சபதம் - கே-எஸ்-கலை
சாதிமதம் அகமேற்றி
சண்டையிட்டு வாழோம் !
சாத்திரங்கள் புறந்தள்ளி
சாக்கடையில் வீழோம் !
சொத்துசுகம் உள்ளதென்று
சோம்பலுற்று வாழோம் !
சோதனைகள் வந்ததென்று
சோர்வுற்று வீழோம் !
களவாடி பொருள்தேடி
கறுப்பாக வாழோம் !
மதுவுண்டு மதிகெட்டு
மாசுற்று வீழோம் !
பாடுபட்டு தோற்றாலும்
பிச்சையுண்டு வாழோம் !
நாடுவிட்டுப் போனாலும்
கேடுகெட்டு வீழோம் !
பெற்றெடுத்த தாய்வாட
சித்தியோடு வாழோம் !
சித்திரத்து மொழிமறந்து
புத்தியற்று வீழோம் !
கல்விவிட்டு கலவிதொட்டு
கந்தலாகி வாழோம் !
காதலென்று காமம்தொட்டு
வெந்துநாமும் வீழோம் !
வீதிநின்று உடலைவிற்று
ஈனமாக வாழோம் !
விதியென்று மனசுநொந்து
ஊனமாக வீழோம் !
எண்ணத்தில் விடமேற்றி
எரியூட்டி வாழோம் !
துன்பத்தில் கிடந்தாலும்
வன்மத்தால் வீழோம் !
சுயநலத்தில் உறவமைத்து
பொய்சூடி வாழோம் !
பணபலத்தில், பிரபலத்தில்
சூதாடி வீழோம் !