பூட்ட முடியாத பொக்கிஷம்
பூட்ட முடியாத பொக்கிஷம்
பக்கத்து மலைகளின் பசுமையை
பளிச்செனக் காட்டாத கிழிந்த ஆடை-
பனி அரைகுறையாகப் போர்த்த,
அது என் கண்களுக்குள் புகுந்து
இதத்தை இதயத்தில் நுழைத்து,
இன்பமாய் ஊட்டியது கிளுகிளுப்பு.
ஆடையை உரிக்க வந்த கதிரவன்.
ஆசையாய் வாரிக் கொள்ள வந்த
ஆர்ப்பரிக்கும் அழகி நதியவள்.
தான் தொட்ட மலைகளை இங்கு
யார் தொடவும் தான் நோகுமென
இருளால் போர்த்திப் பூட்டிவிட்டுக்
கதிர்ச் சாவியைச் சுருக்கி எடுத்து
மேற்குப் புறம் சென்றான் ஆதவன்.
கள்ளச் சாவி போட்டதடா நிலா.
மேகங்களாவதற்கே துடித்திருந்த
நீராவி மென்புகை கொஞ்சமும்,
இலேசான பனியின் ஏட்டையும்
பசுமைக்கு அழகாய்ப் போர்த்தி
அம்புலி நீங்கினாள் விடியலில்.
பதறிய கதிரவன் அது பார்த்தான்.
மலைப் பனி துடைத்தெடுத்தான்.
பசுமையை அவன் சரிபார்த்தான்.
பகல் ஒன்று தொடங்கி வைத்தான்!