எந்தன் காதலுக்கே
காற்றாடிக்கும் எனக்கும்
ஒற்றை வித்தியாசமே,..
காற்றின் திசையே அதுவும்,
உந்தன் திசையே நானும்..!
உனக்காய் எழுதும்
கவிதைகளே - எனை
காதலிக்க தொடங்கிவிட்டன,..
நீ மட்டும் இன்னும் மோனத்திலே..!
நீ பார்த்துப் போன
கடைசி பார்வையிலே
காந்தமாய் ஒட்டிகொண்டது
காதல் கொண்ட மனதும்..!
ஒற்றை ரோஜா கூட
சூடிக்கொள்ள மறுத்தேன்
உன் முத்தங்களில் அதுவும்
பங்கு கோருமாே எனும் பயத்தில்..!
பூப் போன்ற நெஞ்சம்
எப்படித்தான் தாங்கும்
புயல் போன்ற உந்தன்
புறக்கணிப்பின் வேகத்தை..!
அநாதை விழியில்
வழிந்திடும் நீராகவே
துடைக்க கைகளின்றிய
உனக்கான என் காதலும்..!
என் இளமைக்கு
இலக்கணம் கூறியவன் நீ
இடைநடுவே மறுத்து செல்கிறாய்
உனதான உரிமைகளை..!
கூடவே வருவாயென
கூறியவன் நீ தான்
தூரமாய் போகிறாய்
கூற்றிலே மாற்றம் செய்து..!
பந்தயத்திலே மனமும்
குதிரை வேகம் கொண்டது
நீ துரத்தி விடும் நொடிகளை
விரட்டி பிடிக்க..!
எட்டி உதைத்த பின்னும்
உன் நினைவை - தொட்டு
நான் முத்தமிடுகிறேன்
பட்டுப் போன எந்தன்
காதலுக்கு மரியாதை நிமித்தம்..!