சலனமேயில்லாமல்

வானவீதியில் உயரஉயர எங்கோ
பறந்திடத் துடிக்கிறேன்....
ஊர்குருவியாய் அல்ல
பிணந்தின்னும் செங்கழுகாய் எங்கும்
சலனமேயில்லாமல்....
நெடுந்தூரத்திற்கப்பால் தொடுவானில்
நானும் கலந்திடத்துடிக்கிறேன்
விண்ணில் மண்ணையும்
மண்ணில் விண்ணையும் கலந்தெங்கும்
சலனமேயில்லாமல்...
கண்சிமிட்டும் தாரகையாய்
வானில் எங்கோ மின்னிடத்துடிக்கிறேன்
நெருங்கவே முடியாத தூரத்தில்
நான்மட்டும் தனிமையாய் எங்கும்
சலனமேயில்லாமல்....
கட்டுகள் உடைந்திட
பெருவெள்ளமாய் பாய்ந்திடத் துடிக்கிறேன்
காடு மலை மேடு பள்ளம்
அத்தனையும் கரைத்து எங்கும்
சலனமேயில்லாமல்.....
தீயின் நாவாய் இவ்வுலகில்
எங்கும் எரிந்திடத் துடிக்கிறேன்
எரிமலையையும் பனிமலையையும்
எரித்து சாம்பலாக்கி எங்கும்
சலனமேயில்லாமல்......
தென்றலை ஒழித்து
ஊழியாய் எங்கும் வீசிடத் துடிக்கிறேன்
குப்பையாய் வாழ்க்கையினை
மண்ணில் அழுத்திட்டு எங்கும்
சலனமேயில்லாமல்.....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-Feb-22, 9:43 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 369

மேலே