கைது
கைது
உங்களுக்கு வந்திருக்கற நோய் கல்லீரல் சம்பந்தப்பட்டது, ஏறக்குறைய பாதிக்கு மேல டேமேஜ் ஆயிடுச்சு, நீங்க ஒரு மூணு மாசமாவது ட்ரீட்மெண்ட்டுக்கு ஒத்துக்கணும், இல்லையின்னா,.. சாரி… அதுக்கப்புறம் எங்கனால ஒண்ணும் செய்ய முடியாது. அப்புறம் வாழ்க்கை ஒரு வருசம் தான் நல்லா யோசிச்சுக்குங்க.
டாக்டரின் வார்த்தைகளை கண் மூடி கேட்டபடி அமர்ந்திருந்தான் எட்மண்ட்.
கிட்டத்தட்ட ஐம்பத்தைந்தை தாண்டி விட்டவன், எல்லா வசதிகளும் இருக்கிறது, நங்கு அனுபவித்து வாழ இன்னும் வருடங்கள் இருக்கின்றன. ஆனால் டாக்டரோ இனி வாழப்போவதே ஒரு வருடம்தான் என்கிறார். பேசாமல் சிகிச்சை எடுத்து கொள்ளலாம், ஆனால், மூன்று மாதம் என்பது தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தில்..!
ஓ..கே டாக்டர், இரண்டு நாள் டைம் கொடுங்க, அதுக்கப்புறம் சொல்றேன், எழுந்து வேகமாக கிளம்பினான். வெளியில் காத்திருந்த மற்றவர்களை பார்ப்பது கூட தப்பு என்பது போல குனிந்த தலையோடு வேகமாக வெளியேறினான்.
அவன் எழுந்து சென்ற பின்னால், டாக்டர் ஏதோ யோசனையோடு எழுந்தவர் பின்புறமாக இருந்த ஜன்னல் வழியாக பார்த்தார். சாதாரண நோயாளி போல வந்தவன் பின்புறம் நின்றிருந்த விலையுயர்ந்த காரில் அவன் எறுவதையும், அவனருகில் இரண்டு மூன்று பேர் பாதுகாப்புக்காக நிற்பதையும் பார்த்தார். மேசையின் மேலிருந்த செல்போனின் அழைப்பு வர எடுத்தார். ஹலோ… வந்துட்டு போயிட்டாரு, ஆமா கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுத்துத்தான் ஆகணும்னு சொல்லிட்டேன். ஓ.கே சரி..
டாக்டர் நான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ஹாஸ்பிடல்ல நாளைக்கு அட்மிசன் ஆகிக்கறேன், மூணு மாசத்துலா எல்லாம் கியூர் ஆயிடுமா டாக்டர்?
நீங்க எங்களோட ட்ரீட்மெண்டுக்கு ஒத்துழைச்சீங்கன்னா கண்டிப்பா மூணு மாசத்துல கியூர் ஆகி பழயபடி நீங்க இருக்கலாம், என்ன, முன்ன இருந்த பழக்கங்களை மாத்திக்கணும், அவ்வளவுதான்.
ஓ.கே., டாக்டர்..!
மருத்துவமனையின் மூன்றாம் தளத்தின் ஒரு அறையில் எட்மண்ட் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு உதவிக்கு தனியான ஒரு நர்ஸ், மற்றும் உதவிக்கு ஒருத்தனும் நியமிக்கப்பட்டனர்.
ஒரு வாரம் ஓடியிருக்க, எட்மண்டுக்கு ஆபரேசன் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதாக ஞாபகப்படுத்தி விட்டு சென்றார் டாக்டர்.
ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்படும் முன் எட்மண்ட் இருக்கும் அறைக்கும் காவல் சீருடையுடன் நான்கைந்து பேர் உள்ளே நுழைந்தனர். மிஸ்டர் எட்மண்ட் நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். இதோ வாரண்ட் அவனிடம் காட்டினர்.
