போனது போகட்டும் தமிழன் நாடாளட்டும் --- முஹம்மத் ஸர்பான்

வரலாற்றுப் பக்கங்களை யாருமே புரட்டாதீர்கள். கல்லறைச் சிலுவைகள் ஆயுதங்கள் ஏந்தக்கூடும். முள்ளிவாய்க்கால் ஓநாய்கள் பிணங்களை உண்ணுகின்றது. மனிதமுள்ள உள்ளங்கள் குப்பைக்குள் கிடக்கின்றது. வாழ்வாதாரப் பள்ளிக்கூடத்தில் புத்தகப்பைகள் களவாடப்பட்டது. உரிமைக்கான மனுக்கடிதத்தில் சைனட் குப்பிகள் தொண்டைக்குள் வன்முறையாய் வீசப்பட்டது. வெண் கட்டி வாங்கப் போன கைகள் வெட்ட வெளியில் மாயனமானது. பூக்காரியின் கூடைக்குள் விதவையின் கூந்தல் வெள்ளந்தியாய் சிரிக்கின்றது. துளசிச் செடிக்கு இரத்தத்தால் நீர் தொளித்தார்கள்; அண்ணனைக் கொன்று தங்கையின் கற்பை ருசி பார்த்தார்கள்; கைக்குழந்தையின் பால்வாடை அன்னையை அடையாளம் காட்டியது. புட்டிப் பால் வாங்காமல் வாளினால் மார்பகத்தை வெட்டி குழந்தையின் கையில் கொடுத்தார்கள்; தாய்மொழியின் கர்ப்பப்பைக்குள் ஆசிட் எறிந்தார்கள்; இறந்த கால இரத்தத்தைக் குடித்து விட்டு நிகழ்காலச் சந்திரன் வெள்ளையாகிவிட்டது. கடந்த கால காயங்கள் ஆறாத 'தமிழன்' மட்டும் தண்டிக்கப்படுகிறான்.


ரேஷன் அரிசி போல் நீதிக்காய் காத்து நின்றேன்; நாகரீகச் சவப்பெட்டிகளை வாங்கி வந்தேன். இளவேனிற் காலம் போல் தட்டுத் தடுமாறி விழுகின்றது மனிதப் பூக்கள். கனவுகளோடு ஓடிப்போனேன்; அகதி போல் அலைந்து திரிந்து முகவரி மறந்தேன். ஒரு டம்ளர் தண்ணீர் வாங்குவதற்கு இரவும் பகலும் வியர்வையை அடகு வைத்தேன். இமயம் ஏறும் எறும்பைப் போல திறமைகள் இருந்த போதும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டது. ஓவியங்கள் வரைந்தால் கண்களை நோண்டி விடுகிறார்கள்; கவிதைகள் எழுதினால் மொழியைக் கேட்கிறார்கள்; உரிமைக்காய் போராடினால் தீவிரவாதி என்கிறார்கள். குடும்பத்தில் ஒருத்தனாய் வளர்த்த காளையை அடிமாடாய் ஏலம் பேசினார்கள். சாக்கடையில் கிடந்த ஆப்பிளை செவ்வாய்க் கிரகத்தில் பறித்ததாக விளம்பரம் செய்கிறார்கள். ஓடாய் தேய்ந்து ஏமாந்து போனேன். குறிஞ்சிப் பூக்களிடம் கைக்குட்டை கேட்டு காற்றை அனுப்பினேன். பள்ளிக்குப்பக்கத்தில் மதுபான சாலைகள் கண்டேன்; கல்லூரி முச்சந்தியில் கயவர்களின் அட்டகாசம் அறிந்தேன்; இரண்டுக்கும் நடுவில் தோளில் சடலத்தை சுமந்து செல்லும் ஏழையைக் கண்டேன். கைகளில் ஏந்திய வாழும் தரையில் விழுந்த சத்தம் கேட்டேன். தமிழனாய் மனமுடைந்து நின்றேன்.


