ஒருமுறை புன்னகைக் கொடு

திருமகளின் இணையான உருவம் பெற்று
பருவம் எய்திய பசுந்தளிர் பூங்கொடி
கரும்புழுதி உண்ட முல்லைப்பூ வதனம்
வருத்தத்தின் விளைவால் வந்திட கண்டாள்......

பூச்சூடும் புதிய உறவினைக் காண
பூச்சூடி நெற்றியில் அழகு பொட்டிட்டு
பஞ்சவர்ண சேலையை பக்குவமாய் தானுடுத்தி
வஞ்சியிவள் தினமொரு கோலம் பூண்டாள்......

பாவையின் அழகினைப் பார்வையால் தின்று
பாவையாகவே பார்த்துச் செல்லும் கண்கள்
தேவை இல்லாத பொருள் கேட்கயில்
சாவை விஞ்சும் துன்பம் கொண்டாள்......

நெஞ்சத்தில் பற்றிய வேதனைத் தீயில்
மஞ்சத்தில் கறுத்து நிழல் சாய்கிறது
விழிகள் ஆழ்ந்த உறக்கம் கொண்டாலும்
விழிக்கும் மனம் எதிர்காலத்தில் மேய்கிறது......

பாற்கடல் துஞ்சும் அலைமகள் நேசனே
சேற்றோடு சேர்ந்து புதைந்தத் தாமரை
இதழ்களின் புன்னகையைத் திருப்பிக் கொடுத்தால்
சதங்கை ஒலிகளாய் தவழ்ந்து பேசுமே......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jan-17, 2:05 pm)
பார்வை : 243

மேலே