இலையின் இறுதி அஞ்சலி

உதிர்ந்த இலை சொன்னது!!

நம்பிக்கையோடு நட்டமாய் நின்ற
மரத்தைப்பார்த்து
வளர்ந்துதான் என்னபயன் ?
உதிர்வதே நல்லது என !

நீர் கொடுத்து நிழல்கொடுத்து
நீ வளர்த்த உன் கைப்பிடி
வேறொருவன் பக்கம் பற்றிக்கொண்டு
வேரறுக்க வரும்போது
வீழ்த்திவிட முடியாமல்
விழுவாயே வெட்டுபட்டு..!!!

வேர்வழியாய் நீ
சேமித்த நீரெல்லாம்
வியர்வையாய் வழியுதிங்கே
வழியின்றி
வலியால் நீ துடிக்கையிலே....

வாழ்ந்த நீ வீழும்முன்னே
வளரும் நான் உதிர்ந்துபோனேன்

உன்னை தாங்கும் கரம்
எனக்கு இங்கு இல்லை
என்னை கைத்தாங்கிய உன்னை
மக்கியாவது
மடிதாங்க மனம்கொண்டே
மரணத்தை கைப்பற்றி
மண்ணுக்குள் போகிறேன் ......!!

மடிந்த பிள்ளையை மண்ணுக்கு அனுப்பிவிட்டு
பிணமாகும் தாய்ப்போல
உதிர்ந்த என்னையும் விட்டுவிட இயலாமல்
விழுந்தாயே விழிமுன்னே
வலிச்சுமைதாங்க முடியாமல் .....

இன்னொருமுறை
நீ மரமாக பிறக்காதே
மண்ணாகவே பிறந்து விடு
மண்ணுக்குள்ளே புதைந்து விடலாம்

உயிருடனே உடலறுக்கும்
வலிகள் ஏதும் உணராமல் ....



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (19-Jul-14, 3:13 pm)
பார்வை : 122

மேலே