அப்பாக்களின் தியாகம்
பத்து மாதம் கருவைச் சுமந்து ஈன்றெடுப்பதால் ஒருத்தி தாய் என்ற பதவியை அடைகிறாள், அந்தத் தாயையும் சுமக்கும் தந்தையின் கண்ணீரை யாரேனும் கண்டீரோ!
அன்று கருவுற்ற நாளில் பிள்ளையிடம் தொடங்கும் அவளன்பு தான் கண்மூடும் நாள் வரை மாறாது. என் சிறு வயதில் பலரும் என்னிடம் அதிகம் கேட்ட கேள்வி – நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா? இக்கேள்விக்கு நான் சொன்ன/சொல்லும் ஒரே பதில் `அம்மா செல்லம்` என்பது தான். பல காலம் நிலைக்கவில்லை அப்பதிலும், அப்பா என்ற தியாகியை நான் உணரும்வரை!
என்னைக் கேட்டால் அம்மாவின் பாசத்திற்கும் அப்பாவின் பாசத்திற்கும் ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் உண்டு என்பேன். அம்மாவின் அன்பு எதையும் எதிர்பார்க்காது. பிள்ளையின் பிறப்பிலிருந்து அவர்கள் வளரும்வரை முப்பொழுதும் அம்மாக்கள் உடனிருப்பதால் அம்மாவே உலகம் என்ற நிலைப்பாடு இருக்கும், அதுவே நியதி, அதுவே உண்மை.
அப்பாக்களின் அன்பும் பாசமும் பிள்ளை வளரும் போது தேய்பிறை போல் மறைவதாகத் தோன்றும். அதுவே நியதி, ஆனால் அந்நியதி உண்மையல்ல என்பது பின்னொரு நாளில் அப்பிள்ளை தன் மகனை வளர்க்கும்போது தான் புரியும்!
அப்பா என்றாலே திட்டுவதற்கும் அடிப்பதற்கும்தான் என்று பிள்ளைகள் எண்ணுவதுண்டு. அப்பிள்ளைகள் தவறே செய்தாலும் கட்டியணைப்பது தாயுள்ளம், தவறைச் சுட்டிக்காட்டி அன்பையும் கண்டிப்பாய் காட்டுவது தந்தையுள்ளம்.
ஒரு தாயின் அன்பு, பிள்ளை பிறந்த நாளில் எப்படி இருந்ததோ அதே நிலைதான் அவன் வளர்ந்து, பெரியவனாகி அவனுக்குத் திருமணமான பின்பும் மாறாது. அவனுக்கென்று பெண்ணொருந்தி வந்த பின்பும் அவள் கண்களுக்கு அவன் சிறுபிள்ளையாகவே காட்சி தருவான். எனவே அம்மாவின் அன்பிலும் பாசத்திலும் வேறுபாடு காண்பதறிது, அவ்வன்பு ஈடு இணையற்றது.
இத்தகு அன்னையரின் அன்பையும் பாசத்தையும் பற்றி பல்வேறான கவிதைகளும் கதைகளும் இங்குள்ளன. என்ன காரணத்தாலோ இவற்றிற்கெல்லாம் பின்புலமாக விளங்கும் நம் தந்தையரைப் பற்றிய பாடல்களும் கவிதைகளும் மிகக்குறைவே! அப்பாக்களின் அன்பும் பாசமும் காலச் சுழற்சியில் மறைந்துவிடுகின்றன.
பிறந்த குழந்தை தன் அம்மாவின் பாலை ருசிக்கும் போது அவள் முழுமையடைவதாகச் சொல்கிறது இவ்வுலகம். என்ன காரணத்தினாலோ அவ்விறைவன் தந்தையருக்கு கருவறையையும் பால் சுரக்கும் பேறையும் அளிக்காமல் தானும் ஒரு ஆணாதிக்கவாதியாக நிற்கிறான். இதுவும் ஆண்களுக்கெதிரான இறைவனின் ஓரவஞ்சனை அல்லவா?
