எழுத்தாளர் சந்திப்பு

ஆங்கிரி பேர்ட்ஸ் புது வெர்சன் கேம் பற்றி பார்த்து கொண்டிருக்கும் போதுதான் அந்த அழைப்பு வந்தது.

என்னய்யா பண்றே...கிளம்பி வாரது. சும்மா இருந்தா பொறப்பட்டு வா. புதுசா சுவீடிஷ் வோட்கா வந்துருக்கு என்று அந்த எழுத்தாளர் அழைத்தார்.

எழுத்தாளர் என்றால் பளபள ஸ்டார் எழுத்தாளர். நாடு அறிந்தவர்.
ஒரே நாளில் சங்க காலத்தில் சிலும்பி பறந்து கியூபா சுருட்டை புகைத்து பாரிஸில் பாஸ்டில் விஸ்கியை அருந்தி நேரே ஹாலிவுட் பயணித்து நதாலியாவின் முலைகளை பிசைந்து காசியில் குளித்து மாலையில் தேவாரம் ஓதி கரை ஏறி விடுவார். இதுவெல்லாம் எழுத்தில்தான்.

அவர் அழைக்கும் போது போகாது இருக்க முடியுமா? கிளம்பினேன்.


அவர் பெயர் நாடறிந்த ஒன்றுதான்.  நீங்கள் நுட்பமான வாசகர் எனில் நீங்கள் வாங்கும் பத்து புத்தகங்களில் இவருடையது ஒன்று நிச்சயம் இருக்கும்.

ஆனால் தமிழன் மீது கொஞ்சம் கோபம் அதிகம். அவர் சுத்த தமிழன்தான்.
இருந்தாலும் அண்ணன் தம்பி சண்டை மாதிரிதான் அவரின் இப்படிப்பட்ட கோபம் என்று நினைக்கும்படி இருக்கும்.

இவர் எழுத்தாளர் என்பதே ஒரு விழாவில்தான் எனக்கு தெரிந்தது. அது கொஞ்சம் பழைய காலம்.

எலும்பும் தோலுமாய் ஒரு பதிப்பாளர் தம் மணிவிழா நிகழ்வின்போது தனது தாத்தா பற்றி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.

அந்த தாத்தா ரங்கூனில் சம்பாதித்தது எல்லாம் பதிப்பகமாய் இந்த பேரனால் வளர்த்து எடுக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு போனபோதுதான் நம் எழுத்தாளர் எனக்கு அறிமுகம் ஆனார்.
மண்டப வாசலில் ஃப்ருட்டி குளிர்பானம் மலை போல் குவிந்து இருக்க வருவோர் போவோர் இஷ்டம்போல் ஸ்ட்ரா குத்தி உறிஞ்சி குடித்தனர்.


நம்மாளுங்களுக்கு ஒண்ணை வாயில சப்ப குடுத்துட்டா போதும் என்ன சொன்னாலும் ஏத்துக்குவான் என்று எழுத்தாளர் சொன்ன போது எனக்கு கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டது.

என்ன சார் இப்படி சொல்றீங்க...

பின்னே என்னய்யா? அந்த கிழம்  தன்னோட தாத்தாவை பத்தி எழுதியிருக்கே..அதுல கொஞ்சமாச்சும் விவரணைகள் இருக்கா. அமெரிக்கால தம்மாத்தூண்டு பய எழுதறான் பாத்துக்க...அத்தனை விஷயம் இருக்கு...மொத வரியே கிளைமட்லதான் ஆரம்பிக்கிறான். அவ்வளவு சயின்ஸ் புத்தி. நம்மாளுங்க புள்ளையார் சுழி போடாம பேரே எழுத மாட்டேங்கரங்க.

நான் கம்மென்று இருந்தேன். பின்னாளில் இதே பப்ளிஷர் இவரின் ஒரு புத்தகத்தை பதிப்பித்து கொடுத்தபோது அதே ரங்கூன் கதையை வாய் கூசாமல் புகழ்ந்து கொண்டாடியபோது அப்படியே ஆடிப்போய்விட்டேன்.

இது பற்றி கேட்டு அறியவேண்டும் என்று நினைத்தபோதுதான் ஒருநாள் அந்த செய்தி வந்தது.

