கவிராஜனும், வனராஜனும்

கவிராஜன்,
தன் செல்லக் குழந்தைக்கு,
செல்லம்மாள் ஈன்ற குழந்தைக்கு, அஃறிணைகளை அறிமுகப் படுத்த,
மலையாளிகளின் தேசமாம்,
திருவனந்தபுரம் விலங்கு காட்சி சாலைக்கு,
இட்டுச் சென்றான்.

ஒவ்வொரு விலங்கையும்
சுட்டிக் காட்டிய கவிராஜன்,
அவற்றின்
இயல்பை விளக்கிக் கூறி,
தன் குழந்தையோடு குழந்தையாய்
குதுகலித்து,
பேரானந்தம் கொண்டான்.

அவ்வாறு விளக்கி வருகையிலே,
அடங்காச் சிங்கம் ஒன்று,
கூண்டிலே சிறைப்பட்டு
அடங்கியிருத்தலைக் கண்டான்.

"காக்கை குயில்கள் எங்கள் ஜாதி!”
என்று சமத்துவம் பேசியவன்,
வனராஜனைக் கண்டால் சும்மா விடுவானா?

“தனக்கு சமமானவன்
இவன் என்றெண்ணி,
கட்டித் தழுவி,
ஆலிங்கனம் செய்ய”
அருகிலே சென்றான்

பார்த்தான் காவலாளி;
அவன் உள்ளமோ படபடத்தது.
”போகாதே அருகில்!
போனால் இருக்க மாட்டாய் உலகில்!!”
தடுத்துப் பார்த்தான்!

காவலாளியின் சொல்லுக்கு மக்கள் பயப்படுவர்!
கவிராஜன் பயப்படுவானா??

அடிமையாய் வாழும்
முன்னாள் வேந்தனை
இந்நாள் தமிழ் வேந்தன்
தன்னருகிலே வரப்
பணித்தான்.

மகுடியோசைக்கு மயங்கிய
நாகம் போல்,
எஜமானனிடம் பழகிய
நாயைப் போல்,
பணிந்து, வந்தமர்ந்தான்
அஃறினைகளின் அரசன்.

“வனராஜா!
நான் கவிச் சக்கரவர்த்தி!
நீ வனச் சக்கரவர்த்தி!!
நான் பராசக்தியை
என் வாக்கினில் சுமக்கிறேன்!
நீ உன் முதுகில் சுமக்கிறாய்!!
நானும் நீயும் வேறல்ல!
இருவரும் ஒன்றுதான்!!”

மகாகவியின் தமிழ்
புரிந்ததாய் பாரே
நடுங்க வனராஜன்
கர்ஜிக்க…

பார்த்தவர் கண்கள்
பாலைவனத்தில்
பெய்த பெருமழையில்
நனைந்தைப் போல்
பரவசமடைந்து,
வாய் திறந்து,
இமை மூட
மறந்தனர்!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா. (13-Sep-15, 12:21 am)
பார்வை : 49

மேலே