இது ஒரு நதி

நதியிது...
நாதியற்றது!!!
நனையாதது!!!
ஓரிடம் நில்லாதது..

காலமே தன் கால்களாய்
காலத்தினைக் கடக்கப்பார்க்கும்
நதி இது!!!

அந்த பிரபஞ்சப் பிரவாகத்தின்
அலைகளில் ஆடிடப்போகும்
நதி இது!!!

நாதவெள்ளத்தின்
நடுவினில் ஒரு ஸ்வரமாகிடப் போகும்
நதி இது!!!

கிரந்திகளில் கிடக்கப் பிறந்த
ஒரு ஓடையல்ல இது...

பல பிறப்போடைகளை
பிரிந்து,
சேர்ந்து...
அடைந்து துறந்து...
துவண்டு உழன்று
இன்னும் இன்னும்
அந்தப் பிரபஞ்சப்பெருவெளியில்
கலந்திடத்துடிக்கும் நதி இது!!!

மனமெனும் அணைகளை
பற்றென்னும் பிணைகளை
கடந்து வருகின்ற நதி இது!!!

இந்தப்பெரும் பிரவாகம்
நதி வெள்ளம்
நகரட்டும்...
தன் கால்களால் காலம்கடக்க
ஓடட்டும்!!

நதியின் இலக்கு
பயணம்!!
நதியின் இலக்கு
இலக்கற்றது..
சாகரத்தில் சங்கமிப்பதர்க்காக
எந்த நதியும் ஓடுவதில்லை..
அனால் நதி ஓடினால் சாகரத்தில் சங்கமிக்கும்...
அந்த நகர்வு,
ஓட்டம்,
உயிர்ப்பு,
சிலிர்ப்பு,
இது தான் நதி...

நீ தொடும் ஒவ்வொரு நொடியிலும்
ஒரு புது நதியின் நகர்வை தொடுகிறாய்..
நீ பார்க்கும் ஒவ்வொரு க்ஷணமும்
ஒரு புது நதியினை காண்கிறாய்!!!

ஒரு மர நிழழுக்காய்,
ஒரு கனியின் கனிவை சுவைத்திட
தன்னை கோதிவிட்ட கைகளுக்காக
ஒருபோதும் நதி நிற்காது!!

பாசமெனும் கொடியினில் பற்றிட
இந்த நதி ஜனிக்கவில்லை,
பல பற்றினை அறுத்து ஓடி,
தன்னை நதியாகிக்கொள்ளவே இந்த நதி ஓடுகிறது!!

மனிதன் ஒரு நதி,
தன் நகர்வை உணரவேண்டிய நதி...
தன் பிரவாகத்தினை பெருக்க வேண்டிய நதி...
இறுதியில்
இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில்
சங்கமிக்க வேண்டிய நதி...

நீ ஒரு நதி...
உணர்ந்துகொள்!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (2-Feb-16, 12:03 am)
சேர்த்தது : சௌந்தர்
Tanglish : ithu oru nathi
பார்வை : 223

மேலே