ஈரத் தீ - கே-எஸ்-கலை

கொஞ்சம்
விழித்துப் பாருங்கள்....
நெஞ்சம்
கிழித்துப் பாருங்கள்....

இயக்குநீர்ச் சுரப்பிகளில்
எரிபொருளைப் பிரசவிக்கும்
ஏழ்மைக் கூடுகளின் -
எலும்பு நரம்பெல்லாம்
எரித்துக் கிடக்கிறது - ஈரத் தீ !

உழைத்துழைத்துக் குள்ளமாகி
உணவுக்குக் கையேந்தி
உரிமைக்கு கால்பிடித்து
பிழைக்க வழி தெரியாது....

அரசியல் கறுப்பாடுகளின்
கபளீகரத் தாண்டவங்களால்
கற்பழிப்புச் செய்யப்பட்டு
தூக்கியெறியப்படும் அப்பாவிகளின்...

வெற்றிகள் தொலைந்து விரக்தியாக
நெற்றிப் பட்டறைகளில்
தெறித்துக் கொண்டிருக்கின்றது
வியர்வையென்ற ஈரத் தீ !

ஆசைகள் எரிந்து ஆவியாக
கன்ன மேடுகளில்
கனன்றுக் கொண்டிருக்கின்றது
கண்ணீரென்ற ஈரத் தீ !

இலட்சியங்கள் அழிந்து இருளாக
இதயக் கூடுகளில்
குமுறிக் கொண்டிருக்கின்றது
உதிரமென்ற ஈரத் தீ !

உள்ளெரியும் தீயிது
உடலரிக்கும் நோயென
செல்லரித்து - மெது மெதுவாய்
சிதையரித்துக் கொள்ளிவைத்த
அத்தியாயம் அத்தனையும்
அபரியாய அநியாயம் !

பிரபஞ்ச பிரளயம்
வெள்ளத்தால் ஆகுமென
தொன்மவியல் சொல்கிறது....

வறுமைக் காடுகளின்
வெறுமை மேடுகளில்
வெடித்துச் சிதறுகின்ற
இருதயப் பாறைகளில்
ஊற்றெடுக்கும் இந்த
ஈரத் தீக்களால் – மானுடப்
பிரளயங்கள் ஆகுமென
எந்தவியல் அறிந்திருக்கும் ?

----------------------------------------------
இயக்குநீர்- ஹார்மோன்
அபரியாயம் – ஒழுங்கின்மை
கபளீகரம் - பொருளைத் தன் வயப்படுத்தல் : கவர்தல்
பிரளயம் – அழிவு
----------------------------------------------
(“ஈரத் தீ” என்ற இந்த தலைப்பில் கவிதை எழுத, அண்ணன் சரவணாவை அழைத்தேன். உடன்பட்டு அவரெழுதிய அற்புத படைப்பை 220635 என்ற படைப்பிலக்கத்தில் காணுங்கள்)

எழுதியவர் : கே.எஸ்.கலை (16-Nov-14, 8:36 am)
பார்வை : 146

மேலே