இதயத்தில் இருக்கிறாய் நண்பனே
என்மேல்
பிரியம் உண்டென்று
நீ
எப்போதும் சொன்னதில்லை
நண்பனே !
நான்
புன்னகைத்தபோதெல்லாம்
உன் முறைப்பைத்தான்
பதிலாக்கியிருக்கிறாய்
நான்
நெருங்கிவரும்போதெல்லாம்
உன் விலகலைத்தான்
பரிசளித்திருக்கிறாய்
உன் நண்பர்களிடத்தில்
என்னை உன்
எதிரியென்றே
அறிமுகப்படுத்தியிருக்கிறாய்
என்னை
வாழ்த்தியதைவிட
நீ
வசைபாடியதே அதிகம்
நான் உன்னை
வெறுத்ததில்லை
வெறுக்கப்போவதுமில்லை
என்றேனும்
வாய்ப்புக் கிடைத்தால்
என் வீட்டுப்பக்கம் வா
ஒரு கோப்பை தேநீர் அருந்தவும்
நீ என் இதயத்தில்தான்
இருக்கிறாய்
என்பதைச் சொல்லவும் !
--மதிபாலன்