சந்திர மௌலீஸ்வரன்-மகி- கருத்துகள்

மிக்க நன்றி, திரு. பழனி ராஜன்! உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
"""மூன்றுபதின் மூன்றுமுறை காதல் காதல்,
முத்தாய்ப்பாய் ஒருமுறைதான் பாதல்!" - - - - சரிதான் என்று நம்புகிறேன் நண்பரே!
அப்புறம்,
"""மிகவும் நன்றாக ஒரு முத்துச் சரத்தைப்போலக் கோத்திருக்கிறீர்கள். அமைப்பும் இன்னோசையும் மிகவும் பொருத்தமாக இழைந்துள்ளன. ஈற்றடி முடியச் சற்றும் தொய்வில்லாமல் ஒரே குதியோட்ட நடையில் அமைத்துள்லமை மிகவும் சிறப்பானது""" - - - - இதுவும் கூடச் சரிதான் என்றும் நம்புகிறேன் நண்பரே!
அப்புறம்,
திரு. மெய்யன் நடராஜ் அவர்களின் அறுசீர்க்கழிநெடிலடி ஆரிய விருத்தம் மீது நான் எழுதியது,
""" மிகவும் நன்றாக ஒரு முத்துச் சரத்தைப்போலக் கோத்திருக்கிறீர்கள். அமைப்பும் இன்னோசையும் மிகவும் பொருத்தமாக இழைந்துள்ளன. ஈற்றடி முடியச் சற்றும் தொய்வில்லாமல் ஒரே குதியோட்ட நடையில் அமைத்துள்ளமை மிகவும் சிறப்பானது""" - - - என்று, பாராட்டித்தானே எழுதியிருக்கிறேன்?

கவிஞர் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! மிக்க நன்றி! இதுதாம் முறையான செழுமையான ஆரோக்கியமான இலக்கணக் கவிமேடைக் கருத்தாட்டம், கருத்தூட்டம்!! இவ்வகையான கருத்தாட்டங்களைப் பார்த்து நீண்ட நெடுங்காலமாயிற்று!
சட்டென்று கண்களுக்குத் தெரியும் தவறுகளையும் இலக்கண மாற்றுக்களையும் திருத்தப் போனால், ஒவ்வாது சுணங்கும் இக்காலத்தில் இப்படிப் பார்த்துப் பார்த்து வழிகாட்டுவது ஒரு மிகப் பெரிய மாண்பு ஆகும்! இந்த ஒரு பதிவில் நீவிர் இருவரும், யாப்புக் கவி இலக்கணம், மரபுக் கவி உறுப்பிலக்கணம், அசை - சீர் - அடி - தொடை அமைப்பு என்று ஒரு கவியாக்க வகுப்பினையே தந்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி! மிக்க நன்றி!

"""உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே. (கம்பன்)

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் (சேக்கிழார்) """
--- ---- கம்பனின் ஆக்கங்களையும் சேக்கிழார் பெருமானின் ஆக்கங்களையும் ஊன்றிப் படித்தாலே போதும் தமிழ்க்கவியாக்க இலக்கணம் மனதில் பதிவேறும்தானாக, அல்லவா?

சிறுவயதில் படித்த "மருத நில மாண்பு " தண்லலை மயில்கள் ஆட - - - - -" இன்றும் என்னுள் அன்றாடம் இசைக்கிறது!!

திரு. கவின் சாரலன்,
எனக்கு மிக மிகப் பிடித்தமாக கலிவிருத்தக் கவியொன்றைப் பதித்ததற்கு மிக்க நன்றி! எத்தனை எழுதினாலும் ஒரு நாளில் ஒரு கலிவிருத்தத்தையாவது எழுதாவிட்டால் பெரிதாக எதையோ இழந்ததைப் போல் உணர்கிறேன்.
மிக்க நன்றி! வணக்கம்!

