மே 18
காலத்தின் ஓட்டத்தில்
மே 18 பிறந்தது –எதிரியின்
களத்தின் ஓட்டத்தில்
தமிழினம் மடிந்தது
மண் தாகம் தீர்க்க -எம்
உறவுகளின் உதிரம் கிடைத்தது
உறிஞ்சிக்குடிக்க....
மண் பசிபோக்க -எம்
உறவுகளின் உயிர் கிடைத்தது
கொறித்து தின்ன....
அன்றைய நாளே....
எம் இனத்தின்
கரிய நாள்
கொடிய நாள்
பல உயிர்களை
காவு கொண்ட நாள்
பல உணர்வுகளை
சாவு கொண்ட நாள்
அன்றைய நொடிகளில்....
கறுப்பு வானம் சிந்திய
எறிகணை மழையில்
நனையும் உடல்கள்
பிணங்களாயின
அதிகாலைப்பொழுதில்
அச்சம் தின்ற
பறவைகளினதும் விலங்குகளினதும்
தொண்டைக்குழி விக்கிக்கொள்ள
மௌனமொழி நீண்டு
ஊமையாகின
பகலவன் கண்விழித்தபோதும்
பகலிரவு தெரியாத
பக்கமும் நீளமானது
பூக்கள் உதிர்ந்தன
பிஞ்சுகள் விழுந்தன
வேர்கள் அறுந்தன
முளைத்த விதைகள்
மண்ணுக்குள் புதைக்கப்பட்டன
முளைவிடும் விதைகள்
உடலுக்குள் புதைக்கப்பட்டன
மரணப்பிடியிலிருந்த
ஈழக்கதிர்கள் ஒப்பாரியில்
ஓலமிட்டன
இரத்த ஆற்றில் மிதக்கும்
மேனி கண்டு
எத்தனை உயிர்கள்
இதயத்துடிப்பின்
இயக்கம் நிறுத்தின
எத்தனை பால்முகம்
மரித்த தாயின்
மார்பை தேடியது
பசி போக்க...
கால்கள் நகர்ந்தால்
தடத்தின் வரைபுகள்
பிணமேடையில் பதிந்தன
இதற்கு
அகிலத்தின் பார்வை
அந்நியனுக்கு ஆயுதமானது
எட்டுத்திக்கிலும் தொடராகி
எமையடக்க -பல
நாடுகளின் இரும்புக்கரங்கள்
நசுக்க முடிவானது
இப்படி
எழுத்துக்கு போதாத
எண்ணில் அடங்காத
எத்தனை அவலங்கள்
எம்மண்ணில் அவதரித்தன
இன்று....
மூன்றாண்டு சென்றுவிட -எம்
முத்தமிழும் வேகுறது
கடந்த பக்கத்தை
கணப்பொழுது மீட்டிப்பார்த்தால்
கண்ணீரின் நகர்வுகள் தான்
கண்மடலை சந்திக்கின்றன
எப்படி மறக்க முடியும் நினைவுகளை
எப்படி மறுக்க முடியும் உண்மைகளை
இவை
எப்போதும்
எம் உயிரலையில்
வீசிக்கொண்டே தான்
இருக்கும்
எனவே
உன்னத தமிழே!
உலகத்தமிழனே!
வீச்சு உன் விழியில்
வீரம் உன் நெஞ்சில்
விரைகின்ற பொழுதில்
உலகத்தின் சிகரத்தை
எளிதாய் தொடுவோம்
ஈழமேனியில் கொடிவிட
புதிதாய் முளைவிடுவோம்
நீ ஒன்றுபடு
மறத்தமிழனாய்….
அப்போது தான்-எம்
தாயக கனவுகளும் மகிழும்
கல்லறை மேனிகளும் பாடும்
மடிந்த உறவுகளும் வாழ்த்தும்