ஜல்லிக்கட்டு

சீறிக்கொண்டு வருகுதுபார் ஜல்லிக்கட்டுக் காளை
ஏறிநீயும் அடக்கிடவே தூக்குஉந்தன் தோளை
வீரமெல்லாம் காட்டிடவே வந்திருக்கு வேளை
வெற்றிபெறு உன்பெயரை பேசும்உலகம் நாளை
பளபளப்பாய் தோன்றுதுபார் வளர்த்துவச்ச எருது
களத்தில்வந்து எதிர்த்திடவே உள்ளத்திலே கருது
உன்னைத்தானே ஊக்குவிக்க ஊருசனம் வருது
உறுதியுடன் களமிறங்கு கிடைத்திடுமே விருது
நேற்றுஇன்று வந்ததல்ல ஜல்லிக்கட்டு ஆட்டம்
போற்றுகின்ற மன்னர்களும் கொண்டாரிதில் நாட்டம்
உன்னைக்கண்டு காளைமாடு எடுக்கவேண்டும் ஒட்டம்
உந்தன்வெற்றி தமிழனுக்கு பெருமைதனை கூட்டும்
பாரம்பரிய விளையாட்டு பதுங்கியோட மாட்டோம்
மாரதட்டி எழுந்திடுவோம் சுனக்கமிதில் காட்டோம்
கூறுபோட்டு கிழித்தாலும் ஓய்ந்துவிட மாட்டொம்
ஏறுதழவி வாழ்ந்தவாழ்வை விட்டுக்கொடுக்க மாட்டொம்
திமிருகின்ற காளையது துள்ளுகின்ற போது
திமில்பிடித்து அடக்கிடநீ சினம்கொண்டு மோது
அடக்கிடவே உன்னைவிட்டால் இன்னொருவர் ஏது
அடக்கியபின் வாழ்த்தொலியால் கிழிந்திடுமே காது
விரக்தியினை விட்டுநீயும் வீரியமாய் கிளம்பு
விரட்டிப்பிடி காளைமாட்டை உடையவேண்டும் குளம்பு
துணிச்சலோடு அடிவைத்தால் தொட்டதெல்லாம் பொன்னே
துக்கம்விட்டு துடித்துஎழு தோல்விவிலகும் பின்னே
வீரம்விளைத்த மண்ணுயிது வணங்குஅதைத் தொட்டு
பாரமில்லை துணிந்துவிட்டால் வேட்டிவரிஞ்சிக் கட்டு
சோர்வுதனை எண்ணாமல் சோகமெல்லாம் விட்டு
சோதியென மின்னவேண்டும் நெற்றிவேற்றிப் பொட்டு
கொளுத்திப்போட்ட பந்தம்போல கொழுந்தவிட்டு எரிவாய்
வெளுத்துக்கட்டி வேங்கைப்போல வீரச்செயல் புரிவாய்
உளுத்துப்போன உள்ளம்விட்டு உக்ரமாகத் தெரிவாய்
தளுக்கிமினுக்கும் காளையினை அடக்கிப்பரிசு பெறுவாய்.
பாவலர். பாஸ்கரன்