"""மோனைக்கு முட்டிமுட்டி மோதுகின்ற பாழ்நெஞ்சே
ஆனைக்கா அற்புதனாம் அப்புநாமம் போதாதோ
தேனைச்சிந் தும்கொன்றைத் தார்மார்பன் அந்தயிளம்
மானைச்சேர் வானைநீயும் நினைத்திடுவாய் நித்தமுமே!"""
- - - - - கவின் சாரலன், இந்தப் பாவிரண்டும் மிக இயல்பாக அமைந்து கடினச் சொற்கள் இன்றி அமைந்துள்ளன! பாராட்டுக்கள்!
" - - - தேனைச்சிந் தும்கொன்றைத் தார்மார்பன்!" - - - - அருமை!!

வணக்கம், திரு. மெய்யன் நடராஜ்!
மகிழ்ச்சி நிறைந்த விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!!
மனமார்ந்த சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!

மூன்றுபதி மூன்றுமுறை காதல் காதல்,
முத்தாய்ப்பாய் ஒருமுறைதான் பாதல்,
முடிவுவரை துவக்கமுதல் காதல் காதல்!
மும்மூன்று சீர்களிலே நாற்பது காதல்!

ஒவ்வொன்றும் வாழ்வியலின் விளக்காய்க் காதல்
ஒருவரியின் ஈற்றினில்நின் றொளிரும் காதல்
உண்மைகளை விரிக்கின்ற அருமைக் காதல்!!

வேறெதனை யும்திரும்பிப் பார்க்காதல்
வெற்றிடத்துப் பார்வையிலே விலகாதல்,
வேலையென்று எதனையுமே விரும்பாதல்,
விடலைமனத் திளைஞர்விழும் இடர்காதல்!

மிகவும் நன்றாக ஒரு முத்துச் சரத்தைப்போலக் கோத்திருக்கிறீர்கள். அமைப்பும் இன்னோசையும் மிகவும் பொருத்தமாக இழைந்துள்ளன. ஈற்றடி முடியச் சற்றும் தொய்வில்லாமல் ஒரே குதியோட்ட நடையில் அமைத்துள்லமை மிகவும் சிறப்பானது. மிக்க நன்றி. வணக்கம்.
- - - - - சந்திர மௌலீஸ்வரன் - சித்திரைச் சந்திரன் செல்வப் பிரியா.

மகிழ்ச்சி நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

மிகவும் நன்றாக அமைந்த சிந்து!

"வேர்களற்றுப் போயிடினும்
விழுதுகளால் தாங்கும் - மனம்
விருட்சமென ஓங்கும் - அதில்
விடியும்வரை தூங்கும் - ஒரு
விடைதெரியா துயர்பறவை
வெண்பனிபோல் நீங்கும்!"

இக்காலத்தில் பற்பல துயர்களால் மிக்க மன அழுத்தத்தில் துவளும் மக்கட்கு அருமையாக நம்பிக்கை தரும் கவிதை!
மனமார்ந்த பாராட்டுக்கள், திரு, மெய்யன் நடராஜ்!

"மனவறைக் குள்ளே மணவறை காணும்
மதுரச மாமோ காதல்?"

"உள்ளநாள் வரைக்கும் உயிருடன் உயிரை
உயிராய் கொள்வதோ காதல்?"

ஆஹா! மிகவும் அருமையாகத் தொடுத்திருக்கிறீர்கள், திரு. மெய்யன் நடராஜ்!
"பிறவிகள் தோறும் பிரியா திருக்கும் பெரும்பே ரன்றோ காதல்!
பிரிவறு வுறவால் பிறப்பைத் தொடரும் பேராண் மையே காதல்!"
பாராட்டுக்கள்!

வணக்கம், திரு. வ.க. கன்னியப்பன்! ஒரு சிறு உதவி வேண்டுகிறேன். எனது "விரநாணை - - - வைரமறுக் கும்" பாவிற்கு, உங்கள் நோக்கில் ஆன பொருள் விளக்கம் தர முடியுமா? எனது தமிழ்ப்பயிற்சி, மரபுக் கவிப் பயிற்சி மாணவியர் மாணவருக்கு ஒரு பாவின் பொருளுரையைப் "பல்வேறு நோக்கிலும் எப்படி அமைக்கலாம்" எனக் காட்டி வருகிறேன். இதில் திருக்குறளின் உட்புலப் பொருள் எவ்வாறு தற்காலத் தொழில் துறைகள் பலவற்றிற்கும் சரியாகப் பொருந்துகிறது என்பதை விளக்கிக் காட்டி அவர்களுக்கு அவற்றைத் தொகுக்கும் திட்டப் பணியைத் தந்துள்ளேன். உங்களுடைய தமிழாழம் அவர்களுக்குப் பயன்படும் என நம்புகிறேன்.
நீங்கள் இதில் பதிவிட்டாலும் சரி; அன்றி எனது மின்னஞ்சலிற்கு அனுப்பினாலும் சரி.
செய்வீக்ரளானால் மிகவும் மகிழ்வேன். மிக்க நன்றி, வணக்கம்!
சந்திரமௌலீஸ்வரன் ம.கி.