குழந்தை தவழத் தொடங்கும் பொழுது தரையில் விழும் நொடியில் தாங்கிக் கொள்ள முனைபவள் அம்மா. அய்யோ என் செல்லத்திற்கு எங்காவது அடி பட்டுவிட்டதா என்று தேடி அழுவாள். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் உடனே அப்பா சொல்வார் - `அவனைத் தூக்காதே, இரண்டு மூணுதடவ விழுந்தாதான் தவழ்ந்து பழகுவான்` என்று. அம்மா நினைப்பாள் `என்ன மனுஷன் இவர், புள்ள கீழ விழுந்திருச்சு கொஞ்சம் கூட பாசமே இல்லாம பேசராரு, நீ அம்மாகிட்ட வாடா செல்லம்` என்றழைத்துக் கட்டியணைத்துக் கொஞ்சுவது அம்மாக்களின் இயல்பு.
இதுபோன்ற அப்பாக்களின் செயல்களுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கும். வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் துன்பங்களும் இடர்களும் மாறி மாறி வரும், எனவே இதுபோன்ற நிலைகளில் மனதை தளரவிடாமல் வலிகளைத் தாங்கித் திரும்பத் திரும்ப முயற்சி செய்தால் மட்டுமே நம் இலக்கை அடைய முடியும் என்பதை உணர்த்துவதற்காக செய்யும் செயலாக இருக்கும். அனைவரும் உறங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் பிள்ளை விழுந்த இடத்தில் தடவிப்பார்த்துவிட்டு வருத்தப்படும் அவன் தான் நம் அப்பா!
இதே நிலைதான் பின் மிதிவண்டி பயிலும் நாட்களில் கீழே விழுந்து கிடக்கும் பிள்ளையை பார்க்கும் அம்மா, அப்பாக்களின் செயல். அம்மாவின் அன்பு இது சரியா? தவறா? என்பதையெல்லாம் யோசிப்பதில்லை. பிள்ளைக்கு வலிக்குமே என்ற ஏக்கம் தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் அம்மாக்களுக்குத் தங்கள் பிள்ளையின் மேலிருக்கும் அன்பு மாறவே மாறாது. கீழே விழுந்தா பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் முயற்சி செய், நிச்சயம் வெற்றி பெறுவாய் என்பது தந்தையின் பாசம்.
அம்மாவிற்கு பிள்ளையிடம் ஒரே ஒரு முகம் மட்டுமே இருக்கும், ஆனால் அப்பாவிற்கு பல முகங்கள் இருக்கும். உள்ளேயிருக்கும் அன்பை வெளிக்காட்டாமல் துக்கப்படும் அப்பாக்களின் தியாகமே அப்பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கும். நம் அப்பாக்கள் பலரும் உணர்ச்சியை அடக்கி அவற்றின் கலவையாய் இருப்பர் (Emotional mixture & non-expresssive).
இங்குள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் அவர்களின் அப்பாதான் கதாநாயகன். அவரிடமிருந்தே பலவற்றையும் கற்கத் தொடங்குகிறோம். அப்பாவின் முதல் எழுத்தை நம் பெயருடன் இணைத்தெழுதும் நாமனைவரும் பாக்கியசாலிகள். பிள்ளைகளின் வளர்ச்சியில் ஆனந்தமடையும் முதல் ஜீவனும் அவரே. ஒவ்வொரு அப்பாக்களின் உழைப்பும் அவர்களின் பொருளாதாரமும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நன்கு அமைப்பதிலேயே இருக்கும்.
பிள்ளைகள் வாழ்வில் பயணிக்கும்போது அவர்களின் வழி நெடுக வரும் கற்களையும் முட்களையும் அகற்றுவதில் தான் அவர்களின் வாழ்க்கையையே செலவழிக்கிறார்கள். தனக்கென்று அவர்கள் எதுவும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை, பிள்ளைகளின் படிப்பு, வளர்ச்சி என்று அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கிலே தங்கள் இளமையையும், இன்பத்தையும் விட்டுக் கொடுக்கின்றனர்.