மூங்கில் காடுகளுக்குள் தோட்டாக்களை உசுப்பி விடுகிறார்கள்; பச்சைத் தீவுகளை மீத்தேனால் அழித்து வெல்கிறார்கள். கோவணத்தில் ஒரு போராட்டம்; கூட்டம் கூட்டமாய் சாலை எங்கும் மூச்சு முட்டும் மன்றாட்டம். சுவாசங்களின் ஓவியங்கள் பலூன்களாய் வானத்தில் பறக்கின்றது. தங்கப் பதக்கத்திற்காய் ஓடவிருந்த எங்கள் கால்கள் அதிகாரத்தால் உடைக்கப்படுகிறது. தெருவிளக்குகள் போல் வாக்குகளின் விடியல்கள் அரசியல் வாதியின் நிழல்களுக்கு மட்டும் குடைப்பிடித்தது. அடிமை போல் சுதந்திரமும் தடைப்பட்டது. வேதங்களை உணர மறந்தோம்; திருக்குறளை வாசிக்க மறுத்தோம்; செல்பிக்குள் வாழ்க்கையைத் தொலைத்தோம். கைக்குட்டையை ஆடையாக்கும் டச்சுக்காரனுக்கு கூலிப்பணத்தை கப்பமாய் கட்டினோம்; மானமுள்ள நாட்டுப் புற கலைஞனுக்கு பிச்சை போல் சில்லறைகளை வீசினோம். சாக்கடையள்ளும் நண்பனின் கைகளுக்கு தீட்டென்ற விலங்கு மாட்டினோம்; நீச்சல் உடையில் நீந்தும் நடிகைக்கு பாலாபிஷேகம் செய்தோம். கண்ணாடியில் முகம் பார்த்து காரணமின்றி சிரித்துக் கொண்டோம். மழை நின்ற பின் வண்ணத்து வானவில் பூமியின் கைகளுக்கு மருதாணி போடும். குறைகளை நிறைகளாய் மாற்றும் தமிழனாய் இணைந்த தோள்கள் தேடியலைவோம்.


அடக்கப்படும் எங்கள் தலைகள் கையோங்கினால் அந்நியனும் கைகட்டி நிற்பான். நம்பிக்கை ஒரு வாளைப் போன்றது; அது எப்போதும் துரோகத்தால் வீழ்த்தப் படலாம். தூண்டிலுக்குள் மீன்களைக் காணவில்லை. சடலங்கள் தான் கண்டு பிடிக்கப்படுகிறது. ஊடகங்களை முழுமையாக நம்பாதீர்கள்; நாம் ஏமாறும் வரை அவர்கள் வாழ்வார்கள். ஆயுதங்கள் ஏந்த வேண்டாம்; நேர்மையான உள்ளங்கள் ஆயிரம் ஒன்றிணைந்தால் பல லட்சம் போராட்டம் அஹிம்சையால் வீழ்த்தப்படும். மனிதம் நிறைந்த சமுதாயம் ஒரு நாள் நிச்சயம் உருவாக்கப்படும். அன்று, நள்ளிரவில் கூட பெண்கள் தனியாகப் பயணம் செய்வார்கள்; திருநங்கைகளுக்குக் கூட கல்லூரிகள் கட்டப்படும்; உழவர்களால் நெல்லுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்படும்; ஊழல்வாதிகளின் கைகள் சலவை செய்யப்படும்; நீதி தேவதையும் கண்களை விழித்துக் கொள்வாள். இறக்குமதிகள் குறுகி ஏற்றுமதிகள் பெருகும்; ஜாதிகள் மூச்சு முட்டி சாகும்; கட்சிக் கொடிகள் இறக்கப்படும்; தேசியக் கொடி நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளும்; கவிஞர்கள் சட்டப்புத்தகங்கள் எழுதுவார்கள்; ஓவியர்கள் புதிதாய் ஓர் உலகப்படம் வரைவார்கள்; பிச்சைக்காரர்கள் பெட்டிக்கடை வைப்பார்கள்; கொள்ளைக்காரர்கள் சிறைக்குள் வசிப்பர்கள். இதற்கெல்லாம் "போனது போகட்டும் தமிழன் நாடாளட்டும்"

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (4-Feb-18, 7:38 pm)
பார்வை : 905

மேலே