உனக்காய் என்னை காதலித்து பார்

ஓரேயோர் வார்த்தை மட்டுமே,
தினம் நான் யாசகம் கேட்கிறேன்...
அதை ஏன் மறுக்கிறாய்,
நானும் சுவாசிக்கவே மறக்கிறேன்!
உன் மௌனங்களோடு
இயைந்து வாழும் அனுமதியை
என் நிஜங்கள் இன்னுமே
பெறவில்லை அன்பே...
இதயம் வலிக்கின்றது...
விழிகள் நனைகின்றது...
உயிரானவனே நீயும் - ஊமை
நாடகம் அரங்கேற்றும் நேரம்!
உன் காந்தக் கண்களோடு,
இனிவரும் காலம் யாவிலும்
புன்னகைகளின் முகவரிகள்
எழுதி போவதே இவள் அவா..
விரக்தியின் விம்பங்கள்
உன் இதழ்களில் படிந்திட
இவள் அன்பு தொந்தரவுகளே
பாதை வகுத்திடுமோ என்று,
உள்ளுக்குள் ஓர் ஐயம்!
தொல்லையென என்னை
நொடியேனும் எண்ணிவிடாதே..
அங்கே, அந்த நிமிடமே
அர்த்தமிழக்கும் - உன்மேல்
நான் கொண்ட காதல்!
உன்னில் நான் கொண்ட
அந்த உறவுக்கு பெயர்,,,,
நட்பு, பாசம், அன்பு, பற்று,
நேசம், பிரியம், விருப்பம்,
பிடிப்பு, காமம், காதல்...?
எத்தனை சொற்கள்
தேடி எடுத்தாலும்..
அத்தனை கனக்கவில்லை,...
உனக்காய் என்னுள்
உருக் கொண்ட - அந்த
உணர்வின் எடைக்கு
நிகராக கூறிட!
இத்தனைக்கும் நான்,
வேண்டுவதெல்லாம்....
அன்பே,
எனக்காய் என்னை
காதலிக்க வேண்டாம்,
உனக்காய் என்னை
காதலித்துப் பார்!..,
அன்பின் நிழல் கொண்டு,
விழி மூடும் - அந்த
தருணம் வரையிலும்
உனக்காய் வாழ்ந்திடுவேன்!..