திருவிழாவும் சரோஜா அக்காவும்

திருவிழாவும் சரோஜா அக்காவும்

- அருள்.ஜெ


கொடை விழா நடக்குதுல எப்போடா வர்ற,,?

ஊரில் இருந்து அம்மாவின் போன் பல நினைவுகளை கிளப்பி விட்டு விட்டது. சிறு வயதில் கோவில் திருவிழா என்றால் ஏரியாவே கலகலக்கும் தெருவை அடைத்து பந்தல் போட்டு பல்ப்புகள் இரவை பகலாக்கும். சீரியல் பல்ப்புகளை மரத்தில் படர விட்டு மின் இணைப்பு கொடுத்திருப்பார்கள். அது மரங்களை அழகாக்கும். ஸ்பிக்கர்களை “ரண்டக்க ரண்டக்க” என்று அலற விட்டுக்கொண்டிருப்பார்கள். எங்களுக்கு தூக்கமே வராது.
நான் முனிஸ், பாண்டி, கோபால் என்று ஒரு கேங், தூக்கமே வராமல் விளையாடிக்கொண்டிருப்போம்.
“ ஏ.. டேய் வீட்டுக்கு வாடா” என அம்மா அழைக்கும் வரை விளையாட்டை தொடர்ந்து கொண்டிருப்போம் பின் மனம் இல்லாமல் வீட்டுக்கு திரும்பி போய் சாப்பிட்டு படுத்து விட்டுவோம் தூங்கும் முன் எப்பொழுது விடியும் என காத்திருந்து திடீர் திடீர் முழிப்பு வரும், பின் ஒரு வழியாய் விடிந்ததும் மறுபடியும் ரண்டக்க ரண்டக்க தான்..

திருவிழாவை பற்றி சொல்வதென்றால் சரோஜா அக்காவை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு திருவிழாவையும் அழகூட்டவென்றே தேவதைகள் வீதிகளில் வலம் வருவார்கள், ஏதேதோ காரணமாய் குறுக்கும் நெடுக்கும்மாய் கண்ணில் படும் அந்த தேவதைகளுக்கெலாம் தேவதையாய், ஒரு தேவதை மட்டும் சிறகு முளைத்து கவனிக்க வைக்கும் அது தான் சரோஜா அக்கா. சரோஜா அக்கா எங்க கேங் பாண்டியோட அக்கா.

திருவிழா சமயங்களில் மாலையில் தெரு மைதானத்தில் கபடி போட்டி நடக்கும் அத்தகைய சமயங்களில் மைதானம் வாலிப பசங்களால் நிரம்பி வழியும். பல்வேறு ஊர்களில் இருந்து திருவிழாவை காண வந்தவர்களால்
பேசி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு போகஸ் லைட்டு மாட்டி போட்டி நடைபெறும். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு உண்டு. போட்டியில் எப்பொழுதும் எங்க வாலிப பசங்க தான் ஜெயிப்போம். காரணம் சுரேஷ் அண்ணன். சுரேஷ் அண்ணன் ரைட் இறங்குனா எதிரணி கலங்கி தான் போகும்.. ஒவ்வொரு ரைட்டுளையும் குறைந்து மூணு பேரையாவது தொட்டுட்டு வந்துரும். பிடிக்க வருகையில் லாவகமாக ஜம்ப் பண்ணி கைகளில் சிக்காமல் எல்லை கோட்டை வந்து தொட்டுடும். நாங்கள் ஆச்சரியத்தில் வாயை பிளப்போம்.

சுரேஷ் அண்ணன் தான் திருவிழாவில் சவுண்டு சர்விஸ்..
அண்ணே, அண்ணே ரஜினி பாட்டு போடுங்க என்று அவரை நச்சரித்து போட வைப்போம். அவரும் சிரித்துக்கொண்டே போடுவார். அப்புறம் என்ன ஆட்டம் தான்.
தெருவில் சரோஜா அக்கா தென்படும் சமயங்கில் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் திடிரென்று நிற்கும் திடிரென ஒரு இளையராஜா பாடல் வரும்.

“ ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரம்மா இந்தபக்கம் குருவிக்கூடு
ஆண் குருவிதான் இரையை தேடி
போயிருந்தது
பெண் குருவிதான் கூட்டுக்குள்ள
காத்திருந்தது
வீட்டை தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ள குருவி ரெண்டுமே ஒண்ணா
சேர்ந்தது” - என்றோ

“ காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பில் ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே ” என்று காதல் கீதம் பாடும்
அப்படிபட்ட சமயங்கில் எல்லாம் சரோஜா அக்கா தோழிகளிடம் பேசும் சாக்கில் திண்ணையில் உக்காந்து விடுவார்,

மனதில் ஓன்று விழுந்ததம்மா
விழுந்து பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஓன்று தெரிந்ததம்மா
கைகளில் வந்தேன் புரிந்ததம்மா
நானறியாத உலகினை பார்த்தேன்
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்
எனக்கோர் கீதை உன் மனமே
படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே..”
என்று ஸ்பீக்கர் உருகும்..

தூரத்தில் சுரேஷ் அண்ணன் சரோஜா அக்காவையே பார்த்துக்கொண்டிருப்பார்..

முனிஸ் தான் கண்டு பிடித்து சொன்னான்.

டேய் யார் கிடையும் சொல்லிராத.

என்ன சொல்லுடா

யார் கிடையும் சொல்ல மாட்டேன்னு சொல்லு.

சொல்ல மாட்டேன்டா

சுரேஷ் அண்ணன்னும் சரோஜா அக்காவும் லவ் பண்றாங்கடா

என்னடா சொல்ற நிஜமாவா.?

ஆமாடா நேத்து ஒளிஞ்சு பிடிச்சு விளையண்டோம்ல அப்போ ஒளியுறதுக்காக அதோ அந்த வீடுக்கு பின்னாடி ஒளிய போனேனா அங்க சுரேஷ் அண்ணன்னும் சரோஜா அக்காவும் பேசிட்டு இருந்தாங்க..

எங்களால் நம்பவே முடியவில்லை..


கபடி போட்டி நடைபெறும் சமயங்களில் எல்லாம் சரோஜா அக்கா பாண்டியை துணைக்கு கூடிக்கொண்டு வந்து பார்க்கும். சரோஜா அக்கா கபடி பார்க்க வந்த அன்று மட்டும் கபடி போட்டியில் அனல் பறக்கும், வாலிபர்கள் சரோஜா அக்காவின் முன் தங்கள் வீரதீர பாராகிரமங்களை காட்ட முயல்வார்கள். ஆனால் சுரேஷ் அண்ணாவின் முன் தோற்று போவார்கள். சுரேஷ் அண்ணா ரைட் இறங்கும் சமயங்கில் எல்லாம் சரோஜா அக்கா அமைதியாய் பார்க்கும், அவர் எதிரணி ஆளுங்களை தொட்டுவிட்டு வரும் சமயங்கில் எல்லாம் சரோஜா அக்கா முகத்தில் ஒரு சந்தோஷம் பொங்கும். சுரேஷ் அண்ணன்னும் ஓரக்கண்ணில் சரோஜா அக்காவை பார்த்து சிரித்து கொள்வார்

சரோஜா அக்கா அழகா பாடும் திருவிழாவின் ஒவ்வொரு நாள் இரவிலும் முளப்பாரியை அடுக்கி வைத்து பெண்கள் அனைவரும் சேர்ந்து கும்மி அடிப்பார்கள். அதற்க்கு சரோஜா அக்காதான் கும்மி பாட்டு பாடும் பாடென்றால் தானாக இட்டுகட்டி பாடிய பாடல்கள்.
அன்றும் சுரேஷ் அண்ணன் மைக்கை நீட்டி கொடுக்க சரோஜா அக்கா பாடியது..