வணக்கம், திரு. வ.க.கன்னியப்பன் அவர்களே!
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது! நான் இலக்கியம் ஒன்றை மட்டுமே சுட்டியது அதில் மற்றவையும் பொதிகின்றன என்பதால். ஆனால் உங்களுடைன மறுமொழியின் கடைசி வரியை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! "பிடிபட்டால் - - - - " எனும் வரிதான்! மிகவும் மகிழ்ச்சியான முகத்தைக் காட்டியபடி இருவிரல் சின்னம் நீட்டியபடி தலையை நிமிர்த்தபடி, அடிவருடிகள் சூழ்ந்தபடி, வழக்கறிஞர் குழாம் வால்பற்றியபடி, தொண்டர் கூட்டம் வாழ்த்தியபடி அல்லவா ஏதோ விடுதலைப் போராளி சிறைக்குப் போவது போலச் சென்று விடுகிறார்கள்! மாவீரன் பகத்சிங் கூட அவ்வளவு பெருமிதத்துடன் செல்ல மாட்ட்டான்!
"மன நலம் ஆகாவாம் கீழ்" நறுக்குத் தறித்தாற் போன்ற சொற்கள்!

மிக்க நன்றி! வணக்கம்!

வணக்கம், திரு. பழனிராஜன் அவர்களே!

எனது இதற்கு முந்தைய பதில் பதிவு, இவ்வாறே எந்த வித உண்ணோக்கமும் இல்லாமல் சாதாரணமாக எழுதியதுதான்.

பலருடைய எழுத்துக்களிலும் நான் சுட்டிய பிழைகள் நிறைய இருப்பதால் அவற்றைச் சுட்டிக் காட்டலாமே என்று எழுதியதுதான். உங்களுடை தமிழ் அநுவபத்தையும் ஆழத்தையும் உங்களுடைய பல ஆக்கங்களிலும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
அப்படி இருக்க, எனது விமரிசனம் உங்களுக்கு வருத்தமளித்தது மிகவும் எனக்கு உறுத்துகிறது.

உங்களுடைய எழுத்தைக் கடந்த பல வருடங்களாகப் படித்து வருகிறேன்.
எனது மாணவர்களுக்கு உங்களுடைய பல பதிவுகளை அவற்றின் பொருள் ஆழத்திற்காக மேற்கோள்களாகத் தந்திருக்கிறேன். இந்தக் குறளைப் படிக்கும் போது அதன் பிழைகள் சட்டென்று கண்ணில் பட்டதால் வெளிப்படையாக எடுத்துக் காட்டி எழுதினேன்.
அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன்.
தமிழில் தட்டச்சுச் செய்யும் போது ஆங்கிலத்தில் போலில்லாது, பல எழுத்துக்களுக்குத் ஒன்றிற்கு மேற்பட்ட விசைகளை அழுத்துவதால் பலருக்கும் அவரது எழுத்தில் பிழைகள் விழுந்து விடுவதை நான் நன்கு அறிவேன்.
ஒருவேளை அது நீங்கள் தொடுதிரைக் கைப் பேசியில் தொட்டச்சுவதால் விழுந்திருக்கும் எனும் எண்ணத்தில் அவற்றைச் சரிசெய்ய அந்த மென்பொருள் உதவுமே என்று சொன்னேன்.
அவ்வளவுதானே ஒழிய உங்கள் எழுத்தில் குறை காணும் நோக்கம் எனக்கு அணுவளவும் இல்லை.
நான், "ஒருவருடைய எழுத்தாக்கம், அவருடைய குழந்தை. அதைத் மாற்றி அமைக்க மற்றவர்க்கு உரிமை இல்லை" எனும் கொள்கை உடையவன்.

