ஆதலால் காதல் செய்வீர் -- காதல் கவிதை
ஆதலால் காதல் செய்வீர் -- காதல் கவிதை
என்னை நீ மறந்ததேன் !
என் இருவிழிகள் அழுது சிவந்ததேன் !
கண்ணை இமைகள் மறந்ததேன் !
காரிருள் என்னைச் சூழ்ந்ததேன் !!!
காதல் நோய்க்குக் கன்னி நீதான்
சாதல் இல்லாச் சாகா மருந்து .
ஊடலும் காதலில் ஒருவகை அன்றோ ?
தேடலில் யானும் தேவதைக் கண்டேன் .
வானில் பூத்த வட்ட நிலாவே !
இன்பம் சுரக்கும் இதயக் கனியே !
யுத்தம் என்னுள் யாரறி வாரோ ?
சித்தம் கலங்கிச் சிதைய விடாதே .!!
உள்ளம் முழுதும் உந்தன் நினைவு .
வெள்ளம் போலே விரைந்து பாய்ந்து
தத்தித் தவிக்குது தத்தை உன்னிடம் .
மொத்த மாய்எனை முழுமையாய் நேசி !!
பித்தன் எனையும் பிடியுள் அடக்கு .
உத்தமி உலகில் உன்னை யன்றி
சித்திரம் இல்லை ; செப்பிடு வேனோ ?
புத்தம் புதிதாய்ப் பூத்தவள் நீயே !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்