“ பூப்பூவாய் பூத்திருந்தேன்
எப்போ வரப்போரிர் மன்னவரே எம் மன்னவரே
கும்மியடி பெண்ணே கும்மியடி “ - என சுரேஷ் அண்ணனை பார்த்துக்கொண்டே பாடியது

சுரேஷ் அண்ணன்னோ சரோஜா அக்காவின் மீது வைத்த கண்ணை எடுக்கவில்லை..

இப்படியாக ஒவ்வொரு திருவிழாவிலும் திருவிழாவுக்கு பின்னான்ன நாட்களில் எங்கோ ஒரு தோப்பிலோ ஆட்கள் யாருமற்ற இடங்களிலோ இவர்கள் காதல் வளர்ந்தது..

பின்னான்ன நாட்களில் எல்லா வீடுகளையும் போல சரோஜா அக்கா வீட்டிலும் திருமண பேச்சு வந்தது, சரோஜா அக்காவின் பெற்றோர் வரன் பார்த்தார்கள் நிச்சயம் பார்த்து போக பக்கத்து ஊரில் இருந்து ஆட்கள் வந்து போனார்கள். எங்களுக்கு பயங்கர சந்தேகம் சரோஜா அக்கா கல்யாணத்துக்கு ஒத்துகிருச்சா.?

ஏலேய்.. பாண்டி உங்க அக்காவ பொண்ணு பாக்க வந்துட்டு போனாங்களாம்ல, என்ன உங்க அக்கா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிடுச்சா..?

இல்ல..

ஏம்ல.. என்னாச்சி?

அக்காவுக்கு அந்த மாப்ளைய பிடிக்களையாம்டே..

எப்படி பிடிக்கும் அதான் உங்க அக்கா லவ் பண்ணுதுல- அவசரப்பட்டு சொல்லிவிட்டான் முனிஸ்..

என்னால சொல்ற எங்க அக்கா லவ் பண்ணுதா யாரா லவ் பண்ணுது.? என்றான் பாண்டி அதிர்ச்சியுடன்..

அது நம்ம.. என சொல்ல வாய் எடுத்த முனிஸ்சை வாயை பொத்தினேன்..

டேய் வேணாண்டா சொல்லாத...

டேய் சொல்ற யாரடா லவ் பண்ணுது..?

அது சும்மா சொன்னேன்டா..
இல்லடா சும்மா வெளையாட்டுக்கு தான் அப்படி சொன்னோம்..

எங்களை சந்தேகத்துடன் பார்த்தபடி போனான்..

அன்று இரவு சரோஜா அக்கா வீட்டில் கடகடவென சத்தம், கத்தல்கள்..

மறுநாள் எங்களை முறைத்துக் கொண்டு கடந்து போன பாண்டியை நிப்பாட்டி..

என்னடா சத்தம் நேத்து நைட்டு உங்கள் வீட்டுல.?

நீங்க சொன்னத வீட்டுல சொல்லிட்டேன், அப்பா அக்கா கிட்ட அது யாரு போய் அவன வெட்டி பொதச்சுட்டு வந்துறேன்னு சத்தம் போட்டாரு, அக்கா அது யாருன்னு சொல்லவே இல்ல. அன்னைக்கு வந்துட்டு போனார்ல அவருக்கும் எங்க அக்காவுக்கும் சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுது. இனிமே உங்க கூட பேச மாட்டேன் என்றபடி போனான்..

அதன் பிறகு கல்யாண ஏற்பாடுகள் ஜோருராக நடந்து, அக்காவின் திருமணமும் நடந்து முடிந்தது, அக்கா வாக்கபட்டு வேறுர் சென்றது..

இப்பொழுதெல்லாம் சுரேஷ் அண்ணன் கபடி மேட்ச்களில் கலந்து கொள்வதில்லை. சுரேஷ் அண்ணனின் ரேடியோ கடை பக்கமா போகும் போதெலாம் இளையராஜாவின் சோக பாடல்கள் காற்றில் மிதந்து வரும் தாடி வளர்த்து ஒருமாதிரி ஆகிப்போனது..

