மலர்ச் செடியும் ஓர் மலர்க்கொடியும்

மலர்ச் செடியும் ஓர் மலர்க்கொடியும்

தெருவில் என்னை ஒருவன் கூவி விற்க!
ஏதோ ஒரு தென்றல் என்பக்கம் திரும்பி நின்றது!
நானும் அளவில்லா மகிழ்ச்சியல் அவளைப் பார்க்க.
வாங்கித்தான் போனாள் என்னை அந்த தென்றல்.

மிகுந்த கவனத்துடன் அவள் தோட்டத்தில்
நட்டு வைத்து நாள்தவறாமல் நீர் ஊற்றி
நான் மொட்டுகளைக் கொடுக்கும் முன்னே
என்னைப்பார்தது எப்பொழுதும் புன்னகைத்து
மொட்டுக்களை எப்படியெல்லாம் மலரவைக்கலாம்
என்று எனக்கே கற்றுக் கொடுத்தாள்.

என்னுள்ளும் முதல் மொட்டு அவளைப் பார்க்கும்
எண்ணத்துடன் மாலையில் துளிர்விட்டுக் காத்திருக்க.
அதைக் கண்ட அவள் கண்களெல்லாம் பூத்திருக்க.
வெட்கித்தான் போனது அந்த மொட்டு. - நாளை
எப்படியும் சூடுவாள் என்று இரவில் இசைந்துவந்த
தென்றலிடம் கதைப் பேசிக் காத்திருந்தது.

பகலைக் காட்ட வந்த பகலவன் அவளுக்காக
மலர்ந்த மலரில் மஞ்சளைப் பூசிவிட
துயில் எழுந்து வந்த அந்த பெண் மஞ்சள் பூசிய
மலரைக்கண்டு கொஞ்சல்களை வீசிவிட
மணமெங்கும் வீசி மகிழ்ச்சியை கொண்டாடியது.

மலரின் மணத்திலும் நிறத்திலும் மயங்கியவள்
மணித்துளிக்கொரு சுயமியாய் (selfi) மலருடன்
நூறு சுயமிகள் எடுத்து 99 சுயமிகளைப் பிடிக்காமல் அந்த
முதலாவது சுயமியையே முகநூலில் பரவவிட்டு
விருப்பங்களைக் கொள்ளை கொண்டிருந்தாள்.

மதி மயங்கிய மலரும் அந்த மலரும்
அவளுடன் புன்னகைப் பூத்து பூரித்துப்போயிருந்தது.
அவள் கூந்தலைச் சேரும் நேரம் பார்த்து
காத்திருந்த மலருக்கு அவள் புன்னகையை மட்டும்
பரிசாக அளித்து பரிதவிக்கவிட்டு சென்றாள் அவள்.

மலந்திருந்த போது மகிழ்ந்து பேசியவள்
உலர்ந்து போய்க்கொண்டிருக்கும் அந்த அலரைப்
பார்க்கக்கூட நினைக்காமல் எங்கோ யாரையோ
பரிதவிக்க விடத்தான் சென்றுவிட்டாள்.

மலரெல்லாம் உதிரந்து சருகாகி குப்பையில்
என்னைப் பரிதவித்து பார்த்திருக்க.- அதே
மாலையில் இன்னும்மொரு மொட்டு
அவள் வருகையை அறிந்து என்னுள்
முட்டி வந்து பார்த்திருக்க மீண்டும் அதே
புன்னகையைக் காட்டி கொஞ்சிவிட்டுச் சென்றாள்.

என்னுள் மலரும் மொட்டுகளே உங்களுக்கு
எப்படிச் சொல்லிப் புரிய வைப்பேன் அவள்
உங்களைச் சூடவே மாட்டாள் என்பதை.
அவளின் புன்னகைக்கு மயங்கி இனியும் பூக்காதீர்கள்.
நீங்கள் படைக்கப்பட்டது அவளுக்காக என்று
எண்ணி மலர்ந்து மண்ணிலே மறையாதீர்கள்.

என்னுடைய மலர்களான உங்களையே சூடமறுப்பவள்
அவளுக்காக காத்துக்கிடக்கும் அந்த ஒருவனை
என்னதான் செய்யப் போகிறாளோ?
நீங்கள் அளுக்காக காத்திருப்பவன் காலில்
மிதிபடும்போதாவது அவனிடம்
அவளைப் பற்றிச் சொல்லிவிடுங்கள்.
அவனாவது பிழைத்துவிட்டுப் போகட்டும்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (24-Nov-16, 4:05 pm)
பார்வை : 362

மேலே