நான் பட்ட காயத்தில் மருந்திட்டார் யாரும் உண்டோ

பெருமூச்சு விட்ட
வேப்பமரம் வினவியது,
அதன் நிழலில் நான்...!!!

என் நிழலில்
நிற்கும் நிஜங்களே,

நான் வெயிலில்
நிற்பதில் கவலைப்பட்டார்
யாரும் உண்டோ என்றது...?

இது தானே
இயற்கையின் நியதி
மனதினில் பட்டதை
பதிலாய் உரைத்தேன்...

மேய்ச்சலுக்கும், காய்ச்சலுக்கும்
உகந்ததென்று என்
மேனிதன்னை புண்ணாக்கி
உரித்து, உதிர்த்த
மானிடரே...!!!

நான் பட்ட
காயத்தில் மருந்திட்டார்
யாரும் உண்டோ என்றது...?

அம்மைக்கும், மென்மைக்கும்
எனை அரைத்து பூசும்
மானிடரே...!!!

வெட்டுப்பட்டு, வெட்டுப்பட்டு
வேதனையில் எந்தன் சொந்தம்
கலங்கிப்போய்
புலம்புவதை கண்டுகொண்டார்
யாரும் உண்டோ என்றது...?

கையுடைந்து, காலுடைந்து
மேனியது மெல்லச்சிதைந்து
புண்ணானாலும்
புண்ணியம் செய்வதில்
மகிழ்வுதான் என்றது...!!!

ஆனாலும்,
உலக வெப்பம்
தணிக்கும் உயரிய
பொறுப்பில் எங்களுக்கும்
பங்குண்டு உணருங்கள் என்றது...!!!

அது கேட்ட கேள்விக்கொன்றும்
விடை இல்லையே
பாவி இவன் பதிலாய் உரைக்க...!!!???

-சகா (சலீம் கான்)

எழுதியவர் : சகா (சலீம் கான்) (22-Mar-15, 12:15 pm)
பார்வை : 161

மேலே