உங்களுக்குத் துளியும் பிடிக்காத ஒன்றை எழுத நேர்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். மிக்க நன்றி!
வணக்கம்!

உங்களுடைய உடனடியான பதிலிற்கு மிக்க நன்றி! வணக்கம்.

பாராட்டுக்கள், திரு. பழனி ராஜன் அவர்களே!
நீங்கள் எழுதிய குறட்பா மிகவும் சரியானது என்பதையும் அதன் அமைப்பும் மிகச் சரியானது என்பதையும் உங்களுடைய விளக்கத்தால் மிக நனறாகப் புரிந்து கொண்டேன். புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி, அண்ணன்!!

"ஓலி பெயர்ப்புச் செய்து தரும்" என்பதில் அந்த "ச்" என்பது "பெயர்ப்பு + செய்து" எனும் சொற்கள் புணரவதால் இட வேண்டிய "மிகு ஒற்று" (சந்தி ஒற்று).அது இல்லவிட்டால் அது "சந்திப் பிழை"
நான் படித்து அறிந்தது இப்படித்தான் அண்ணன்!

முதல் வரியிலேயே குறளின் பொருளைப் பற்றிப் பாராட்டியிருக்கிறேன். தவறுகளைச் சுட்டினால் அவற்றை ஏற்றுக் கொண்டு சரி செய்ய வேண்டும் அண்ணன்!
மிக்க நன்றி வணக்கம்.

உங்களுக்குப் பிடிக்காத அந்த விமர்சனக் குறிப்பை விரைவில் நீக்கி விட முயற்சி செய்கிறேன்.
அப்புறம், நான் உங்களுடைய தம்பி எனும் அழைப்பிற்கான வயதைச் சுமார் ஐமபது ஆண்டுகளுக்கு முன்பே கடந்தாயிற்று!
.

மனமார்ந்த பாராட்டுக்கள், திரு. வ. க. கன்னியப்பன்!
"சால்பினைச் சால்பறுக்குமாறு!" பழமொழி நானூற்றுப் பாடலிற்குப் பொருளுரை, மிகவும் நன்றாக உள்ளது!
"விரனாணை வேலெய்யும் விழிவில்லார் அறுப்பதுவேன்?
வைரத்தை வைரமறுக் கும்!"
நான் இதை விளக்கிக் கொண்டமை சரியா?

பாராட்டுக்கள், திரு. பழனி ராஜா!
நீங்கள் எடுத்துக் கொண்டபொருள் மிகவும் அருமையானதுதான்! ஆனால் இத்தனை சந்திப் பிழைகள், எழுத்துப் பிழைகள், நிறுத்தற்குறிப் பிழைகள் விரவி இருக்கும் போது சொல்லிற்குச் சொல் தொடர்பில்லாதிருப்பதால் படிக்கவே முடியவில்லை.

"உரைநடையெல்லாம் கவிதையா சொல்லு. இலக்கணம் யில்லாததை கவிதையென்று
எப்படி சொல்வது." - - - இது எதற்கு இங்கிருக்கிறது? நீங்களேதான் விளக்கம் தர வேண்டும்.

அப்புறம்,
"சுரைவேண்டும் சுரை விதையல்லவா விதைக்க வேணடும். அவரை விதையால் விதைக்க
சுரைக்காய் காய்க்குமா சொல். இரண்டும் வேறு வேறு புரியாதா உனக்கு."
இது,

"சுரை வேண்டுமானால் சுரை விதையையல்லவா விதைக்க வேண்டும்?
அவரை விதைகளை விதைத்தால் சுரை காய்க்குமா சொல்!
இரண்டும் வேறு வேறு என்பது புரியாதா உனக்கு?" என்றல்லவா அமைந்திருக்க வேண்டும்?

