று
இயலாதுபோக நீ..நானான பொழுதுகளை
மறந்துவிட்டாயா...?
-------------------------------------------------------------------
6.நத்தையின் நகர்வு கண்டு
மெத்தையான அதன் உடல்தொட
பித்தாகி நீ பின்தொடர
கத்தாதேயென நான் உரைக்க
சத்தமில்லாதது தன்கூடு சென்றதை மறந்துவிட்டாயா ...?
---------------------------------------------------------------------
7.கடற்கரையில் நாம் அமர்ந்திருக்க
காலுரசிய நண்டுகள் கண்டு
சட்டென நீ எழுந்தோட
பட்டென அது பயந்தோட
பாவையுன் நவரச முகத்தை மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
8.மரமோடு அசையும் இலைபோல
மனதோடு அசைந்தாய் நீயன்று
மதம்கொண்ட யானையின் குணம்கூட
மங்கையுன் விழிவீச்சில் பசுவாகும்
மந்திர தந்திர நிகழ்வுகளை
மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
9.கடல்மேல் தவழ்ந்து கணநேரமெழுந்து
கரைவந்து செல்லும் அலைபோல
உயிர்மேல் தவழ்ந்து உள்ளுக்குள் நுழைந்த
உன்பிம்பத்தின் மீட்டலில்நான் தொலைந்துமீள
உள்செல்களெல்லாம் நீயான பொழுதுகளை
மறந்துவிட்டாயா...?
--------------------------------------------------------------------
10.பனைமரத்தடியில் பதனி நான்குடிக்க
பச்சைக்கள்ளென பாவை நீமுறைக்க
பச்சையான உன்வார்த்தைச் சூட்டில்
பரிதவித்து நான் முழிக்க
பரிவாக மறுபார்வை வீசியதைநீ
மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
( மறந்து விட்டாயா 1 முதல் 10 வரை காதலும் காதல் சார்ந்து மொத்தமாய் _ மறு பதிவு ).
குமரேசன் கிருஷ்ணன்