பிள்ளைகளின் சுதந்திரத்திற்காகவும், அவர்களின் சுகத்திற்காகவும், கல்விக்காகவும் தன் நிம்மதியைத் தொலைத்து, அவமானங்களை ஏற்று உடல், மனச்சோர்வடையும் அப்பாக்கள் போற்றப் படவேண்டியவர்கள். அம்மாவின் அன்பை அவள் முத்தத்திலும், கண்ணீரும் காணலாம், ஆனால் அப்பாவின் அன்பை அவரின் கண்களிலும், அவரின் கை நம் தோல்மீது வைத்து அழுத்தும்போதும் உணரலாம்.
அணைத்துத் தூங்க வைப்பவள் அம்மா; தூங்கிய பிள்ளைக்குத் தெரியாமல் பிள்ளையின் பாதத்தில் முத்தமிட்டு தன் கண்ணீரை மனதில் சிந்துபவன் அப்பா! உள்ளத்து உணர்வுகளை மறைத்து அவற்றை வெளிக்காட்டாமல் நம்முன் கண்டிப்பாய் நடக்கும் ஒரு ஜீவன்தான் நம் அப்பா!
பிள்ளையின் ஆனந்தத்தில் தன் தூக்கத்தையும், வலிகளையும் தொலைத்து, காலைப் பேருந்தில் நிற்க இடமில்லாமல், நெடுதூரம் பயணித்து வேலை செய்துவிட்டு, பிள்ளை உறங்கும் நேரத்தில் சத்தமில்லாமல் வீட்டிற்கு வந்து, தூங்கும் மகனின் தலைமுடியை வருடும் தியாகிதான் நம் அப்பா!
அந்தப் பிள்ளைகள் வேலைக்குச் சேர்ந்து, நண்பர்களுடன் சந்தோசமாக சினிமாக்களிலும் பொழுதுபோக்குகளிலும் உறைந்து, பெற்றோரை மறந்திருக்கும் தருணங்களில்- `பாவம் ரொம்ப வேலை போலிருக்கு அதனாலதான் ஃபோன் பண்ணமுடியலைன்னு உங்கிட்ட சொல்லச் சொன்னான்` என்று மனைவியிடம் பொய்யுரைப்பவனே நம் அப்பா!
வலிகளையும், வேதனைகளையும் செய்வதறியாது கண்ணீராகக் கொட்டுபவள் அம்மா; அவ்வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு வயோதிகத்தில் அமைதியாய் பிள்ளைகள் முன் எதுவும் சொல்லாமல் பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி நிற்கும் ஒரு குழந்தைபோல நிற்பவர்தான் நம் அப்பா!
இப்படி பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வாரத்திற்கு ஒரு முறையாவது ஃபோன் பண்ணிப் பேசுவான் என்று வலிகளைத் தாங்கி விழி பார்த்து நிற்பவன் தான் நம் அப்பா!
வாழ்வின் பல நிலைகளில் அப்பாக்கள் தான் பிள்ளைகளுக்கு ஆசானாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் கற்றல் என்பது அவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே நம் வீட்டினுள்ளேயே ஆரம்பமாகிறது.
பிள்ளைகள் அப்பாக்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களில் சில: - நேர்மை அமைதி நியாகக் கோபம் விடா முயற்சி நேரம் தவறாமை பிறரை துன்புறுத்தாதே பயப்படாமல் தைரியமாக இருப்பது பணத்திற்காக எதுவும் செய்யக்கூடாது பணியை நிறைவுடன் செய்வது சோர்வடையாமல் தன்னம்பிக்கையோடு இருப்பது வலிகளைத் தாங்குவது தோல்வியைக் கண்டு கலங்காமலிருப்பது சகிப்புத்தன்மை பழி பாவங்கள் செய்யக் கூடாது தவறைத் தட்டிக் கேட்கவேண்டும் இதனால் தான் நம் அப்பாக்கள் நமக்கு முதல் ஆசானாக இருக்கிறார்கள். அப்பாக்களின் மன அறையிலிருக்கும் பூட்டு என்றும் திறப்பதேயில்லை. அதனை திறந்து பார்ப்பதும் அவசியமற்றது – அவ்வறையினுள் இருப்பது கண்ணீரும் வலிகளுமே! அப்பாவின் அன்பும் தாயின் கருவறையைப் போன்றது தான்; ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், அக்கருவறையிலிருக்கும் அன்பு, பாசம் என்ற குழந்தை பிரசவிப்பதே இல்லை. அது தன் பிள்ளைகளின் ஆனந்தத்தைப் பார்த்துப் பார்த்து கருவறையினுள்ளே அழிந்துபோகும்.
