எதையோ தேடியபடி

எதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

எதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
என்று தெரியாமலே
எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்
வெகு தீவிரமாக

நீண்டும் நீளாமலும்
முடிந்துபோகும் நாட்களின்
பகலிலும் இரவிலும்
பனியிலும் வெயிலிலும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

வெறித்துப் பார்க்கும்
பார்வை வழியாக
என்னுலகம் துடைத்து
என்னகம் உடைத்து
இருள் உலகிற்குள்
மெல்லமெல்ல நடக்க
ஆரம்பிக்கிறது நான்
என்கிற சுயம்

தன்னிம்பிக்கை மறந்த
தன்னிலை மறந்த
மந்தகாச நிலை
மயக்க நிலை
மரண நேரத்திற்காக
காத்துக்கிடக்கும்
மணிக்கிழவியைப்போல
மனசு ஆடிக்கொண்டிருந்தது

புன்னகைக்க மறந்து
புவியின் அத்தனையும்
வேண்டாமென வெறுத்து
பூமியில் இன்பமெனவென
புலம்பத் தொடங்கும்
குரங்கு மனசில்
மெல்ல பிரசவிக்கத்
தொடங்குகிறது ரணத்தின்
ரயில்வண்டி பயணச்
தடக் தடக் சத்தம் .

மனதை நிரப்பிய
ரணம் ரங்கூன்
பறவையைப்போல
ரீங்காரம் இடுகிறது
தனக்குத் தெரிந்தாற்போல
அழுது பார்க்கிறது
உருகிய பனியாய்
தன் உருவம்
தொலைத்து குடுகுடுவென
போகிற போக்கில்
எங்காவது கண்காணாத
இடமொன்றைத் தேடி
ஓடத் துவங்குகிறது
அப்படியே காணாமல்
போய்விடவும் நினைக்கிறது


கிடைத்தும் கிடைக்காமலும்
தேடியும் தேடாமலும்
அழுதும் அழாமலும்
சிரித்தும் சிந்தித்தும்
சிலிர்த்தும் சினந்தும்
நகர்கிறது இந்த
நரகத்தின் சிறு
நுழைவாயிலின் பொழுதுகள்

விரும்பியும் விரும்பாமலும்
விழுந்து கொள்கிறேன்
தனிமையின் சிறையில்
தவிப்புகளின் அறையில்
மவுனத்தின் மொழியில்
மங்கிய ஒளியில்

தாமதமாய் விழித்து
சூடுபட்ட பூனையாய்
ஓட தொடங்குகிறேன்
ஐயோ இங்கெப்படி
வந்தேனென்று குழம்பிப்
போகிறேன் நானே
யாரென்ன்னை இங்கு
கொண்டு தள்ளியது
என விசும்பிகிறேன்

நான்தான் என்னை
இதற்குள் வேண்டுமென்றே
புதைத்துக் கொள்கிறேன்
என்பதை ஏற்றுக்கொள்ளாமலே
மூன்றுகால் முயலைபோல
தகதிமிதா ஆடுகின்ற
மனதை என்னதான்
செய்வதோ என்று
மழலையாய் எண்ணுகிறேன்

விழிமூடி நிற்கிறேன்
விசும்பலோடு சாய்கிறேன்

தொலைத்த திருகாணியைத்
வீட்டின் நாலாபக்கமும்
துழாவித் துழாவித்
தேடி தோற்றுப்போய்
சோர்ந்து போய்
சாமிபடம் முன்
சாய்ந்து உட்கார்ந்துகொண்டு
எப்படியாவது கண்ணில்
காட்டிடு சாமி
என்று இறைஞ்சும்
ஒற்றைக் கம்மல்காரியைப்
போல இருக்கிறது
இந்த தேடலின் முடிவு

எழுதியவர் : சஹாய சாரல்கள் (6-Feb-18, 10:22 am)
பார்வை : 115

மேலே