தூரிகை விழிகள் - வெண்கலிப்பா பாடல்கள் - மரபு கவிதை

கண்களிலே தூரிகையும் கண்மயங்க வைத்திங்கே
பெண்களுக்கே எழில்முகத்தை பெருமையுற எடுத்துரைப்பேன் .
விண்ணகத்து தேவதைக்கும் விழியழகு தூரிகையால் .
பண்ணெடுத்துப் பாடிடுவேன் பார் .


தூரிகையும் கருவிழியாள் துணையாக வந்திடுமே
பாரினிலே அழகான பரவசமும் தந்திடுமே
ஊரினிலே தூரிகையும் உலகாளும் இவள்விழியில்
சீரிளமைப் பெற்றவளாம் சீர் .


ஓவியமும் தீட்டிடலாம் ஒர்ந்திடுமே தூரிகையும்
பாவியிவள் பார்த்தாலே பறந்தோடி வந்திடுவேன்
காவியத்தின் நாயகியாம் காசினியில் இவளழகைத்
தாவியுமே பிடித்திடவே தான் .


விழிகளிலே கவர்ந்திடுவாள் வியனெனவே இருந்திடுவாள்
பழிசொல்லும் பாசத்தைப் பாதகத்தித் தந்திடுவாள்
அழிகின்ற யாக்கையும்தான் ஆனாலும் என்செய்வேன்
செழிக்கட்டும் என்காதல் சென்று .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Feb-17, 2:49 pm)
பார்வை : 65

மேலே