இப்படி அப்பாவின் நிழலில் வளரும் பிள்ளைகள், பின்னாளில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்பது எவ்வளவு கொடுமையானது! கல்வியையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்து, நாமே கதி என்றிருந்தவர்களுக்கு இதுதான் நாம் செய்யும் கடமையா? என்னவொருக் கோழைத்தனம், இது மனிதத் தன்மையற்ற செயல். இக்காரியத்தைச் செய்யும் எவரும் வெட்கித்தலை குனியவேண்டும். அவர்களுக்கு இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறவியிலும் நிம்மதி வராது.
அம்மாவின் கண்ணீரையும், தந்தையின் தியாகத்தையும் இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சில நேரங்களில் என் மனைவி சொல்வது – நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் அப்பாவை பிரதிபலிப்பதாகத் தோன்றுவதாகக் கூறுவார். என் பிள்ளையிடம் கண்டிப்பைக் காட்டும் பொழுதும், என்னுடைய நடை, பேச்சு என்று சொல்லும்போது ஆனந்தமாக இருக்கும். அவராக நான் மாறும் தருணங்கள் தரும் நிம்மதியும் சந்தோஷமும் எண்ணிலடங்கா! அதை என்னென்று சொல்வது!
என் அப்பா எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கவில்லை, மாறாக அப்படியே வாழ்ந்து காட்டினார். அவரது அலுவலக நண்பர்கள் பலரும் சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு - `என்னய்யா இப்படி அரசு வேலையிலிருந்துவிட்டு பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறே`. அதற்கு அப்பா சொல்லும் ஒரே பதில் `பிள்ளைகளுக்காகப் பெரிய சொத்துச் சேர்த்து வைக்காவிடிலும் பழி பாவங்களைச் சேர்த்து வைக்க மனமில்லை` என்பதுதான். இன்றும் அவரது வெள்ளைச் சட்டையில் பாக்கெட் வைத்துக் கொள்ளாமல், நேர்மையாக இருக்கிறார். அவருக்கு மகனாகப் பிறந்ததே நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்.
அவரிடமிருந்த அனைத்தையும் எனக்காகக் கொடுத்துள்ளார்; பெரிதாக ஆசையொன்றுமில்லை, என் அப்பாவிடம் கேட்கும் வரம் இதுவே - இப்பிறவியைப் போல் எப்பிறவியிலும் என் பெற்றோருக்கே நான் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமென்பதே! என்னிடம் அவர் அடிக்கடிக் கூறும் வார்த்தைகள்; எல்லாம் சரியாப் போகும் நான் இருக்கேன் நல்லதே நடக்கும் உடம்பைப் பார்த்துக்கொள் உன் மேலே நம்பிக்கை இருக்கு, நீ நல்லா வருவே பிள்ளையையும் மனைவியையும் நல்லா பார்த்துக்கொள் என் தந்தையைப் பற்றி எழுத எவ்வளவோ உள்ளது, பின்னொரு பதிவில் அவற்றை எழுத முனைகிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் அம்மாவின் பாசமும், அப்பாவின் தியாகமும் போற்றப்பட வேண்டியவை. அவர்களின் கண்ணீரும் தியாகமும் தான் நம்மை நன்னிலையில் வாழ உதவும். நம்மை வாழ்வின் ஒவ்வொரு சோகத்திலுமிருந்தும் காப்பது நம் பெற்றோர்கள் செய்த புண்ணியமும், நற்பலனுமேயாகும்.
இதுபோன்ற அப்பாக்களின் தியாகங்களுக்கு எனது வணக்கத்தைச் சமர்பிக்கிறேன்.
மேலும்