அடுத்த வருட கோவில் திருவிழாவுக்கு சரோஜா அக்கா வந்திருந்தது..

வழக்கம் போல அந்த வருடம்மும் சுரேஷ் அண்ணன் தான் ரேடியோ போட்டது.. அண்ணின் இசையில் இந்த முறை காதல் பாடல்கள் அதிகம் இல்லை மனதை பிழியும் சோக பாடல்கள் தான்..

“ இளமை என்னும் பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
தென்றல் வந்து தென்றலை சேர்ந்த பின்பும்
தென்றலே
கண்கள் ரெண்டும் காணும் காட்சி
ஓன்றுதான்
ஆத்ம ராகம் பாடுவோம்.. அளவில்லாத ஆனந்தம்
மனதிலே..

ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம்
ஊர்வலம்..
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு.. என் கண்ணோடு நீ வா..
ஒரே முறை உன் தரிசனம்.. உலா வரும் நம் ஊர்வலம்.. “


இந்த முறை சுரேஷ் அண்ணன் கபடியில் கலந்து கொள்ளவில்லை, நாங்கள் தோற்று போன்னோம். வழக்கமாக முளைப்பாரி வைத்து கும்மியடிக்கும் பாடலில் சரோஜா அக்கா வந்திருந்தது, வழக்கத்தை விட அதிகமான அலங்காரம்..

சரோஜா அக்கா பாடியது..

“ பூப்பூவாய் பூத்திருந்தேன்
எப்போ வரபோரிர் மன்னவரே எம் மன்னவரே
கும்மியடி பெண்ணே கும்மியடி “

சுரேஷ் அண்ணன் நிமிர்ந்து அக்காவை பார்த்தது..
இருவர் பார்வைகளும் கலந்து கொண்டன..

மறுநாள் பாட்டு கச்சேரி நடந்தது..

அதற்கடுத்தநாள் காலை ஊரே பரபரப்பாக இருந்தது..

முனிஸ் ஒடி வந்தான்..

டேய் என்னாச்சிடா..?

சுரேஷ் அண்ணன்னும் சரோஜா அக்காவும் தோப்புல தூக்கு மாட்டிட்டங்கடா..

ஊரே ஓடி பார்த்தது...

சுரேஷ் அண்ணனும் சரோஜா அக்காவின் வெற்று உடல்கள் தூக்கில் ஆடிக்கொண்டிருந்தன. அந்த நிலையுலும் இருவர் கைகளும் கெட்டியாக இருக்கிப்பிடித்திருந்தன. சிரம்மபட்டு கைகளை பிரித்து இடுகாட்டில் இருவரையும் தனி தனியாக எரித்தனர்.

நிரம்ப நாளுக்கு அப்புறம் மறுபடியும் ஊர் திருவிழாவுக்கு போயிருந்தேன்..

முனிசும் நானும் சந்தித்துக்கொண்டு மது அருந்தி சுரேஷ் அண்ணனையும் சரோஜா அக்காவையும் பற்றி பேசிக்கொண்டோம்..

முனிஸ் திடிரென அழ ஆரமித்தான்..

மாப்ள நான் தப்பு பணிட்டேன்டா, நான் மட்டும் பாண்டி கிட்ட அன்னைக்கு சொல்லாம இருந்திருந்திருந்தா ரெண்டு பேரும் வாழ்ந்திருப்பாங்கல்ல....

தூரத்தில் திருவிழா பாடலில் கீதம் மிதந்து வந்தது

“ கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது
காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணிர் அது யாராலே
கன்னியின் கழுத்தை பார்த்தால்
மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ
போலவே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை
மூடு
ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிராரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம் இந்த நேரம்... “

-முற்றும்

எழுதியவர்
- அருள்.ஜெ

எழுதியவர் : அருள் ஜெ (19-Apr-18, 8:47 am)
பார்வை : 382

மேலே