காதல்-தேவையான அளவு

காதலில் விழுந்தேன்
என்றேன் தோழியிடம்
துள்ளிக் குதித்து
அள்ளித் தொடுத்தாள்
கேள்வி கணைகளை
என்ன செய்தான் உனக்காக?
விண்ணை வளைத்தானா?
மணலை திரித்தானா?
நிலவை பிடித்தானா?
தாஜ்மஹால் கட்டினானா?
அடுக்கினாள் அவள்
தடுத்து நிறுத்தி
எடுத்து சொன்னேன்
புத்தக காதல் இல்லையடி
சற்று பூமிக்கு இறங்கிவாவென்று
என்னதான் செய்தான் அவன்?
எதில் நீ விழுந்தாய்?
என்றாள்

அடுக்கினேன் நானும்
என்னிடம்
கண்ணியமாய் பழகுகிறான்
உண்மையாய் பேசுகிறான்
சாதித்தால் தட்டிக்கொடுக்கிறான்
தடுமாறினால் தாங்குகிறான்
வலியை பகிர்கிறான்
நிழலாய் தொடர்கிறான்
(அலாவுதீன்)விளக்கைத் தேய்க்குமுன்னே
ஆசையை நிறைவேற்ற
கண்முன்னே நிற்கின்றான்
வேறென்ன வேண்டும்
காதலில் விழ
விழுந்தேனடி தோழியென்றேன்.

ஒரு நொடி தயங்காமல்
விரைந்து சொன்னாள்
இது காதல் வரையறையில் வரவில்லையென்று
குழம்பிப்போய் புரியாமல்
கேட்டேன் வரையறைதான்
என்னவென்று?

காலையில் வாட்ஸாப்பில் வணக்கம்
பலமணி கைபேசி அழைப்பு
இணையத்தில் இணையர் புகைப்படங்கள்
காதலர்தினத்தில் ரோஜா பூங்கொத்து
பிறந்தநாளில் பரிசுடன் வியப்பு
பூங்காவில் சிலமணி கடற்கரையில் பலமணி
நடுநடுவே 'கண்மணி', 'பொன்மணி'
இதுதான் இன்றைய தேதியில்
காதல் வரையறை என்றாள்

அச்சத்தில் அவசரமாய் சொன்னேன்
ஒன்றுகூட என்காதலில் இல்லையே
ஆனால் இன்னும் சிலவும் இல்லையென்றேன் என் காதலில்
என்னவென்றாள் அவள்?

என் தவறுகள் அவனை பாதிப்பதில்லை
என் குறைகள் பெரிதாய் தெரிவதில்லை
என் கோபங்கள் அவனை மாற்றவில்லை
என் சுதந்திரம் சற்றும் உறுத்தவில்லை
நீயா நானா போட்டியில்லை
நானே பெரியவன் கூச்சலில்லை
ஆண்மை திமிரோ அடியோடில்லை
ஏற்றத் தாழ்வுக்கோ பேச்சேயில்லை
இது போதாதா காதலிக்கவென்றேன்?
இதுவும் வரையரையில் இல்லையென்றாள்.

அருகில் அழைத்து அழுத்தி சொன்னேன்
சரியாய் கேள் ஒருமுறை சொல்வேன்
எனக்கு
காவியக்காதல் தேவை இல்லை
அமரக்காதலில் விருப்பமும்  இல்லை
இணையக்காதலிலோ நம்பிக்கையே இல்லை
அகராதி வரையறை வார்த்தைக்கு மட்டும்
வாழ்க்கைக்கு அல்ல
என் வாழ்க்கை
என் காதல்
வரையறையும் எனதே
கேளடி கவனமாக கேள்
என்னை "என்னையாக" ஏற்றுக்கொண்டான் அவன்
கூடவும் அல்ல குறையவும் அல்ல
அவனை "அவனாக" ஏற்றுக்கொண்டேன் நான்
கூடவும் அல்ல குறையவும் அல்ல
வாழ்க்கை உணவு ருசியாய் அமைய
தேவையான அளவு காதல் போதும்
துளி கூடவும் அல்ல குறையவும் அல்ல

முடித்தேன் விளக்கத்தை முழித்தாள் அவள்.

எழுதியவர் : லக்கி (3-Jul-20, 3:19 pm)
பார்வை : 248

மேலே