வேறொன்றும் இல்லை. அன்னார் இரவோடு இரவாக புத்த மதத்துக்கு மாறியதுதான். ஒரே குழப்பமாக இருந்தது.

மூன்று நாட்கள் கழித்து நான் அன்னார் வீட்டுக்கு போனபோது கச்சாமி கச்சாமி சத்தம் கேட்கும் என்றுதான் நினைத்தேன்.

கிச்சாமி கிச்சாமி என கேட்டது. உள்ளே கிரேஸி மோகன் நாடகம் பார்த்தபடி யாரோ வாங்கி தந்த ஓசி சரக்கை ஏற்றி கொண்டிருந்தார்.

பார்த்தவுடன் முகம் மலர்ந்தார்.
சுத்த சநாதனமயா நம்ம ஆளுங்க. ஒரே அடிமைத்தனம்... அதான் புத்தமதம் போய்ட்டேன் என்றார்.

அவங்க எல்லாம் ரொம்ப அஹிம்சை இல்லையா என்றேன்.

ஆமா... படிச்சுப்பாருயா அப்ப தெரியும். மஹாயான கோட்பாட்டுலே...

நான் இடைமறித்தேன்.

நீங்க ஏன் சமணமதம் தழுவி இருக்க கூடாது. சிலோன்ல புத்தமதம் செய்யற வேலைகள் கொஞ்சம் மனசை காயப்படுத்தி இருக்குதே?

நான் நான் வெஜ்... அதான்...

அப்போ முஸ்லிம் மதம் போய் இருக்கலாமே....?

மூச்...பேச கூடாது...மாமி இருக்கா...

இந்த அம்மாளு சுத்த சைவம். அவர் அம்மா அசைவம்தான். வாலிப வயதில் நான்கு குடித்தனம் செய்து ஐந்தாவதாய் ஒண்டிய இடம் ஒரு சைவ மனிதர். விதிவசத்தால் எழுத்தாளருக்கு வேண்டியோ என்னமோ ஒரு மகளை ஈன்றார். சைவமான பெண் பிறந்தார். சுட்டி. துறுதுறு.

அந்த மகள் நன்கு கல்வி கற்று பேங்க் வேலை கிடைக்க அங்கு நம் எழுத்தாளருக்கு பழக்கம் ஆனது. பின் எழுத்தாளன் என்றால் குறைந்தபட்சம் ஜாதி மறுப்பாவது செய்ய வேண்டும் அல்லவா? மணம் செய்து கொண்டு வந்தார்.

அம்மாளு மீனும் மட்டனும் வாங்கி சுத்தம் செய்து அமுது படைக்கும் காட்சியை ஒரு ஏட்டில் நான்கு வாரம் எழுதித்தள்ளி தன் ஜாதி மறுப்பை காட்டிக்கொண்டும் ஆயிற்று.

இந்த மட்டன் சிக்கன் சாப்பாடு எல்லாம் இவருக்கு முன்பே கமல்ஹாசன் பூணுலை பகிஷ்கரித்து செய்து முடித்த கையோடு தானும் அதையே செய்தபோது என்னவோ அது அத்தனை எடுபடாது போயிற்று.

உடனே போட்டார் பாருங்கள் ஒரு பேட்டியில்...எனக்கு என் அப்பா பேரே தெரியாது. எங்க அம்மாக்கும் தெரியாது. நானா ஒரு பேரை வச்சிட்டு இருக்கேன் என்றார்.

இது கொஞ்சம் ஓடியது. இந்த கேப்பில் ரெண்டு ஜெர்மன் தத்துவவியாளர்களை மேடைதோறும் பேசி பேசி அதை வைத்து ரெண்டு புத்தகம் போணி செய்தார்.

ஹிட் எழுத்தாளர் ஆனது இப்படித்தான். என்றாலும் கூட அபார ஞானம் என்பதால் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

ஒரு குப்பி விஸ்கிக்கு யாரை வேண்டுமானாலும் கீழ்தரமாய் பேசும் ஆள் என்பதால் இலக்கிய வட்டம் உற்று கவனிக்க ஆரம்பித்தது.

ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளும்போது எதிர் முகாம் ஆட்கள் முகவாயில் எகிறி விட்டதால் ஏழு தையல் போட்டு காயத்தை மூடும் நிலை வந்தது.

அதுவரை இங்கிலாந்து வீரனை போல் வெட்டி வளர்த்த ஹார்ஸ்ஷு மீசையை உதறிவிட்டு பிரெஞ்ச் வான்டைக் தாடி வைத்து தையல் வடுவை மறைக்க வேண்டியதாயிற்று.

இப்படி பல அகட விகடம் செய்துதான் ஒரு கம்பீரமான எழுத்தாளர் ஆக முடிந்தது என்றால் உண்மையில் மனதுக்கு வேதனையாகவே இருக்கிறது.

இருந்தாலும் சிறந்த எழுத்தாளர்தான்.

சொந்த வாழ்க்கையை குறிப்பில் எடுத்துக்கொண்டு நாம் எந்த  ஒரு எழுத்தாளனையும் படிக்க ஆரம்பித்தால் அது சரியாக வராது என்ற பொன்மொழி பலரையும் பல தேசத்தில் இதுவரை காப்பாற்றிதானே வந்திருக்கிறது.

அப்படி பார்க்கும்போது இது ஒன்றும் பெரும் குற்றம் இல்லை.

அவர் வீட்டுக்கு போனபோது முகம் ரத்தம் சுண்டி இருந்தது.

மாமி கோச்சுண்டு போய்ட்டா என்றார். அந்த துக்கத்துக்குதான் இப்போது சுருதி ஏற்றிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.

என்ன சார் ஆச்சு?

யோவ்..உனக்கு தெரியாதா? அந்த காலேஜ்  பொண்ணு....

ஆமா உங்க மக வயசு...

அப்படி சொல்லாத...அவ வாசகி.

சரி...வாசகி...அதுக்கு என்ன?

அவளோட கொஞ்சம் பழக்கம் முத்தி அப்படி இப்படி பேசறது தெரிஞ்சு போய் இந்த கிழவி கோவிச்சுட்டு போய்ட்டா..


அடக்கடவுளே...நீங்க அப்படிப்பட்ட ஆள் இல்லையே.

யோவ்...மனுசன்னா நாலும் இருக்கும்யா.

அப்படினா?

அப்படித்தான்.

நான் எழுந்து கொண்டேன்.

எழுத்தாளரே.. தப்பா நினைச்சாலும் பரவாயில்ல...இதுக்கு நீங்க தூக்கு போட்டுக்கலாம்.

பேசுயா..இன்டர்நெட்ல என்னை நாற அடிக்கிறான். நீயும் பேசு. ஆனா நான் சொல்லித்தான் பல பிரெஞ்சு நாவல் இங்கே தெரிய ஆரம்பிச்சு இருக்கு. மோசர்ட் பத்தி முதலில் எழுதினதே நான்தான். அத கேட்டுட்டு எப்படி தூங்கணும்னு இந்த பன்னாடை பசங்களுக்கு சொல்லி குடுத்ததே நான்தான்.

சாக்ரடீஸை வறுத்து சாப்டவன் நானு. ஓசிக்குடிக்கு சோரம் போய்ட்டான்னு எழுதரவன் யார்னு எனக்கு தெரியும். யோவ்..எழுதி வச்சுக்க ஒரு நாவல் ஒரே நாவல் அடுத்து எழுத போறேன். அப்போ இவனுங்க மொத்த குப்பையும் வெளியே வரும் பாரு...


பேசிக்கொண்டே போனார். இன்னும் உளற ஆரம்பிக்கும் முன் கிளம்பி வாசலுக்கு வந்தேன்.

நான்கு இளைஞர்கள் வாசலில் நின்று இருந்தனர்.

சார் உள்ளே இருக்கறாரா? வரச்சொல்லி இருந்தார் எழுதறது பத்தி விளக்கமா பேசணும் வாங்கன்னு போன் பண்ணினார். உள்ளே போகலாமா சார் என்று கேட்டனர்.

யார் பெற்ற பிள்ளைகளோ?

தலையை குனிந்து வழி விட்டு இறங்கி செல்ல ஆரம்பித்தேன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (12-Jun-19, 9:12 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 83

மேலே