தங்கை அழகு..!
காற்றில் அசையும் மாந்தளிரைக்
கையால் தொட்டுப் பெரும்சுகம்போல்
தோற்றம் அழகாம் நின்முகத்தைத்
தொட்டுப் பெறலும் ஒருசுகமே!
நாற்றங் காலின் நீர்மூட்டில்
நனைந்து குனிந்த நெல்முளைபோல்
தோற்றும் அழகுத் தலைமுடியின்
துவளும் அழகும் ஓரழகே!
கொட்டும் இமைகள் சுருங்காமல்
கொவ்வை இதழும் மூடாமல்
பட்டுக் கரங்கள் ஆடிடநீ
பண்ணும் அழகும் ஓரழகோ?
குட்டிக் கால்கள் மடங்கிடநீ
குதித்தே எழுந்து வருவாள்போல்
நெட்டித் துயிர்த்து நீசெய்யும்
நிகழ்வுகள் தம்முள் ஓரழகோ?
தாய்ப்பா லருந்தி அதிற்பெற்ற
தனியா மகிழ்வில் இமைமூடி
வாய்ப்பால் தவங்கள் செய்திடுவார்
வடிவில் உள்ள அமைதியுடன்
நோய்ப்பாடு அற்ற உலகெண்ணி
நூலோர் அடையாப் பொருள்கூடித்
தொய்ந்திடு வதுபோல் துணியில்நீ
தூங்கும் அழகும் ஓரழகோ?
நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நிகழ்த்த உள்ள செயல்களினைத்
தூண்டும் விதியாய்த் தொல்போருளாய்த்
துலங்கும் இறைவன் வசப்பட்டு
வேண்டிக் கேட்கும் பாவனையோ?
விளங்கக் கேட்ட சொற்களினால்
மூண்ட முறுவல் நெளிவுகளும்
முகத்தில் தோன்றி மறைகிறதோ?
தரைமேல் பிறந்து முதற்கண்ட
தாயின் மலர்ந்த முகவழகோ!
வரையும் துகிலின் வசம்வந்த
வடிவங் கள்போல் உருவங்கள்
நிறைத்து நின்று நினைவிலவை
நெரித்துப் பார்க்கும் பயவுணர்வோ?
இறைவன் மேனி உருவழகோ?
இல்லை,அவன்வாய்ப் பொருளழகோ ?
என்ன கண்டோ இம்முறுவல்?
ஏனோ இந்த நெளிவுகளும்?
சன்னம் போன்ற விரல்நகமும்
சண்ப கத்து மலரெழிலும்
தன்னுள் தாங்கி வந்தவளே!
தங்காய்! தமிழின் உரங்கொண்டே
உன்னை உயர்ந்து வாழ்கவென
உலகை எண்ணி வாழ்த்துகிறேன் !
==௦ ==