ஆது சரி, தமிழில் தட்டச்சுச் செய்வதற்கு எந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள்?
இதோ, இங்கு நான் தட்டச்சுச் செய்திருப்பதன் அமைப்பைப் பாருங்கள். இது "அழகி +" எனும் இந்திய மொழிகள் ஒலிபெயர்ப்பு மென்பொருள்". நீங்கள் தங்கிலீசில் (தமிங்கிலீசில்) கணினி விசைப் பலகையில் தட்டச்சினால், அல்லது தொடுதிரைக் கைப் பேசியில் தொட்டச்சினால் இந்தச் செயலி, அழகான நல்ல தமீழில் ஒலிபெரய்ப்புச் செய்து தரும்.கூகுள் ஒலிபெயர்ப்பி. (கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட்டர்) இல் செய்வதைப் போலக் கீழிறங்கு சொற் பட்டியல் வழியாகத் தொட்டச்ச வேண்டியதில்லை. மிகவும் வேகமாகத் தொட்டச்சலாம்!

பாரட்டுக்கள், திரு. வ.க. கன்னியப்பன்!
"பழமொழி நானூறு" பாடலினைக் கையாண்டு பொருளுரை தந்தமைக்கு மிக்க நன்றி!
பழந்தமிழ் இலக்கியங்களையும் வாழ்வியல் நூல்களையும் கையாள்வோர் அருகி வரும் இந்நாளில் அவற்றில் பொதிந்துள்ள அருங்கருத்துக்களை இதைப் போல விளக்குவது நமக்கு அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பேருதவி ஆகும்!
ஆனால், இந்தப் பழமொழிப் பாடலின் கருத்து இக்காலத்திற்கும் துளி பிறழாது பொருந்துவ்தைப் பாருங்கள்! கடலதனின் உவர்நீர் நதிநீரின் நன்னீரைத் தன் வயப் படுத்துவதைப் போலவே இளைய தலைமுறைக்கு பாரம்பரியப் பண்பாடுகளைப் புகட்ட வேண்டிய மூத்த தலைமுறை, அந்த முயற்சிகளால் தாமும் தம்மியல் மாறி, அவரியல்பினராகி இலக்கியங்களை மறந்து விட்டார்கள்!
மிக்க நன்றி!

வணக்கம், திரு.வ.க.கன்னியப்பன்! எனது கவிதையை உண்ர்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி!
பாவகையைச் சுட்டிக் காட்டி நீங்கள் பதில் எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது!
"ஆரம்" வடமொழிச் சொல்லாகிய "ஹாரம்" என்பதன் தமிழ் வடிவம் ஆதலால் அதை விலக்கப் பார்த்தேன். என்றாலும், "தேவாரம்" என் துணைக்கு இருப்பதால் "ஆரம்" இப் பாவின் கழுத்தில் இருந்து திகழலாம் என்று அமைத்தேன். மிக்க நன்றி, வணக்கம்!

மிக்க நன்றி, திரு. கவின்சாரலன்!
இந்த ஓவியம் சுட்டியால் வரையப் படும்போது, ஒரே தொடர்க் கோட்டால் வரையப் படவேண்டும் எனும் விதியுடன் துவக்கப் பட்டது. ஆனால் சுட்டி, தன் இயக்கக் குறைகளால் ஆங்காங்கே மிகவும் மெல்லிய கோடுகளைச் செருகி விட்டது. அவை, அச்சில் வரவில்லை.
மிக்க நன்றி, வணக்கம்!

பாராட்டுக்கள் திரு. மெய்யன் நடராஜ்!
"ஊன்றி எழுந்தே உயர்" எனும் தலைப்பில் உங்களால் தொடுக்கப் பட்டுள்ள பாவாரம்-வெண் பாவாரம், மிகவும் நன்றாகத் தொடுக்கப் பட்டுள்ளது!
தொடுக்கப் படாத உதிர் மலர்க்குவை போன்ற புதுக் கவிதைக் கூட்டத்தில், யாப்பிலக்கணப்படி உள்ள மெய்க் கவிதையைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
"அழகுதமிழ்க் கவிதையொரு ஆழ்பொருளும் கவிநயமும்
அகவழகும் மொழியழகும் ஆரமென அமைந்திங்கு
பழகிவர மனமகிழ்வில் பாலாகப் பொங்கிவிழ
வழங்குகிறே னும்கரத்தில் வண்டமிழில் பாராட்டு!"

