இனித் தேருதல் நமக்கடியோ

[மெய்யன் நடராஜின் -275048 வெள்ளத்தில் வடிந்த காதல் படித்த உந்துதலில் எழுதப்பட்டது.]

மழையெனக்
காதல் வெள்ளம்-உன்
மைவிழி வழிபெருக
பழைய,என்
குடிசையிலும் -அது
படிந்து கடந்ததடீ!

உடைந்துமே வசமிழந்தே-அதில்
ஓடியது என துள்ளம்!
ஓடம் எனும் அறிவைப் -பற்றி
உயிரும் தனைக் காக்கும்!

தேடும் திசை எல்லாம்-உன்னைத்
தெரியா[து] உளம் அயரும்!
கூடும் நினைவுகளை-நான்
குப்பையெனச் சொல்லேன்!

வேடம் ஏனடியோ?-வந்து
வெள்ள நிவாரணம் தா!
கூடும் இதழ்களினால்-இழப்பைக்
கொஞ்சம் ஈடுசெய்வேன்!

பேடிகள் பலர்கூடி-நம்
பின்னால் பேசியவை
மூடிய அழுக்குகளாய்-என்
முற்றத்து இருந்தாலும்,
வாடும் மனத்துடனே-அவற்றை
வாரி எறிந்திடுவேன்!

தூர் எடுக்காதவராய்-இங்கு
தூங்கிய கழிசடைகள்
யாரையும் போலேயோ-இங்கே
யானும் இருப்பேனோ?

ஊருள் அழுக்குடனே-நான்
ஓடித் திரிவேனோ?
சேரும் சகதிகளும்-இனிச்
சேர விடாதிருப்போம்!

சோர்ந்து மடியாமல்- ஒரு
சூளுரை செய்திடுவோம்.
சேர்ந்து முடிவெடுப்போம்-துயர்
சேர விடாதழிப்போம்!
தேர்ந்த முடிவெடுப்போம்-இனித்
தேருதல் நமக்கடியோ!
==== ===

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (12-Dec-15, 9:14 pm)
பார்வை : 62

மேலே