இதை எதிர்த்து குரல் கொடுத்தான் எட்மண்டுடன் இருந்தவன், அவனை அமைதியாக இருக்க சொன்ன எட்மண்ட், நான் இப்ப ட்ரீட்மெண்ட்டுல இருக்கேன், அதுவும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபரேசனுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க, சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆபரேசனுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே வந்தனர்.
அவர்கள் போலீஸ்காரர்களை வித்தியாசமாக பார்த்தபடியே எட்மண்டுக்கு உடல் பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தனர். அதற்குள் டாக்டரிடம் யாரோ போய் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் வேகமாக உள்ளே வந்தார்.
என்ன நடக்குது இங்கே? ஆபரேசன் பண்ணப்போற பேசண்டை தொந்தரவு பண்ணிட்டு இருக்கறீங்க? நான் ஒத்துக்க மாட்டேன். ஒரு நோயாளியோட உயிருக்கு நாங்கதான் உத்தரவாதம், அப்படி இருக்கும்போது நீங்க எப்படி இங்க வரலாம்?
டாக்டர் சட்டப்படி அவர் இப்ப எங்க கைதி, அவரை எந்த விதத்துலய்யும் தொந்தரவு செய்ய மாட்டோம், அதே நேரத்தில அவருக்கு ஆபரேசன் முடிஞ்ச பின்னால எங்க கஷ்டடியில் எடுத்துக்குவோம். இதுக்கு கோர்ட் பர்மிசனோட வந்திருக்கோம்.
டாக்டர் கத்தினார், எனக்கு அதை பத்தி எந்த அக்கறையும் இல்லை, ஸ்டாப்ஸ், அவரை உடனே தியேட்டருக்கு கூட்டிட்டூ போங்க குயிக்..
அறுவை சிகிச்சை முடிந்த பின்னால் காவல்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு வாரம் வைக்கப்பட்டிருந்த எட்மண்ட் சிறைச்சாலைக்கு அப்படியே கொண்டு போகப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதுவரை எட்மண்டு மீது இருந்த இருபத்தாறு வழக்குகள், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போன்ற குற்றங்கள் பட்டியலிடப்பட்டு நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் அவருக்கு ஆயுள் கால சிறை தண்டனையும் வாங்கி கொடுத்து விட்டது காவல்துறை.
டாக்டரிடம் நன்றி சொல்லி கொண்டிருந்தார், போலீஸ் கமிசனர், ரொம்ப நன்றி டாக்டர், நாங்க ரொம்ப நாளா இவனை பிடிக்க முயற்சி பண்ணிகிட்டிருந் -தோம், ஆனா தப்பிச்சுகிட்டே இருந்தான், நிறைய வழக்குகள் இவன் மேல இருக்கு, என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கறப்பத்தான் அவன் உங்க கிட்டே மருத்துவம் பார்க்கறதுக்கு இரகசியமா வந்துட்டு போறான்னு தெரிஞ்சது. உங்க உதவி மட்டும் இல்லையின்னா அவனை ஒரு இடத்துல அடைச்சு வைக்க முடியாது, விலாங்கு மீனாட்டம் நழுவிட்டே இருப்பான்.
டாகடர் கவலையுடன் சிரித்தார், எனக்கும் கவலையாத்தான் இருந்துச்சு, எங்க நம்ம குட்டு வெளிப்பட்டா அவன் என்னைய முடிச்சிடுவான்னு. நல்ல வேளையா நான் சொல்றதை அப்படியே நம்பிட்டான், வேற டாக்டர்கிட்ட போயிருந்தான்னா என் குட்டு வெளிப்பட்டிருக்கும். அவனுக்கு சாதாரண அப்பெண்டிக்ஸ் ஆபரேசன்தான் செஞ்சோமுன்னு, அப்புறம் என்னையும் உண்டு இல்லையின்னு பண்ணியிருப்பான்.