3.6.12-போகிற போக்கில்..பொள்ளாச்சி அபி.!

அன்றைக்கு..ஒரு குடிசைப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தேன்.ஒரு வீதியின் முனையில் திரும்பியபோது,சற்று தூரத்தில் பரபரப்பாக மக்கள் கூட்டம்.என்னவோ என்று பார்த்துக் கொண்டிருந்தபோதே பக்கவாட்டிலிருந்த ஒரு குடிசையின் கூரை தீப் பற்றி எரிந்து கொண்டிருந்தது.
சிலர் வாளிகளிலும் குடங்களிலுமாக தண்ணீரைக் கொண்டுவந்து கூரையின் மேல் வீசி எறிந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் காற்றின் வேகத்திற்கு அந்தத் தண்ணீர் ஈடுகொடுக்காது என்றும் புரிந்தது.
அருகாமையில் சென்று சற்று ஓரமாக என் வண்டியை நிறுத்திக் கவனித்தேன்.
வேடிக்கை பார்த்த மனிதர்களின் சலசலப்பையும் மீறி,ஐயோ எரியுதே என் பொருளெல்லாம் வேகுதே என்று ஒரு பெண்ணின் தீனக்குரல்..
தீயணைப்புத்துறைக்கு போன் செய்துவிட்டு அந்த அம்மாளிடம் என்னாச்சும்மா..?.என்று கேட்டபோது ஐயா..என் மகளோட துணியெல்லாம் சாம்பலாகுதுய்யா..என்ற அவரது அழுகுரல் உச்சத்திற்குப் போனது.அப்போதுதான் கவனித்தேன்.அருகாமையில் நின்று கொண்டு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தியும் எளிமையான உடையில் அழுது கொண்டிருப்பதை..!
அவள் போட்டிருந்த உடைகளைப் பார்க்கும்போதே அதன் மிகக் குறைந்த தரம் தெரிந்தது.மற்ற உடைகளும் அப்படித்தான் இருக்கும்.ஆனால் அந்த உடைகளும் எரிந்து போனால்.. .., ஒரு பெண்ணின் மானம் தொடர்புடைய விஷயமல்லவா.?

தீ கூரையில்தானே பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.உள்ளே எட்டிப்பார்த்தேன். அறைக்குள் புகைமூட்டம்.அந்தப் பெண்ணிடம் பெட்டி எங்கே இருக்கிறது. ‘மேற்குப் பார்த்த செவுத்தோரமா..” அந்தப் பெண்ணின் குரல் முடிவடையும் முன்பே நான் உள்ளே பாய்ந்தேன்..
யேய் யேய்..யாரோ தன்குரல் மூலம் என்னைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பது தெரிந்தது.
நான் எதனையும் பொருட்படுத்தும் மனநிலையில் இல்லை.மனதிற்குள் பதட்டமும் பயமுமாக அந்தப் பெண் குறிப்பிட்ட இடத்திற்கு ஓடினேன். புகைமூட்டத்திலும் அந்த தகரப் பெட்டி தன் நிறத்தால் தன்னைக்காட்டிக் கொடுக்க, ‘பளிச்’சென்று ஒரு கையால் அதனை எடுத்தேன்.மேலும் அருகாமையிலிருந்த இன்னொரு மூட்டையயும் எடுத்துக் கொண்டு,சென்றதைவிட வேகமாக வெளியே வந்தேன்.
ஐயோ ராசா..எங்க மானத்தைக் காப்பாத்திட்டியே..என்று அந்தப்பெண் புளகாங்கிதத்தோடு வாங்கிய அந்த மூட்டையில் அவளது துணிகளும் இருந்தது.
ஏதோவொன்றை சாதித்துவிட்டோம் என்ற நிறைவு மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த சமயத்தில் தீயணைப்புத்துறையினரும் வந்துவிட வேகமாக தீ அணைக்கப்பட்டது.அந்தக் குடிசைவாசிகளின் பெரும்பாலான பொருட்கள் காப்பாற்றப்பட்டது.
அப்பாடா..ஒரு ஏழைக்குடும்பத்தின் அத்தியாவசியப் பொருட்கள் சுமாராக மிஞ்சியதே.சற்று நிம்மதிப் பெருமூச்சுடன் எனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொள்ள வந்தபோது..
அங்கே எனது வண்டி திருடு போயிருந்தது.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (3-Jun-12, 8:52 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 208

மேலே