பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று - நூல் - ஒரு பா ஒருபஃது

காப்பு :-
கதிரவன் வந்தனம் காசினியில் நன்றாம்
பதிபக்தி இல்லறத்தின் பாசம் - விதியாய்
மதிமுகத்தாள் பொங்கலிட மாசற்ற கற்பும்
கதியாகும் செந்தமிழ்நீ கற்று .


நூல் - பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று .!!

மாந்தர்கள் கோலமிட மண்மீதில் வேண்டுவன
பாந்தமாகச் சேர்ந்திட பக்குவத்தின் - காந்தமாகித்
தீந்தமிழர் வீரத்தைத் திண்ணமெனச் சாற்றுகின்ற
பூந்தமிழ்ப் பொங்கலைப் போற்று . (1)


போற்றுவோம் நாளும்நாம் போய்விடுமே துன்பங்கள்
ஏற்றுவோம் தீபம் எரியட்டும் - வீற்றிருந்தே
மாற்றிடுவோம் தீவினைகள் மங்காத பொன்னாளில்
சீற்றங்கள் வேண்டாமே சீர் . ( 2 )


சீரான சந்ததிக்கு சிந்தைநிறை பொங்கலுமே
பாராள வைத்திடுமே பங்கிடுவோம் - ஊரெல்லாம்
தாராள நெஞ்சத்தைத் தாபிப்போம் எந்நாளும்
வாராதோ நல்லெண்ணம் வந்து . (3 )


வந்திடுமே நல்வாழ்வு வாசமுள்ள செந்தமிழர்
தந்திடுவ ரெல்லோர்க்கும் தாவியுமே - வந்தனமே
செந்தமிழைப் பார்மீதில் செப்புகின்ற நன்னாளாம்
சிந்தையிலே வைத்தல் சிறப்பு . (4 )


சிறப்புமிக்க நாளில்நாம் சீர்பலவும் பெற்றே
உறவெல்லாம் கூடுவரே ஊரில் - பறந்தே
மறவாது பைந்தமிழை மங்காது செய்ய
கறவுமாட்டைக் கும்பிடுவீர் கண் . ( 5 )



கண்போல காத்திட காசினி செம்மையுற
வண்ணமிகுத் தோரணங்கள் வானோங்க - எண்ணமெலாம்
மண்ணுலகில் பாசமாகி மட்டில்லா இன்பத்தை
விண்ணாங்கு நின்றிடுமே வீடு . ( 6 )


வீடு முழுதும் விரைந்திடுமே இன்பமும்
நாடு செழிக்க நடவுபாட்டுப் - பாடுங்கள்
காடும் மழைநீரும் கண்டிடுவர் மண்மீதில்
வாடும் நிலையில்லை வாழ்வு . (7 )


வாழ்க்கை வளமாகி வந்தனங்கள் செய்திடுவோம்
தாழ்வுமினி யில்லையே தைமகளே - ஆழ்ந்தமனம்
காழ்ப்புணர்ச்சி யற்ற கபடமில்லா வெள்ளைமனம்
வீழ்ந்திடாதே என்றும் வியப்பு . (8 )


வியப்பாகும் வாழ்வுமே வீரத்தின் சான்றாம்
மயக்கங்கள் வேண்டாமே மண்ணில் - முயற்சி
தயக்கத்தைப் போக்கித் தரமான நன்மை
பயணமாகும் நம்மிடையே பண்பு . ( 9 )


பண்புடைய நற்செயல்கள் பாவத்தைப் போக்குதல்
கண்கூட மாறிடுமா காலத்தால் - கண்டிடலாம்
புண்போக்கப் பொங்கலில் பூந்தமிழைப் போற்றுவோம்
மண்மீதே நல்வாழ்வு மாந்து. ( 10 )


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு , இந்தியா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Jan-17, 10:25 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 47

மேலே