ஒரு காதலின் கதை
உனை காதலித்துக்கொண்டிருந்தபொழுது
உலகத்தில் நீ மட்டுமே
பேரழகியாய் இருந்தாய்.
உனை காதலித்துக்கொண்டிருந்தபொழுது
உன்னுடன் சண்டையிட்டு
பேசாமலிருந்த நாட்களே அதிகம்..
உனக்கும் தெரிந்திருந்தது
உனை எவ்வளவு நேசிக்கிறேன் என்று..
இருப்பினும்
பேரன்பு மட்டுமே..காதலிக்கவில்லை
என நிராகரித்தாய்
நீ உணரவில்லை
உனதன்பின் தூய்மையே
காதலிக்கச்செய்தது என..
ஒருநாளில் நீ கூறிய உனது
வலிமிகுந்த காதல்கதையில்
எப்போது எனை இருத்திக்கொண்டேன் என்பது
நிச்சயமாக நினைவில் இல்லை..
பெருங்கோபத்துடன் உனை சகித்துக்கொண்டே
காதலித்திருந்தேன்..
எந்தப்புள்ளியில் உன்னால் நான்
வெறுக்கப்பட்டேன் என்பது
இன்றுவரை புரியாத புதிர்..
காலச்சுழற்சியில் அந்த காதல்மறைந்தாலும்
என் புனிதத்தோழியாய் நீ..
இன்றுவரை தொடரும் உன் பேரன்பில்
துளியும் பொய்யில்லை
இப்போது பெருமைப்படுகிறேன் தோழி..
உனை காதலித்ததற்காக..