மிக்க நன்றி!
வணக்கம்!
சந்திர மௌலீஸ்வரன் மகி - - "செல்வப் ப்ரியா".

திரு,மெய்யன் நடராஜ், மனமார்ந்த பாராட்டுக்கள்! மிகவும் பொருட்செறிவுடம் அமைத்துள்ளீர்கள் இந்தச் சிந்து கவியை! மிகவும் அருனையான பொருள் நடையும், சொல் நடியயும் கொண்டு விளங்குகிறது பாடல்!
"--- கதிருடனே எழுவதுவே
கதிரவனின் காட்சி – அது
காலைவர சாட்சி – அதில்
கலைநயங்கள் ஆட்சி – தினம்
காண்பதற்கு நீயெழுந்து
கைதொழுவாய் மீட்சி!
----- ஆகா! நல்ல ஆளுமை உடைய கருத்துக்கள் தேடி வந்து பொருந்தி அமைந்துள்ளன!

மிக்க நன்றி, திரு.முத்துவேழப்பன்! எனது கருத்துக் கொள்கைகளும் இவையேதான்!
உள்ளக் கருத்துக்களை நேரடியாகத் தெரிவிக்கிறீர்கள்.

ஆனால் நான் எதிர்மறைக் குறைகளை அவ்வளாவாக முன்னெடுத்துக் காட்டுவதில்லை! தேவைப் படும் இடங்களில் மட்டும் சிறிதளவாகப் பின்னெடுத்துக் காட்டுவேன். நேர்மறைக் கருத்துக்கள், அகல் விளக்கின் ஒளி. எதிர் மறைக் கருத்துக்கள் அதைச் சுற்றிலும் பரந்து, சுடர் இருப்பதால் சற்று விலகி நின்று, ஆனால் எக்கணமும் அதன் மீது கவிந்து விழுங்கக் காத்திருக்கும் இருள்.
ஒளியை முன்னெடுத்து அதிகப் படுத்துவோமே!
மிக்க நன்றி! வணக்கம்!
செல்வப் ப்ரியா-சந்திர மௌலீஸ்வரன் மகி
30ஜூலை2021

நண்பர் திரு.அ.முத்துவேழப்பன், உங்களுடைய பாடலின் கருத்து மிகவும் நன்றாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுக்கள்!

அதுசரி, ஆனால் பாடல் முழுவதும் விரவிக் கிடக்கும் வெறுப்பும் சோகமும் கசப்பும் சுயபரிதாபமும் இந்த அளவிற்கு இருக்கக் காரணம் என்ன? வாழ்வில் இவ்வளவிற்கு அல்லல் பட்டிருக்கிறீர்களா என்ன? உலகின் அறுநூற்றைம்பது கோடிகளுக்கும் மேற்பட்ட மக்களில், இதில் குறிப்பிடப் பட்ட "மாக்கள் கூட்டம்" நீங்கலாக "நல்ல மக்கள் கூட்டம்" இல்லவே இல்லையா என்ன?
பாடலின் இறுதிப் பத்திகள் நான்கு மட்டும்தான் கொஞ்சம் நம்பிக்கையை ஊட்டுகின்றன!!

இதைப் படித்துப் பாருங்களேன் - -
கடல் நீரில் இருந்தாலும் உப்பால் மீன் சாவதில்லை !

உடல் நோகும் அளவிற்கு உப்புக்கள் கரிந்திருக்கும் - ஆழிக்
கடல் நீரில் இருந்தாலும் உப்பால்மீன் சாவதில்லை !!
இடர் யாவும் நிறைந்திருக்கும் இவ்வுலக வாழ்க்கையிது - பாசச்,
சுடர் வீசும் மனமிருக்கும் மனிதருக்குச் சோர்வுமில்லை !!
வரும் யாவும் வரவேற்றும் வழியேகும் முறையறிந்தும் - இங்கு,
வாழ்வு பெறும் மனிதருக்கு வாழ்வென்றும் கசப்பதில்லை !!
-------------- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி,


சந்திர மௌலீஸ்வரன்-மகி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே