கவிஞனே கரைந்து போ
கவிதை எழுதும் காரணமாய் தினம் காலம் அழிக்கும் வாலிபனே !
வரிகள் வனப்பு தந்திடலாம் அது வாழ்வை உனக்கு தந்திடுமா?
தெரியும் பொருளை அழகாக உன் வரியில் காட்டும் பாவலனே !
எரியும்சிதையை என்றேனும் வெறும் கற்பனைஉலகம் வென்றிடுமா?
புதுமைக்கருவை உருவாக்கு வெறும் பொழுதைப்போக்கும் மானிடனே !
பெருமை கொடுக்கும் ஞானமது ஒருவேளை உணவை கொட்டிடுமா?
வெறுமை என்கிற ஜாடிக்குள் புது உலகம் பார்த்திடும் உற்றவனே !
உறைந்துபோன உணர்வுகளை வெறும் மையின் துளிகள் காட்டிடுமா?
இன்னல் வருத்தும் பூமியிலே பொய் மின்னலை பாடிடும் இனியவனே !
நிஜம்போட்ட கீறல்களை உன் நீர்த்த எழுத்துக்கள் தீர்த்திடுமா?
பழுதான தேசத்தில் வீண் புகழைத்தேடிடும் இளையவனே !
தெருவோரம் தடுமாறும் ஒரு கிழவனை கவிவரி காத்திடுமா?
மமதைகொண்டு வார்ப்புகளில் நிதம் மாற்றம் நிகழ்த்தும் இளநிலவே !
கவிதைமட்டும் நிலைபெற்றால் இம்மானிடப்பிறவி ஓய்ந்திடுமா?
ரத்தஆறு ஓடுகையில் விண் நட்சத்திரம் தேடும் மன்னவனே !
எழுதுகோலில் சாடிவிட நீ இழந்ததெல்லாம் சேர்ந்திடுமா?
இனியும் உந்தன் இமை ரெண்டும் வெறும் காகிதம் நிரப்ப வேண்டாமே !
இளமை தீர்க்க கடனுண்டு எனில் இருமாப்புக்கள் வேண்டாமே !
வறுமை கொல்லும் உலகைப்பார் திறம் வழியில் போய்விட வேண்டாமே !
கவிதையள்ளி கடல் வீசு நீ கரைந்து போய்விட வேண்டாமே !!